2022ல் இந்திய ஸ்மார்ட்போன் பயனாளிகள் எண்ணிக்கை இரு மடங்காக உயரும்: சிஸ்கோ தகவல்

0

ஸ்மார்ட்போன் பயனாளிகளை மையமாகக் கொண்ட சேவைகளை உருவாக்கி வரும் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் வகையில், இந்தியாவின் ஸ்மார்ட்போன் பயனாளிகளின் எண்ணிக்கை 2022 ம் ஆண்டில் இரு மடங்காக உயரும் எனும் தகவல் வெளியாகியுள்ளது. சிஸ்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள விஷுவல் நெட்வொர்கிங் அறிக்கை இந்தத் தகவலை தெரிவிக்கிறது.

உலக அளவில் ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. மேலும் இந்தியாவில் ஸ்மார்ட்போன் காரணமாக இணைய பயன்பாடும் அதிகரித்து வருவதாகக் கருதப்படுகிறது.

இந்தப் பின்னணியில் இணைய நிறுவனமான சிஸ்கோ, விஷுவல் நெட்வொர்கிங் இண்டெக்ஸ் எனும் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இணைய மற்றும் மொபைல் பயன்பாடு தொடர்பாக சர்வதேச அளவிலான மற்றும் நாடுகள் அளவிலான வளர்ச்சி கணிப்புகளை இந்த அறிக்கை கொண்டிருக்கிறது. பிராட்பேண்ட் பயன்பாடு, வை-பை வசதி, இணைக்கப்பட்ட சாதனங்கள் ஆகியவை தொடர்பான கணிப்புகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

இணைய பயன்பாடு தொடர்பான ஆய்வறிக்கைகள், நிறுவனங்கள் அளிக்கும் புள்ளிவிவரங்கள், சிஸ்கோவின் ஆய்வு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய இணைய பயன்பாடு குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த அறிக்கை அளிக்கிறது.

இந்தியாவில் இணைய பயன்பாடு 2017 ல் நாள் ஒன்றுக்கு 108 பெடாபைட்டாக இருப்பது 2022ல் 646 பெடாபைட்டாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இணைய பயன்பாட்டு அதிகரித்திருப்பதோடு, இணையத்துடன் இணைக்கப்பட்ட சாதனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இணைக்கப்பட்ட சாதனங்களின் எண்ணிக்கை 2017 ல் 1.6 பில்லியான இருந்தது, 2022 ல் 2.2 பில்லியனாக அதிகரிக்கும் என்றும், இதில் ஸ்மார்ட்போன்களின் பங்கு 38 சதவீதமாக இருக்கும் என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது. 

ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை அதிகரிப்புக் காரணமாக இந்தியர்களின் தனிநபர் இணைய பயன்பாடு 2022ம் ஆண்டில் 14 கிகாபைட்டாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது இது 2.4 கிகாபைட்டாக இருக்கிறது.

மேலும், இந்தியாவில் கடந்த 32 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட இணைய போக்குவரத்தைவிட அதிக இணைய போக்குவரத்து 2022 ல் உருவாக்கப்படும் வாய்ப்புள்ளது.

இந்தியாவில் இணைய பயனாளிகளின் எண்ணிக்கை 2017ல் 357 மில்லியனாக இருந்தது, 2022ல் 840 மில்லியனாக அதிகரிக்க உள்ளது. அதாவது இந்திய மக்கள் தொகையில் இது 60 சதவீதமாகும். 

அதே போல ஸ்மார்ட்போன் பயனாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக உயரும் வாய்ப்புள்ளது. 2017ல் 404 மில்லியனாக இருந்த ஸ்மார்ட்போன் பயனாளிகள் எண்ணிக்கை 2022ல் 829 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“2022 ல் இந்தியாவில் ஸ்மார்ட்போன் வாயிலாக இணையத்தை பயன்படுத்துவது பலமடங்கு உயரும். சமூக ஊடகம், வீடியோ பயன்பாடு மற்றும் வர்த்தக சேவைகளுக்கான மையமாக ஸ்மார்ட்போன் விளங்கும். பயன்பாடு அதிகரிக்கும் சூழலில், சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கான சந்தை வாய்ப்பும் அதிகரிக்கும்,” என்கிறார் சிஸ்கோ ஆசிய பசுபிக் பிராந்திய தலைவர் சஞ்சய் கவுல்.

சிஸ்கோ அறிக்கை தெரிவிக்கும் மற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:

2017 முதல் 2022 காலத்திற்கான இணைய மற்றும் மொபைல் பயன்பாடு தொடர்பான முக்கிய தகவல்கள்:

• இந்தியாவில் 2022 ல் இணைய பயனாளிகள் எண்ணிக்கை 2017 ல் 357 மில்லியனாக இருப்பது (மக்கள் தொகையில் 27 சதவீதம்) 2022 ல் 840 மில்லியனாக உயரும். (மக்கள் தொகையில் 60 சதவீதம்).

• இந்தியாவில் 2022 ல் 2.2 பில்லியன் இணைக்கப்பட்ட சாதனங்கள் இருக்கும்.

• இந்தியாவில், 2022 ல் அனைத்து இணைக்கப்பட்ட சாதனங்களில் ஸ்மார்ட்போன்கள் 38 சதவீதமாக இருக்கும். 2017 ல் இது 26 சதவீதமாக இருந்தது.

• ஸ்மார்ட்போன்கள் மாதத்திற்கு 17.5 ஜிபி சராசரியை கொண்டிருக்கும்.

• இந்தியாவில் சராசரி பிராட்பேண்ட் வேகம் 2016 ல் 6.6 எம்பிஎஸ்- ல் இருந்து 2017 ல் 9.5 எம்பிஎஸ்.-ஆக அதிகரித்துள்ளது.

• இந்தியாவில் 2017 ல் வீடியோ பயன்பாடு 73 சதவீதம் அதிகரித்தது. 2022 ல் இது மேலும் அதிகரித்து இணைய பயன்பாட்டில் 77 சதவீதமாக இருக்கும்.

• இந்தியாவில் பொது வை-ஃபை மையங்கள் 116 சதவீத வளர்ச்சி அடைந்து 2022 ல் 6 மில்லியனாக அதிகரிக்க உள்ளன.

தமிழில்: சைபர்சிம்மன்