ஊரக இந்தியாவில் வாய் புற்றுநோயை ஒழிக்கப் புறப்பட்ட பாசமலர்கள்!

0

டாக்டர் ப்ரீத்தி அடில் சந்திரகர், தன் சகோதரரும் பொறியாளருமான பிரவீன் அடில் ஆகியோர் ஒரு புதுப்பிக்கப்பட்ட பழைய பெரிய வேனில் அவ்வப்போது பயணம் மேற்கொள்வார்கள். இது, ஆடம்பரமான உல்லாசப் பயணம் அல்ல; சத்தீஸ்கரில் உள்ள கிராமப்பகுதி மக்களின் பற்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் செல்லக்கூடிய சமூக நலப் பயணம்.

கிராமப்புறங்களில் நடமாடும் பல் மருத்துவமனையை நடத்தி வரும் இந்தப் பாசமலர்கள், வித்தியாசமான நோயாளிகளை எதிர்கொள்வதும் வழக்கம். குரங்குகளுடன் புழங்கும் நோமாட்ஸ் அல்லது மடாரிஸ் சமூக மக்கள் ரூ.20 கட்டணத்துக்காக போர்க்கொடு தூக்குவார்கள். பலரும் தங்கள் சிகிச்சைகள் முடிந்த பிறகு, மிகக் குறைந்த அந்தக் கட்டணத்துக்கு பதிலாக உணவுப் பொருட்களை வழங்குவதுண்டு.

தற்போதைய ஆய்வுகளின்படி, இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் வெறும் 1.5 சதவீத பல் மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள். எஞ்சிய 98.5 சதவீத பல் மருத்துவர்கள், நாட்டின் நான்கில் ஒரு பங்கு மக்களை மட்டுமே கவனித்துக் கொள்கிறார்கள். கிராமங்களில் பல் மருத்துவ முகாம்களை அரசு ஏற்பாடு செய்தாலும், அவை முழுமையானதாகவும் திருப்தி தருவதாகவும் இல்லை. அரசு முகாம்களில் களத்தில் சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை என்று கூறும் பிரவீண், "முகாம்களில் காட்டிய பிறகு, நீண்ட தூரம் பயணித்து மருத்துவமனைக்குச் செல்லும் கிராமப்புற நோயாளிகளை வெவ்வேறு மருத்துவர்களைப் பார்க்கிறார்கள். சிகிச்சை வசதிகள், மருத்துவ ஊழியர்கள், மருந்துகளின் பற்றாக்குறையால் நோயாளிகளுக்கு ஏமாற்றமும் அதிருப்தியுமே மிஞ்சுகிறது" என்கிறார்.

இந்த நிலையில்தான், கிராமப்புற மக்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் நோக்கத்துடன் "ஐடிஐதிர்கா" (Itidirkha) என்ற நடமாடும் பல் சிகிச்சை மையத்தை ஆரம்பித்தனர். ஆரம்ப காலத்தில் தங்களை விரோதிகள் போலவே நோயாளிகள் பார்த்ததாக கூறும் ப்ரீத்தியும் பிரவீணும், தங்கள் சிகிச்சை மையத்தில் 3,000-க்கும் மேற்பட்டோர் பலன் பெற்றதாகவும், நோயாளிகளிடம் 100 சதவீத திருப்தியைக் காண முடிந்ததாகவும் பெருமிதத்துடன் சொல்கிறார்கள்.

ஐடிஐதிர்காவின் நிறுவனர்கள் சகோதரி - சகோதர் என்றாலும், தொழில்ரீதியாக வேறுபாடு கொண்டவர்கள். 2008-ல் ராஜ்நந்த்காவ் சி.டி.சி.ஆர்.ஐ.-யில் பிடிஎஸ் (பல் மருத்துவம்) முடித்த ப்ரீத்திதான், பிலாயில் தன்னிச்சையாக சிகிச்சை வழங்கும் இளம் பல் மருத்துவர். இவர் தன் திருமணத்துக்கு முன்பே பணியைத் தொடங்கிவிட்டார். அதேநேரத்தில், கான்பூர் ஐஐடி-யில் எலக்ட்ரிகல் எஞ்சினீயரிங் முடித்தார் பிரவீண். இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிந்தார். பிறகு, மைசூரில் எரிசக்தி நுகர்வு மேலாண்மையில் ஒரு தொழில் முன்முயற்சியில் பங்காற்றினார். கடைசியில், ஓர் ஆலோசகராக உருவெடுத்தார்.

இந்தப் பாசமலர்கள் இருவருக்குமே தங்கள் மாநிலமான சத்தீஸ்கருக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேட்கை மிகுதியானது. இவர்களது குடும்பமே கிராமப் பின்னணி கொண்டதுதான். இப்போதும், கிராமத்துடன் பந்தம் விட்டுப்போகாமல் நீடிக்கிறது. "நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போதிலிருந்தே பார்த்து வருகிறோம். ஊரகப் பகுதிகளில் மக்களிடையே பற்கள் பராமரிப்பு என்பதே இருப்பதில்லை. அதிகளவில் புகையிலை பயன்படுத்துவதும், போதுமான மருத்துவ வசதி இல்லாததும் அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எங்கள் உறவினர்கள் சிலர் அதிகமாக புகையிலைப் பயன்படுத்தியதால், தொடர் உயர் ரத்த அழுத்தம் காரணமாக இறந்தனர்" என்று பின்னணியை விவரிக்கிறார் பிரவீண்.

"வாய்ப் புற்றுநோயில் உலகின் தலைநகரமாகவே ஊரக இந்தியா விளங்குகிறது" என்று கூறும் பிரவீண், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண தங்களால் இயன்ற முயற்சிகள் குறித்து விளக்கும்போது, "புறநகர்ப் பகுதியில் ஒரு சிறப்பு சிகிச்சை மையம் ஒன்றை உருவாக்கியதே எங்கள் முதற்கட்ட நடவடிக்கை. கிராமங்களில் முதலில் முகாம்களை நடத்தவில்லை. ஏனெனில், கிராமப்புற மக்களிடம் நம்பிக்கையை முதலில் விதைக்க வேண்டிய நிலை இருந்தது. எனவே, சரியாக நோய்களைக் கண்டறிந்து, முறையான சிகிச்சைகளை குறைந்த கட்டணத்தில் அளித்து எங்கள் மீது அபிமானம் ஏற்பட வழிவகுத்தோம்.

இப்படி நம்பகத்தன்மையை கூட்டிய பிறகுதான் கிராமங்களில் எங்கள் குழு முகாம்களை நடத்தத் தொடங்கியது. வருமுன் காப்பது என்பதுதான் எங்களது முக்கிய நோக்கமாக இருக்கிறது" என்கிறார் பிரவீண். ஐடிஐதிர்கா-வில் மக்களுக்கு பற்கள் பராமரிப்பு குறித்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கே அதிக நேரம் செலவிடப்படுகிறது.

"ஊரக நோயாளிகளுக்கு முகாம்களில் அடையாள அட்டை வழங்கப்படும். அங்கேயே தேவைப்பட்டால் சிகிச்சையும் மிகக் குறைந்த கட்டணத்தில் அளிக்கிறோம். அவர்கள் அந்தக் களத்திலேயே சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் அல்லது மூன்று மாதங்களுக்கு எங்கள் மையத்திலும் வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். எங்கள் சிகிச்சை மையத்துக்கு நேரடியாக வருபவர்களிடம் வாங்குவதைக் காட்டிலும் மிகக் குறைந்த கட்டணத்தைதான் முகாம்களில் வசூலிக்கிறோம்" என்று விளக்குகிறார் ப்ரவீண்.

கிராம மக்களிடம் நேரடியாகச் சென்று முகாம்கள் நடத்துவதற்கு முக்கியக் காரணம், அவர்களிடம் பல் மருத்துவப் பிரச்சனைகள் குறித்த எந்த விழிப்புணர்வும் இல்லை என்பதுதான். "பல் வலி தாங்க முடியாத சூழலில் மட்டும்தான் அவர்கள் சிகிச்சைக்கே வருகிறார்கள்" என்கிறார் பிரவீண். எங்களின் நோயாளிகள் அனைவருமே தினக்கூலிகள், அன்றாட வாழ்க்கையைக் கடத்துவதற்கே போராடும் ஏழைகள்தான் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

உயர்தர சிகிச்சை அளித்து இயன்றவரை மிகக் குறைந்த கட்டணத்தைப் பெறுவதையே முக்கிய எண்ணமாகக் கொண்டிருக்கிறது ஐடிஐதிர்கா. நீண்ட தூரம் பயணித்து வரும் ஏழை கிராமப்புற நோயாளிகளுக்கு இது மிகுந்த பலனைத் தருகிறது. "ஓரல் மருந்துப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுடன் நேரடியாக தொடர்புவைத்துக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். இதன்மூலம் மருந்துப் பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்க வகை செய்ய முடியும் என்று நம்புகிறோம். மருந்துப் பொருட்களை ஏற்கெனவே சலுகை விலையில் தான் வாங்குகிறோம். ஆனாலும், இன்னும் கூடுதலாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது" என்கிறார் பிரவீண்.

ஐடிஐதிர்காவில் முதலீடு செய்வதற்கு நிறைய நிறுவனங்கள் முன்வந்தவண்ணம் இருந்தாலும், இயன்றவரை சொந்தக் காலிலேயே மேலும் அழுத்தமாகத் தடம் பதிக்கவே பாசமலர்கள் இருவர்கள் விரும்புகிறார்கள்.

சமூகத்துக்கும் நல்லது செய்ய வேண்டும்; தொழிலும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதுதான் இவர்களது தாரக மந்திரம். இரு தரப்புக்குமே பலன் கிட்ட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். தமது சேவையை மேலும் விரிவாக்கம் செய்திட இவர்கள் முடிவுசெய்துள்ளனர். இதுபற்றி பிரவீண் கூறும்போது, "கிராமப்புற மக்கள் பலனடையும் வகையில் அதிக எண்ணிக்கையில் புறநகர்ப் பகுதிகள் பல் மருத்துவம் மையங்கள் அமைக்க விரும்புகிறோம். இதன் மூலம் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பலன் பெற வகை செய்ய முடியும்" என்கிறார்.

மேலும் விவரிக்கும் அவர், "ஒவ்வொரு கிராமத்துக்குமே ஒரு பிரதியை நியமித்து, அவர் மூலம் கிராமத்தினர் தங்களது பல் பிரச்சனைகளை பதிவு செய்து உரிய நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்ய முடிவு செய்துள்ளோம். முதியவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் அவர்களுக்கு எவ்வித சிரமுமின்றி பல் சிகிச்சைப் பெறுவதற்கு உரிய முகாம்களை ஏற்பாடு செய்யவுள்ளோம்." தங்கள் வருவாயைக் கொண்டு ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் முதலீடு செய்யவும் ஐடிஐதிர்கா தொடங்கியிருக்கிறது.

புதுப்பிக்கப்பட்ட பழைய வேன், பெரிய டீசல் கேனில் தண்ணீர், பல் சிகிச்சை உபகரணங்கள் ஆகியவற்றை கச்சிதமாகவும் கவனமாகவும் கையாண்டு, ஏழை மக்களிடையே ஆழமான அபிமானத்தைப் பெற்றிருக்கிறது ஐடிஐதிர்கா. மோசமான சாலைகள், நிறைய செலவுகள், அடிப்படை வசதிகள் பற்றாக்குறை, கிராமத்தினருடனான தகவல் தொடர்பில் பின்னடைவு என இவர்கள் தினம் தினம் எதிர்கொள்ளும் சவால்கள் பல. எனினும், இந்தக் குழு தடைகளைப் பொருட்படுத்தாமல் முன்னேற்றப் பாதையை நோக்கி நிதானமாக சவால்களை எதிர்கொண்டு பயணிப்பதுதான் சிறப்பு.

ப்ரீத்தி - பிரவீண் பாசமலர்களின் பயணத்தைக் காண இதோ அவர்களது வலைதளம்: http://www.itidirkha.com/

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்