'இளம் தொழில் முனைவோர் கற்றுக்கொள்வதை நிறுத்த வேண்டாம்'- கே.எம்.மேமன் அறிவுரை

1

அங்கீகாரம் போல இளம் தொழில்முனைவோருக்கு ஊக்கம் தரக்கூடிய விஷயம் வேறில்லை. அந்த வகையில் முதல் தலைமுறை தொழில்முனைவோரில் சிறந்து விளங்குபவர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் வகையில் சிஐஐ (தெற்கு பிராந்தியம்) வருடாவருடம் வளரும் தொழில்முனைவோர்க்கு சிறப்பு விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு ஆறாவது முறையாக இளம் தொழில்முனைவோர் விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தேறியது. போளன்ட் இண்ட்ஸ்டிரிஸ் நிர்வாக இயக்குனர் ஸ்ரீகாந்த் போளா, ஏரோஸ்பேஸ் இஞ்ஜினியர்ஸ் சி.இ.ஓ ஆர்.சுந்தரம் மற்றும் ஹஃபா புட்ஸ் உரிமையாளர் ஹாஜா புன்யாமின் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. எம்.ஆர்.எப் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கே.எம்.மேமன் விருதுகளை வழங்கினார்.

2015 ம் ஆண்டுகான விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த வளரும் தொழில்முனைவோருக்கான விருது பெற்றவர்கள் பற்றிய விவரம் வருமாறு;

1. போளன்ட் இண்ட்ஸ்டிரிஸ் நிர்வாக இயக்குனர் ஸ்ரீகாந்த் போளா

பார்வை இல்லாத மாற்றுத்திறனாளியாக பிறந்த ஸ்ரீகாந்த, வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளையும், தடைகளையும் வெற்றிகரமாக கடந்து வந்து இன்று போளண்ட் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்நிறுவனம் போதிய கல்வி இல்லாத மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்தி, சுற்றுச்சூழலுக்கு பங்கம் விளைவிக்காத வகையில், நுகர்வோர் பேக்கேஜிங் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இவரது வெற்றிக்கதை தன்னம்பிக்கையின் அடையாளமாக இருக்கிறது. இவரைப்பற்றிய கட்டுரை: (மாற்றுத்திறனாளி அல்ல! உலகை மாற்றும் திறனாளி: ஸ்ரீகாந்த் போளா...!)

2. ஏரோஸ்பேஸ் இஞ்ஜினியர்ஸ்- சி.இ.ஓ ஆர்.சுந்தரம்

ஏரோஸ்பேஸ் நிறுவனம் விமானங்களுக்குத் தேவையான பாகங்களை வடிவமைத்து, துல்லியமான தரத்தில் உருவாக்கி, உற்பத்தி செய்து தருகிறது. அசெம்பிளி, சான்றிதழ், சப்ளை மற்றும் ஒருங்கிணைப்பு சேவைகளையும் அளித்து வருகிறது.

3. ஹஃபா புட்ஸ் உரிமையாளர் ஹாஜா ஃபுன்யாமின்

ஹஃபா புட்ஸ் உடனடியாக சமைத்து சாப்பிடக்கூடிய சமோசா, கட்லெட், வெஜ் ரோல் போன்ற உணவு வகைகளை பெரிய அளவில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. நட்சத்திர ஹோட்டல்களை வாடிக்கையாளர்களாக பெற்றிருப்பதுடன் ஏற்றுமதியிலும் ஈடுபட்டு வருகிறது. சாதரண பின்னணியில் வளர்ந்த ஹாஜா ஃபுன்யாமின் தனது கடின உழைப்பால் இன்று வெற்றி தொழில்முனைவராகியுள்ளார்.

முன்னணி தொழிலதிபரும், எம்.ஆர்.எப் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான கே.எம்.மேமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறந்த தொழில்முனைவோர்களுக்கு விருது வழங்கி பேசினார். அப்போது அவர்,

தொழில்முனைவோர் ஒரு போதும் தங்கள் மீது நம்பிக்கை கொள்வதை நிறுத்திக்கொள்ளக்கூடாது மற்றும் முயற்சியை கைவிடக்கூடாது என வலியுறுத்தினார்.

தனது தந்தை கே.எம்.மேமன் மாப்பிள்ளை பொம்மை பலூன்களை தயார் செய்யும் நிறுவனத்தை துவக்கியது பற்றி குறிப்பிட்டவர், இந்த தொழிலை வளர்த்தெடுத்து நாட்டின் மிகப்பெரிய டயர் தயாரிப்பு நிறுவனமாக எம்.ஆர்.எப்பை உருவாக்கியிருப்பதாக கூறினார். டன்லம் மற்றும் பயர்ஸ்டோன் போன்ற சர்வதேச நிறுவனங்களின் போட்டிக்கு மத்தியில் வளர்ச்சி பெற்றதையும் சுட்டிக்காட்டினார்.

இளம் தொழில்முனைவோர்கள் சிறிய அளவில் துவங்கி, மேலும் மேம்பட முயற்சிக்க வேண்டும் என்று கூறியவர், ஏற்கனவே உள்ள திறன்கள் மீது வளர்ச்சியை கட்டமைப்பதில் தவறில்லை என்று குறிப்பிட்டார்.

தொழிலில் ஈடுபடுவோர் ஒரு போதும் கற்றுக்கொள்வதை நிறுத்திக்கொள்ளக்கூடாது என்றும் ஆலோசனை வழங்கினார்.

இந்திய தொழில்துறையின் வருங்கால ஜாம்பவான்கள் என்று அவர் விருது பெறும் தொழில்முனைவோர்களுக்கு பாராட்டைத் தெரிவித்தார். சி.ஐ.ஐ- எஸ்.ஆர் வளரும் தொழில்முனைவோர் விருது 2015 பிஸ்னஸ் லைனுடன் இணைந்து வழங்கப்பட்டது. யுவர்ஸ்டோரி இந்த நிகழ்ச்சியின் ஆன்லைன் மீடியா பார்ட்னராக இருந்தது.