தொழில்முனைவை கற்பிக்க வேண்டும்...

0

புதிதாக நிறுவனம் துவங்குவதென்பது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதேபோல் இந்த புதுமுக நிறுவனங்கள் பலவிதமான பாடங்களை நமக்கு வழங்கி இருக்கிறது. தொழில் துவங்குதல் என்பது ‘ஜீனிலேயே இருக்கும் ஒன்று’ என்ற கருத்தாக்கங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது ஏன் என்று விளக்குகிறேன்.

இப்போது பாதுகாப்பாக இருக்கும் ஒரு வேலையை விட்டுவிட்டு, தொழில் தொடங்கு என்று ஒருவருக்கு கற்பிப்பது சரியல்ல. அதற்கு பதிலாக தொழிலை எப்படி சமாளிப்பது, அதைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வது எவ்வாறு, அதனால் ஏற்படும் சிக்கலை கையாள்வது எப்படி, அடுத்தக்கட்ட செயல்பாட்டை நோக்கி நகர்வது என்று பலவற்றை பற்றி கற்பிக்க வேண்டியது தற்போது அவசியமாகிறது. குறிப்பாக ஒரு சவாலை எப்படி சந்திப்பது என்று முதலில் சொல்லித்தரப்பட வேண்டும். சவாலை கையாளும் திறமை ஒவ்வொருவருக்கும் மாறக்கூடியது. ஒரு தொழிலை நடத்துவதில் இருக்கும் ஆபத்து பற்றி தெரியாமல் அதில் காலைவிடுவது முட்டாள்தனம். முழுமையான ஆய்வு செய்த பிறகே களத்தில் இறங்க வேண்டும். அதுவே சரியான ஒன்றாகும். இவற்றைப் பற்றியெல்லாம் நிச்சயமாக கற்றுத்தர முடியும்.

பட உதவி :  https://www.flickr.com/photos/mariannebevis/
பட உதவி :  https://www.flickr.com/photos/mariannebevis/

ஒருவர், நிறுவனம் துவங்குவதற்கு முன்னால் சிலவிஷயங்களை மனதில்கொள்ள வேண்டும். ஒரு சிறந்த ஐடியாவின் அடிப்படையில் நிறுவனம் துவங்குவது என்பது நல்ல விஷயம் தான். ஆனால் ஒரு தெளிவான பார்வையில்லாவிட்டால் அது வெறுமனே ஒரு ஐடியாவாக மட்டுமே இருந்துவிடும். தொழில்முனைவு பற்றிய முறைபடுத்தப்பட்ட கல்வியின் மூலமாக சரியான வாய்ப்பை ஒருவர் கண்டுபிடிக்க முடியும், அதில் இருக்கக்கூடிய பிரச்சினையை புரிந்துகொள்ளவும், அதற்கான தீர்வை தயாரிக்கவும் இதன்மூலம் முடியும். இதைத் தொடர்ச்சியாக செய்யும்பொழுது அதற்கென்று ஒரு மதிப்பு உருவாகிவிடும். தற்போது என்னைச் சுற்றி இருக்கும் புதுமுக நிறுவனங்களைப் பார்க்கும்போது, அவர்கள் பல அத்தியாவசியமான கூறுகளில் கவனம் செலுத்தாதது வெளிப்படையாகத் தெரிகிறது. ஒரு தயாரிப்பின் உருவாக்கம், குழுவைக் கட்டமைத்தல், நிதிதிரட்டுதல் மற்றும் சந்தைக்கு ஒரு பொருளை எடுத்து செல்வதற்கு முன் செய்யவேண்டிய சட்டரீதியான வேலைகள் போன்ற பலவற்றை அவர்கள் கவனிக்கத் தவறி விடுகிறார்கள். இந்த அடிப்படையான செயல்பாடுகளை கவனிக்கத் தவறுவது தங்களின் நீண்டகால வளர்ச்சியை பாதிக்கும் என்பதுகூட புரியாமல் இருக்கிறார்கள்.

தொழில்முனைவு பயிற்சி என்பது உங்களின் இலக்கை வரையறுக்கவும் அது பற்றிய தெளிவான பார்வையை வழங்கவும் உதவும். இவையெல்லாம் எந்த ஒரு நிறுவனமும் நீண்டகால அடிப்படையில் இயங்க அவசியமானவை. ஒரு தொழில்முனைவோராக நீங்கள் உங்கள் இலக்கை நிர்ணயிக்கத் தவறி விட்டீர்கள் என்றால் நீங்கள் வேலைக்கு எடுக்கப்போகும் நபரிடம் உங்கள் எதிர்பார்ப்பு மற்றும் தேவை குறித்து தெளிவாக கூற முடியாது. இது ஒரு பேரழிவுக்கே வித்திடும்.

ஆனால் புதிதாக தொழில்துவங்குகிற ஒருவரிடம் இவையெல்லாவற்றையும் எதிர்பார்ப்பது சரியல்ல. இப்போது புதுநிறுவனங்களாக இருக்கும் நிறுவனங்களெல்லாம் அடுத்த பத்து ஆண்டுகளில் மிகப்பெரிய நிறுவனங்களாக மாறும்போதே இந்தியாவின் தொழில்முனைவுக் கனவு நனவாகும். இப்போதிருக்கும் ஊடகங்கள் எல்லாம் வெற்றிகரமான நிறுவனர்களையும் அவர்களது கதைகளையும் மட்டுமே கவனிக்கிறார்கள். இதன்மூலம் தொழில்துவங்கும் நம்பிக்கையை விதைக்கிறார்கள். எனவே இதைப் பார்க்கும் ஒருவரை இது குழப்புகிறது. இந்த கதைகளையெல்லாம் கேட்கும்போது வெற்றி என்பதை எளிதான ஒரு பாதையின் மூலம் அடைந்துவிட முடியும் என்று எல்லோரும் நினைத்துவிடுகிறார்கள். ஆனால் இவையெல்லாம் உண்மையல்ல.

ஒரு நீடித்த தொழில்முனைவோர் கூட்டத்தை உருவாக்க வேண்டுமென்றால் கணக்கிலடங்காத நிறுவனங்கள் சந்தித்த தோல்விகளையும் அந்த தோல்வி ஏன் ஏற்பட்டது என்பதைப் பற்றிய ஒரு பார்வையையும் முன்வைக்க வேண்டும். புதிதாக தொழில் துவங்கி நடத்துகிறவர்கள் தங்கள் எல்லா சந்தேகங்களையும் சரிசெய்து கொள்ளக்கூடிய வகையில், தெளிவான பார்வையை வழங்கும் ஒரு தளத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் பல பிரச்சினைகளை சந்தித்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு கற்றுக்கொள்வதற்கும் வளர்வதற்கும் உதவக்கூடிய ஒரு வலைப்பின்னல் அமைப்பு தேவை. மற்றவர்கள் எப்படி தோற்றார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவர் தோற்றதாலேயே அந்த பாதை அதோடு நின்றுவிட்டது என்று அர்த்தமல்ல என்பதையும் அவர்கள் உணர வேண்டும்.

உதாரணமாக ஒரு பந்தயம் நடக்கிறது. எல்லோரும் ஒரு இடத்திலிருந்து ஓடத்துவங்குகிறார்கள். யாரோ ஒருவர் முதல் பரிசை பெறுகிறார். அவரைப் பற்றிய செய்தியைப் படிக்கிறோம். இது ஒருவகை. இன்னொரு வகை இருக்கிறது. ஓடுகிற ஒவ்வொருவரையும் எடுத்துக்கொண்டு ஒவ்வொருவரும் எப்படி ஓடினார்கள், ஏன் ஒருவர் மட்டும் ஜெயித்தார் மற்றவர்கள் எல்லோரும் பின் தங்கினார்கள் என்று ஆராய்ந்து பார்க்கிறோம். இரண்டில் எது நமக்கு படிப்பினையை வழங்கும்?

இன்றைய தொழில்முனைவோருக்கு சரியான வழிகாட்டுதல் தேவை. அவர்களுக்கென ஒரு இடம் தேவை. அந்த இடத்தில் அவர்கள் தங்கள் ஐடியாவை சோதிக்க முடிய வேண்டும். அவர்களுக்கென ஒரு வழிகாட்டி தேவை. அவர் அவர்களுக்கு பல்வேறு முடிவற்ற கேள்விகளை வழங்கக்கூடியவராக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஒரு ஆலோசகர் தேவை. அவர் அவர்களை யோசிக்க வைக்க வேண்டும். அவர்கள் தங்களைத் தாங்களே கேள்வி எழுப்பிக்கொள்ளச் செய்பவராக இருக்க வேண்டும். அதற்கு அவர்கள் தயங்கக்கூடாது. இவையெல்லாம் சரியான பயிற்சியின் மூலமே சாத்தியம். இந்திய தொழில்முனைவு என்பது தடுத்து நிறுத்தமுடியாத ஒன்றாக இருக்க வேண்டும்.

(இந்த பத்தியில் வரும் பார்வைகள் முழுக்க முழுக்க எழுத்தாளருடையது. இவை யுவர்ஸ்டோரியின் பார்வையல்ல)

ஆங்கிலத்தில் : ரோன்னி ஸ்க்ரூவாலா | தமிழில் : ஸ்வரா வைத்தீ