இந்தியர் இயக்கிய பாகிஸ்தான் விளம்பரம் வைரலாகியது எப்படி? 

0

படிப்பதைவிட பார்த்து ரசிக்க வேண்டிய கதை இது... 

புனித ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அண்மையில் பாகிஸ்தானில் வெளிவந்த விளம்பர வீடியோ ஒன்று வைரலாகி, பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் மனதை கொள்ளையடித்தது. சமூக ஊடகங்களில் வெகுவாக பகிரப்பட்ட இந்த விளம்பரம் மிகவும்  அழுத்தமான சமூகச் செய்தியை சொல்கிறது. 

'லன்ச் பாக்ஸ்', 'பாம்பே வெல்வெட்', 'தேவ் டி' போன்ற ஹிந்தி படங்களின் கதைகளை எழுதிய இந்திய எழுத்தாளர் வாசன் பாலா இயக்கிய இந்த விளம்பர வீடியோ கிட்டத்தட்ட 6 லட்சம் பார்வையாளர்களை கண்டுள்ளது. பாகிஸ்தான் 'சர்ஃப் எக்சல்' ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது இந்த வீடியோ. 

விளம்பரத்தில் நடித்துள்ள துறுதுறு சிறுவன் தன்னுடைய புதிய குர்தாவை அணிந்துக் கொண்டு இஃப்தார் நோன்பு முடியும் நேரத்தில் தெருவில் நண்பர்களுடன்  செல்கிறான்.  

மார்க்கெட்டுக்கு செல்லும் வழியில் சமோசா விற்பனை செய்யும் வயதான ஒருவரின் தள்ளுவண்டி குழியில் மாட்டிக்கொண்டதை கண்ட அச்சிறுவன், தன் நண்பர்களுடன் ஓடிச்சென்று அவருக்கு உதவ முன்வருகிறான்.  அந்த தள்ளுவண்டியை குழியிலிருந்து வெளியே தள்ள முயற்சிப்பான் என்று நாம் கற்பனை செய்வது போல் அல்லாமல், புதிய ஐடியா ஒன்றை செய்கிறான் அந்த சிறுவன். தன்னுடைய பளிச் குர்தாவில் சமோசாக்களை எடுத்துக்கொண்டு மார்க்கெட்டுக்குள் சென்று, "சுடச்சுட சமோசா... " என்று கூவி கூவி விற்க முயல்கிறான்... சிறுவனைக் கண்ட  மக்கள் சமோசாவை வாங்கத்தொடங்குகின்றனர்.

சிறுவனும் அவனது நண்பர்களும் தங்கள் குர்தாவில் சமோசாவை எடுத்துச் சென்றதால் கறைப்படிந்து போகிறது... "பிறருக்கு உதவுவதும் நம்பிக்கையை உணர்த்தும் செயலே... எனவே கறை நல்லதே..."  என்ற ஆழமான கருத்துடன் முடிகிறது விளம்பரம்.

நன்றி: Think Change India