பெண்கள் இனி அச்சமின்றி ஃபேஸ்புக் ப்ரொபைலில் தங்கள் படங்களை பகிரலாம்: அத்துமீறலை தடுக்க புதிய டூல் அறிமுகம்!  

ஃபேஸ்புக் எண்ணிக்கையில் 219 மில்லியன் பயனர்களுடன் முதலிடத்தில் உள்ளது அமெரிக்கா. இதையடுத்து 213 மில்லியன் பயனர்களுடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது இந்தியா.

1

ஃபேஸ்புக்கின் பயனாளிகளில், 24 சதவீதம் பெண்கள் என்று ‘வி ஆர் சோஷியல்’ என்கிற ஆய்வு நிறுவனம் 2016-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நடத்திய ஆய்வின் முடிவு தெரிவிப்பதாக ஃபேஸ்புக் பகிர்ந்துகொண்டுள்ளது.

சமூக மற்றும் கலாச்சார தடைகள் காரணமாகவும் பெண்களின் தனிப்பட்ட பாதுகாப்பு கருதியும் பல இந்தியப் பெண்கள் சுய விவரப் படங்களாக (Profile Picture) தங்களது புகைப்படத்தைப் பயன்படுத்துவதில்லை. தவறாக பயன்படுத்தப்படலாம் என்கிற அச்சத்தினால் பாதுகாப்பு கருதியே பலர் தங்கள் படத்தை வெளியிட தயக்குகின்றனர். 

இந்தியப் பெண்களின் பாதுகாப்பு சார்ந்த தற்போதைய இந்த நிலையை மாற்றும் முயற்சியாக புதிய டூல்களை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது ஃபேஸ்புக். இதனால் தங்களது புகைப்படங்களை யார் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் பகிர்ந்து கொள்ளலாம் என்கிற கட்டுப்பாடும் பெண்களுக்குக் கிடைக்கும்.

ஃபேஸ்புக்கின் ப்ராடக்ட் மேனேஜர் ஆர்த்தி சோமன் ஒரு வலைப்பதிவில், 

“இந்தியாவிலுள்ள மக்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களை ஆய்வு செய்கையில் தங்களது புகைப்படத்தை பிறர் தவறாக பயன்படுத்தக்கூடும் என்கிற அச்சத்தின் காரணமாக பாதுகாப்பு கருதி பெண்கள் சுயவிவர படங்களிலோ அல்லது இணையத்தின் எந்த ஒரு பகுதியிலோ தங்களது புகைப்படங்களை வெளியிடத் தயங்குகின்றனர் என்பது தெளிவாகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஆராய்ச்சி மையம் மற்றும் லேர்னிங் லிங்க்ஸ் ஃபவுண்டேஷன் போன்ற பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து இந்த டூல் உருவாக்கப்பட்டுள்ளது. தங்களது அனுபவத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் விதத்திலும் ஆன்லைனில் பாதுகாப்பாக செயல்படும் விதத்திலும் இந்த டூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்கின் தகவலில் காணப்படும் ஒரு நபரின் சுயவிவர புகைப்படத்தை மற்றவர் பதிவிறக்கம் செய்வதையோ அல்லது பகிர்ந்துகொள்வதையோ இந்த புதிய கட்டுப்பாடுகள் முடக்கிவிடும். ஒருவரது நண்பர் பட்டியலில் இல்லாத ஒரு நபர் அவர் உட்பட யாரையும் சுயவிவர புகைப்படத்தில் டேக் செய்ய முடியாது.

உங்களது சுயவிவர புகைப்படத்தை மற்றவர் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கும் வசதி தற்போது ஆண்ட்ராய்ட் சாதனத்தில் மட்டுமே உண்டு. இயன்றவரை இதை நாங்கள் தடுக்க உள்ளோம்.” என்றார் ஆர்த்தி. ஃபேஸ்புக்கில் சுயவிவர புகைப்படத்தை சுற்றிலும் பாதுகாப்பிற்கான அறிகுறியாக ஒரு நீல நிற எல்லையும் கவசமும் காணப்படும்.

”ஒருவர் தனது சுயவிவர புகைப்படத்தை சுற்றிலும் ஒரு கூடுதல் டிசைனை இணைத்தால் மற்றவர் அந்த புகைப்படத்தை நகலெடுக்க 75 சதவீதம் விரும்புவதில்லை என்பதை ஆரம்பக்கட்ட சோதனைகளின் அடிப்படையில் புரிந்துகொண்டோம்,”

என்று ஆர்த்தி தனது வலைப்பதிவில் பகிர்ந்துகொண்டுள்ளார். தனது புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக ஒருவருக்கு சந்தேகம் எழுந்தால் அவர் நிறுவனத்திடம் புகாரளிக்கலாம். ஃபேஸ்புக் நிறுவனம் அடுத்தகட்ட நடவடிக்கையை தீர்மானிக்க உதவும்.

இந்தியாவில் கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு ஃபேஸ்புக் விரைவில் மற்ற நாடுகளிலும் இதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.