குக்கர், டிராக்டர், பிளேன்... இவை எல்லாம் விளையாட்டு மொம்மைகள் அல்ல...

உங்கள் கனவு இல்லத்தை கட்டிக் கொண்டு இருக்குறீர்களா? ஆம் எனில், மொட்டை மாடியில் தண்ணீர்த்தொட்டி வைப்பதற்கு முன் இதை படித்து விடுங்கள்...

55

நவீன லுக்கில் புதுமையான வீடுகள் கட்டியும், மண்டை மேலிருக்கும் கொண்டையை மட்டும் மாத்தவே முடியாது போல், இந்த தண்ணீத்தொட்டி மட்டும் ஆதிகாலத்திலிருந்து ஒரே மாதிரியாக தான் வைக்கப்பட்டு வருகின்றன. 

‘மாற்றம் மட்டும் மாறாதது இல்லை, மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டிகளும் மாறாததே’ என்ற விரக்தியில் சின்டெக்சுகளை பொருத்தியிருக்கும், வீட்டு அழகியலை விரும்புவோரோ, பஞ்சாப்புக்கு மஸ்ட் ஒரு விசிட் அடிங்கோ...

ஆம் மக்களே, பட்டியாலா பென்டுக்கும், பஞ்சாபி டான்சுக்கும் பெயர்போன பஞ்சாப் மாநிலத்தில் உள்ள வீடுகளின் மாடியிலுள்ள வாட்டர் டாங்குகளும் ‘வாவ்’ சொல்லும்படியாக உள்ளது. பறவைகள், ஆர்மி வண்டிகள், கப்பல்கள், புட்பால்கள், மனித உருவங்கள் என்று விதவிதமான வடிவத்தில், ஒய்யாரத்தில் ஓங்கி நிற்கும் வாட்டர் டாங்குகள் அவ்வளவு அழகுடன் ஜொலிக்கின்றன.

பட உதவி :  Kangan Arora
பட உதவி :  Kangan Arora

அக்சுவல்லா, விதவிமாய், ரகரகமாய் வாட்டர் டாங்குகள் அமைப்பது பஞ்சாப் மக்களின் 30 ஆண்டுக் காலப் பழக்கம். ஆனால், இதை கங்கன் அரோரா என்ற பெண்ணே உலகுக்கு அறிய வைத்துள்ளார். பஞ்சாப்பின் லூதியானா மாவட்டத்தைச் சேர்ந்த கங்கன் அரோரா படிப்புக்காகவும், பணிக்காகவும் லண்டன் சென்று, இப்போது லண்டன் சிட்டிசனாகவே மாறிவிட்டார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் லூதியானாவில் உள்ள பெற்றோர்களை பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு விசிட் அடிக்கிறார். அப்படி, ஒரு முறை லண்டன் டூ பஞ்சாப்பிற்கு வருகை தந்தபோது, தான் பார்த்து வளர்ந்த வீடுகளில் உள்ள விசித்திர வாட்டர் டாங்குகளை உலக மக்களும் காண வேண்டும் என்று எண்ணியுள்ளார். அதனால், 2011ம் ஆண்டு தண்ணீர்த் தொட்டிகளை புகைப்படமெடுத்து ஆவணப்படுத்தத் தொடங்கினார். 

எப்போதெல்லாம், லண்டனிலிருந்து சொந்தஊருக்கு வண்டியை விடுகிறாரோ, அப்போதெல்லாம் விசித்திர தண்ணீர்த்தொட்டிகளின் தேடலையும் தொடக்கி உள்ளார். ஒவ்வொரு டாங்குகளையும் புகைப்படம் எடுத்து, அதை ஆல்பமாக்கியும் வைத்துள்ளார். அவரது ஆல்பத்தில் இருக்கும் ஆர்மி வடிவ டாங்கு, ஜலந்தர் என்ற பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது.

பட உதவி : Kangan Arora
பட உதவி : Kangan Arora
 “என்னுடைய மகன் ஆர்மி மேன். அவன் ராணுவத்தில் சேர்ந்த போது, அவனை ஊக்குவிக்கும் விதமாக ராணுவ பீரங்கி வடிவத்தில் வாட்டர் டாங்க் அமைத்தோம். 3 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்டது இந்த டாங்க்,”

என்கிறார் ஆர்மி பீரங்கி வடிவ வாட்டர் டாங்க் கொண்ட வீட்டின் உரிமையாளர் ரஞ்சோட் மக்கர். ஒவ்வொரு வாட்டர் டாங்குகளையும் புகைப்படம் எடுப்பதுடன் அதன் வரலாற்றையும் கேட்டறிந்து அவரது வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறார். 

“ரொம்ப வித்தியாசமான வடிவங்களில் வாட்டர் டாங்குகளை பார்க்கவும், கொஞ்சம் ஆர்வமா, தண்ணீர் தொட்டிகளை தேடி அலைய ஆரம்பித்துவிட்டேன். தண்ணீர் தொட்டிகளுக்கு அழகிய வடிவம் கொடுத்த ஆர்டிஸ்டுகளையும் சந்தித்தேன்,” என்கிறார் அரோரா. 

அப்படி, அவர் சந்தித்த ஆர்டிஸ்ட்களில் இருவர் ராம் லோபயா மற்றும் அவரது மகன் சோனு. கடந்த 30 ஆண்டுகளாக இத்தொழிலை செய்து வருகின்றனர். 

ராம் லோபயா மற்றும் அவரது மகன் சோனு . பட உதவி : Kangan Arora
ராம் லோபயா மற்றும் அவரது மகன் சோனு . பட உதவி : Kangan Arora
“தொடக்கத்தில், அதிக அளவில், விமான வடிவத்தில் தண்ணீர்த் தொட்டிகள் செய்துதரச் சொல்லி ஆர்டர்கள் வரும். இப்போலாம், மக்கள் ரொம்ப வித்தியாசமா கேட்குறாங்க,” எனும் ராம், சிலர் ஞாபகார்த்த சின்னங்களாகவும் தண்ணீர்த் தொட்டிகளை பார்க்கின்றனர் என்கிறார்.

விளையாட்டாக தோன்றிய தண்ணீர் தொட்டி பழக்கம், ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலையை உணர்த்தும் சிம்பிளாக மாறிவிட்டது. லூதியானாவாசி ஒருவர் கழுகு வடிவ வாட்டர் டாங்கை வைத்துள்ள காரணத்தை விவரிக்கையில், 

“எனக்கு சிறு வயதில் இருந்தே செல்லப் பிராணிகள் என்றால் இஷ்டம். அதிலும் கழுகு கூடுதல் பிரியம். நான் சின்ன வயசில ஒரு கழுகு வளர்த்தேன், அது இறந்த பின், அதன் ஞாபகார்த்தமாய் கழுகு வடிவத்தில் தண்ணீர்த் தொட்டி வைத்தோம்,” என்கிறார் கழுகுத் தொட்டி வைத்திருப்பவர். 

தகவல்கள் உதவி: scroll.in | கட்டுரையாளர்: ஜெயஸ்ரீ