ரத்தன் டாட்டாவை கவர்ந்த கோவை நிறுவனம் 'ஆம்பியர் எலெக்ட்ரிக்'

0

அரசின் சரியான ஆதரவும், சாதகமான சுற்றுச்சூழலும் இருந்தால், இந்தியாவில் மின்சார ஊர்திகள் துறை அதிவேகமான வளர்ச்சி அடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. சிறியதொரு சறுக்கலுக்கு பிறகு, 2020 ல் இந்திய சாலைகளில் 7 மில்லியன் மின்சார ஊர்திகள் மற்றும் கலப்பு ஊர்திகள் ஓட வேண்டும் என்ற அரசின் அறிவிப்பு மற்றும் ஆசையை தொடர்ந்து, இத்துறைக்கு சிறியதொரு நம்பிக்கை மீண்டும் பிறந்துள்ளது.

இத்துறை தனக்கென ஒரு அடையாளத்தை பெற சிரமப்படும் இவ்வேளையிலும், இரண்டு நிறுவனங்கள், இத்துறையில் அவர்களுக்கு என ஒரு இடத்தை பெற்றுள்ளனர். வளர்ந்து வரும் மின்சார ஊர்திகள் துறையில், புதுமையான தொழில்நுட்பங்களை உருவாக்கும் திறன்பெற்று இந்தியாவில் முக்கிய இடத்தில் இன்று "ஆம்பியர் எலெக்ட்ரிக்"(Ampere Electric) நிறுவனம் உள்ளது. இ-சைக்கிள், இ-ஸ்கூட்டர், இ-ட்ராலிஸ் (பாரம் சுமக்க) முதல், கழிவுகளை கையாளுவதற்கு என தனியாக உருவாக்கப்பட்ட ஊர்திகள், மாற்று திறனாளிகளுக்கான விசேஷ ஊர்தி வரை, இவர்கள் தயாரிப்பு பல வகைப்படுகின்றது.

இந்த நிறுவனத்தை துவங்கும் எண்ணம், ஜப்பானில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு, தனது கணவரோடு, திருமதி.ஹேமலதா அண்ணாமலை சென்றபோது, அவரின் மனதில் உதித்துள்ளது. அங்கு பேசிய பேச்சாளர்களில் ஒருவர், ஐ சி இ களின்,(இன்டெர்னல் கம்பசன் இன்ஜின்) காலம் முடிந்து விட்டது, இனி மின்சார ஊர்திகள் எதிர்காலத்தில் அதிக தாக்கத்தை உருவாக்கும் என மிக உறுதியாக கூற, இவர் மனதில் அந்த பேச்சு ஒரு விதையாக விழுந்து இன்று "ஆம்பியர் எலெக்ட்ரிக்" என்ற மரமாக வளர்ந்து நிற்கின்றது.

2007 ஆம் ஆண்டு, 5 கோடி முதலீட்டில், திருமதி.ஹேமலதா அண்ணாமலை அவர்கள் துவக்கிய ஆம்பியர் எலெக்ட்ரிக் நிறுவனம், இன்று, வெளி முதலீட்டாளர்களையும் ஈர்த்துள்ளது. உற்பத்தி துறையில் எந்த முன்அனுபவமும் இல்லாது, இதை சாத்தியமாக்குவது, திருமதி.ஹேமலதாவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது.

திருமதி.ஹேமலதா அண்ணாமலை
திருமதி.ஹேமலதா அண்ணாமலை

ஹேமலதா கூறுவது...

"இத்துறையின், நுணுக்கங்களை மற்றும் சூட்சமங்களை கற்றுக்கொள்ளும் ஆர்வம் எங்கள் அணியிடம் இருந்தது, இருகின்றது. தொடக்கத்தில் நிறைய தவறுகள், தோல்விகள் இருந்தாலும், அவற்றை படிக்கற்களாக மாற்றி, எதிர்கொண்ட சவால்களை வெற்றி கொண்டோம். அதன் காரணமாகவே, இன்று இந்நிலையில் உள்ளோம். மேலும், சரியான திறன்படைத்தவர்களை வேலையில் அமர்த்துவதும், அவர்களை ஒருங்கிணைத்து, ஓர் அணியாக செயல் பட வைப்பதும், நாங்கள் சந்தித்த மற்ற சவால்கள்" என்கிறார்.

தொழில்முனையும் பழக்கம்

தனது 27ஆவது வயதில் தொழில்முனைவராக உருவெடுத்தார், திருமதி.ஹேமலதா. முதலில் அவர் கவனம் செலுத்தியது, தொழில்முறை சேவை, தொழில்நுட்பப்பயிற்சி, சுற்றுலா, ஆகிய துறைகளில். கடந்த 15 ஆண்டுகளாக, புதிய தொழில்களை உருவாக்கியும், வழி நடத்தியும் வந்துள்ளார் அவர். தொழில்முனைவதில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சவால்களை உள்ளடக்கி உள்ளதால், அந்த அனுபவம் ஈடற்றது என்கிறார் இவர்.

ராயல் மெல்போர்ன் இன்ஸ்டிடூட்டில் (ஆஸ்திரேலியா) எம்.பி.ஏ பட்டமும், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் கம்பியுட்டர் சயின்ஸ் பட்டமும் அவர் பெற்றுள்ளார்.

மூலதனம்

சமிபத்தில், திரு.ரத்தன்டாட்டா அவர்கள் வெளியிடப்படாத ஒரு தொகையை இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த முதலீட்டை கொண்டு, தங்களுக்கு தேவையான, மின்கலன், மோட்டார், மின்னேற்றி, கட்டுபடுத்தி ஆகியவற்றை தாங்களே உற்பத்தி செய்ய, இந்நிறுவனம் முடிவுசெய்துள்ளது.

ஹேமலதா மேலும் கூறுகையில்...

" எங்கள் இ-ஸ்கூட்டர் மற்றும் இ-சைக்கிள்களுக்கு தேவையான 48V மற்றும் 36V மின்னேற்றிகளை எங்கள் நிறுவனமே உருவாக்கியுள்ளது. இது மேலும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், ஆம்பியர் எலெக்ட்ரிக் நிறுவனத்தை, இந்திய தொழில்களுக்கு தேவையான மின்சார மாற்று ஊர்திகளை உருவாக்கும் ஒரு நிறுவனமாகவும் உருவாக்க உதவும்.

பிடுசி B2C பிரிவில், முதன்மை தயாரிப்புகளாக, மின்சார சைக்கிள்கள் மற்றும் மின்சார இருசக்கர வாகனங்கள் உள்ளன. பிடுபி B2B பிரிவில், இந்நிறுவனம், கூரியர் வழங்குவதற்கும், வீட்டு வாசலில் பொருட்களை வழங்குவதற்கு பயன்படும் ஊர்திகளை உற்பத்தி செய்கின்றது”.

e-cycle
e-cycle

உற்பத்தி செயல்முறை

ஆராய்ச்சி என்பது ஆம்பியர் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதுகெலும்பாக இருக்கின்றது. அதன் காரணமாக, இந்தியாவில், மின்சார ஊர்திகளுக்கு, சுயமாக, மின்னேற்றிகளை (36V மற்றும் 48V) உருவாக்கிய முதல் நிறுவனமாக ஆம்பியர் எலெக்ட்ரிக் திகழ்கின்றது. இந்தியாவில் இத்துறையில் மின்னேற்றிகள் தான் மிகப்பெரிய சவால். இறக்குமதி செய்யப்பட்ட, மின்னேற்றிகளால், இந்திய சாலைகளுக்கும், ஒழுங்கற்ற மின்சார இணைப்பிற்கும் ஈடுகொடுக்க முடிவதில்லை என அவர் கூறுகிறார்.

எங்கள் ஆராய்ச்சி குழு உருவாக்கிய மோட்டார் மற்றும் கட்டுபடுத்திகள் மூலம் தான் ஆம்பியர் எலெக்ட்ரிக்கில் அனைத்து ஊர்திகளும் இயங்குகின்றன. மேலும், மின்கலன்களின் ஆயுட்காலத்தை கூட்ட, ஒரு மின்கலன் சிப்பையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

நிறுவனத்தின் வருமானத்தில் பெரும்பகுதியை, ஆராய்ச்சிக்காகவும், முக்கியமாக, தாங்கள் உபயோகிக்கும் மின்கலன் போன்ற பொருட்களை தயாரிப்பதிலும் செலவிடுவதாகவும், மேலும் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிவதில் 20% ஆராய்ச்சி பணியாளர்கள் என்றும் ஹேமலதா பெருமிதத்துடன் கூறினார்.

எங்களுக்கு தேவையான மூல பொருட்களை, இந்தியாவிலேயே கொள்முதல் செய்கின்றோம். ஆனால் மின்கலன்களுக்கு தேவைப்படும், ஈயம் மற்றும் மோட்டார்களுக்கு தேவைப்படும் காந்தம் உள்ளிட்டவை இங்கு கிடைப்பதில்லை. எனவே அவற்றை சீனாவில் இருந்து இறக்குமதி செய்கின்றோம். அவற்றுக்கு மாற்றாக என்ன பயன்படுத்த முடியும் என்பதையும், ஆராய்ந்து வருகின்றோம். வருடத்திற்கு சுமார் 30,000 வாகனங்களை நாங்கள் தயாரிக்கின்றோம்.

புதிய வாய்ப்புகளை கண்டறிதல்

தேவையான பொருட்களை சுயமாக, சந்தை நிலைக்கு ஏற்ப தயார் செய்வதற்கு அரசு ஊக்கம் அளிப்பதால், இத்துறையில் வளர்ச்சிக்கான வாய்ப்பு அதிகம்.

"எங்களால் இயன்ற அளவு, 100% நம் நாட்டில் கிடைத்த பொருட்களை வைத்து ஒரு வாகனத்தை தயாரித்து இத்துறையின் எதிர்கால வளர்ச்சியில் பங்காற்றி உள்ளோம். அதிக எண்ணிக்கையில் மக்கள் மின்சார ஊர்திக்கு மாறுவதற்காக, அவர்களுக்கு ஊக்கதொகை வழங்க, அரசு ஆர்வம் காட்டி வருகின்றது. அதோடு நில்லாமல், இது பற்றிய விழிப்புணர்வு வளரவும் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது" என்கிறார்.

மேலும், இத்துறை வளர, சில விஷயங்களை ஹேமலதா சுட்டிக்காட்டினார்.

1. மின்சார ஊர்திகளுக்கான வரிகளான CST/VAT/LBT போன்றவற்றை அனைத்து மாநிலங்களிலும் விரைவாக அமல்படுத்துவது,

2.மின்கலனில் மின்னேற்றுவதர்க்கு தேவையான வசதிகளை பெருக்குவது,

3. நல்ல நிலையில் உள்ள சாலைகள், முடிந்த வரையில் சைக்கிள்களுக்கு என தனி பாதை,

4. மின்சார ஊர்தி பயன்படுத்தும் குடும்பத்திற்கு, வருமான வரியில் சலுகை,

இவ்வாறு அமல்படுத்தபட்டால், அதிக எண்ணிகையில் நிறுவனங்களும், மக்களும் இத்துறை நோக்கி வருவார்கள் என அவர் கருதுகிறார்.

கிராமப்புறங்களில் வளர்ச்சி

கிராமப்புற பகுதிகளில் மாற்றங்கள் கொண்டு வருவதில், தொடக்கம் முதல் ஆம்பியர் எலெக்ட்ரிக் நிறுவனம் கவனம் செலுத்தி வருகின்றது. முக்கியமாக, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள மாற்றுதிறனாளிகளுக்காக,விசேஷ வாகனங்களை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

பஞ்சு மற்றும் நூற்பாலைகளில் கிராமப்புறங்களை சார்ந்த, 20 முதல் 40 வயது வரை உள்ள பெண்கள், 12 முதல் 15 கிலோமீட்டர் நடந்து சென்று உழைக்க வேண்டியுள்ளது. எனவே, அவர்களுக்கு என விசேஷமாக, திரிசூல் (Trisul) என்ற வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். எங்கள் ஆலையிலும், 30% பெண்கள் உள்ளனர். இது மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விலை நிர்ணையிக்கும் வழிமுறை

சந்தை நிலவரமும், மின்சார ஊர்திகள் மக்களுக்கு ஏற்ற விலையில் இருந்தால் தான் அதற்கு மாற அவர்கள் முயற்சிப்பார்கள் என்ற எண்ணமும், இங்கு விலை நிர்ணையிப்பின் போது பெரும் பங்காற்றுகின்றன. 20,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை இ-சைக்கிள்களும், 20,000 ரூபாய் முதல் 45000 ரூபாய் வரை இ-ஸ்கூட்டர்களும் விற்கப்படுகின்றன.

மேலும் அவர் கூறுகையில், அரசு அதன் குறிக்கோளை எட்டுவதில், ஆம்பியர் எலெக்ட்ரிக்கின் பங்கு அதிமுக்கியமானதாக இருக்கும். அரசு கூறியுள்ள 7 மில்லியன் வாகனங்களில், 15% முதல் 20 % வரை தயாரித்து கொடுக்க நாங்கள் குறிக்கோள் வைத்துள்ளோம். சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், அரசின் "மேக் இன் இந்தியா" திட்டத்திற்கு உதவவும், உங்கள் குறைவான தூர பயணத்திற்கு, இ-பைக்குகளை உபயோகிக்க, நாங்கள் வேண்டுகிறோம்.

விரிவாக்க திட்டம்

முன்னர் ஆம்பியர் எலெக்ட்ரிக் நிறுவனம், ஒரு மாதத்திற்கு 200 வாகனங்களை விற்று வந்தது. அரசின் குறுகிய கால மானியம் 2010-12 ல் இ-ஸ்கூட்டர்களுக்கு கிடைக்க ஆரம்பித்த பின்பு, அது 687 ஆனது என்கிறார் பூரிப்புடன்.

இந்த வளர்ச்சியை மேலும் வலுபடுத்த, தற்போதைய 3 மாநிலங்கள் மட்டுமல்லாது மேலும் 7 மாநிலங்களில் விரிவாக்க திட்டங்களை இந்நிறுவனம் வகுத்துள்ளது. மேலும் வாகனங்களில் 2 புதிய மாடல்களையும் அறிமுகபடுத்த உள்ளது. அடுத்த 3 வருடங்களில், முற்றிலும், பெண்களால் இயக்கப்படும் ஒரு இ-சைக்கிள் ஆலை திறக்கும் திட்டமும் உள்ளது.

அவர் மேலும் கூறுகையில், இந்திய அரசு, "மேக் இன் இந்தியா" திட்டத்தை பற்றி பேசுவதோடு மட்டுமில்லாமல், MSME உற்பத்தி துறையில், சில நிறுவனங்களை தேர்ந்தெடுத்து, அந்த திட்டத்தை வெற்றிகரமாக எப்படி செயல்படுத்துவது என்பதையும் விளக்கக் வேண்டும். இது எளிதல்ல, ஆனால் "மனமிருந்தால், மார்க்கம் உண்டு" என்கிறார் ஹேமலதா தீர்கமாக.

Story teller who loves to talk more and now write a little bit :D

Stories by Gowtham Dhavamani