ஆர்கானிக் புரதச்சத்தை தயாரித்து மக்களுக்கு ஆரோக்கிய உணவளிக்கும் ’OMG Labs’ 

0

காசி சரவணன்; அனைவருக்கும் சமமான புரதச்சத்துக்கள் கிடைக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தொழில்முனைவில் இறங்கிய இளைஞர். ஜிம்முக்கு செல்பவர்கள் மட்டுமே அளவான ப்ரோடீன்களை உட்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை மாற்றி, எல்லாருமே அவரவரின் உடலுக்கு ஏற்ற புரதச்சத்தை பெறவேண்டும் என்று தொடங்கிய நிறுவனமே OMG Labs. பிப்ரவரி 2016-ல் காசி சரவணன் இந்நிறுவனத்தை தொடங்கினார். 

OMG Labs ப்ரோடீன்களை உற்பத்தி செய்து அதை ஆர்கானிக் முறையில் வளர்க்கிறது. இதன் மூலம் எல்லாரும் பருகக்கூடிய இயற்கையான ஆரோக்கிய ப்ரோடீன் பவுடர்களை தயாரிக்கிறது இந்த நிறுவனம். 

“அவ்வப்போது புதிதாக தயாரிக்கப்படும் இந்த ப்ரோடீன் பவுடர்கள் விலைக்குறைவாக, சுலபமாக எல்லாருக்கும் கிடைக்கும் வகையில் இருக்கவேண்டும் என்பதே எங்கள் இலக்கு,” என்கிறார் காசி. 

எங்கள் தயாரிப்பில் எந்தவித கெமிக்கல், கூடுதல் கலர்கள், சர்க்கரை, ருசியை பெருக்கும் செயற்கை பொருட்கள் என்று எதுவும் சேர்க்கப்படுவதில்லை. இது மற்ற ட்ரின்குகளை போல் நிச்சயம் இல்லை என உத்திரவாதம் தருகிறேன். இயற்கையின் வளத்தை சரியான வடிவில் அளிக்கவே செயல்படுகிறோம் என்கிறார். 

ஜேம்ஸ் லிஷ்மன் OMG Labs-ன் சிடிஓ. இவர் யூகேவில் இருக்கும் பயோடெக்னாலஜிஸ்ட். இவர் தான் இந்நிறுவனத்தின் ப்ரோடீன் தலைவர். அவர் இதற்கு முன் Merck மற்றும் WHO-ல் பணிபுரிந்த அனுபவசாலி. காசி, மேனேஜ்மெண்டில் அனுபவம் கொண்டவர். இவர் சுகாதாரத்துறையில் கன்சல்டண்டாக இருந்துள்ளார். சிட்டிபேங்கில் வங்கி முதலீடு பிரிவில் பணிபுரிந்த அனுபவமும் இவருக்கு உள்ளது. 

OMG Labs பிறந்த கதை

காசி இதுபற்றி கூறுகையில்,

OMG என்றால் ஆர்கானிக் மெடிக்கல் க்ரூப். நாங்கள் முதலில் ஒரு மார்கெடிங் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தோம். பின் OMG (Original Marketing Group) Worldwide நிறுவனத்தின் உரிமையை வாங்கினேன்.” 

இந்தியாவில் நான்கு பேரும் யூகேவில் இரண்டு பேர் கொண்டும் OMG Labs இயங்குகிறது. உலகமெங்கும் உள்ள மக்கள் ஆரோக்கியமாக, வலுவாக, உடற்கட்டுக்கோப்போடு இருக்க உதவவேண்டும் என்பதை நோக்கி பயணிக்கின்றனர். 

”நான் 90 மணிநேர வாரங்கள் இதற்காக உழைக்கிறேன். அதேப்போல் இந்த பயணத்தை ரசித்து பணிபுரிபவர்களையே எங்கள் குழுவில் கொண்டுள்ளோம்,” என்றார் காசி.

தனிச்சிறப்பு

தற்போது OMG Labs நோயாளிகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருவதாக காசி தெரிவித்தார். 

“அறுவை சிகிச்சைக்கு பின் நோயாளிகள் உட்கொள்ள தகுதியாக இந்திய உணவுவகைகள் இல்லை. அதனால் அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து ப்ரோடீன் அதிகமுள்ள உணவுவகைகளை தயாரிக்க உதவிவருகிறோம். இதனால் சீக்கிரம் நோயாளிகள் ஆரோக்கியத்தை பெறமுடியும். நீர் வடிவ உணவுவகைகளில் ப்ரோடீன் சத்தை அதிகரித்து அவர்களுக்கு தகுந்த கலோரி அளவிற்கு தருகிறோம்.” 

அதேபோல் கார்பரெட் ஊழியர்களுக்கும் புரதச்சத்து உணவுவகைகளை அளிக்கின்றனர் OMG Labs. 

வளர்ச்சி மற்றும் வருங்கால திட்டம் 

இவர்களின் ஆண்டு வருமானம் சுமார் ரூ.1.2 கோடி என்றும் ஒவ்வொரு மாதமும் 60 சதவீத வளர்ச்சி இருப்பதாக கூறுகிறார். ஆர்கானிக் புரதச்சத்து தயாரிப்பில், தென்னிந்தியாவில் OMG Labs அதிக பிரபலமாகவும் சந்தையில் அதிக வாடிக்கையாளர்களையும் கொண்டிருப்பதாக தெரிவித்தார். 

வருவாய் ஈட்டும் வழிகள் 

OMG Labs சந்தாதார அடிப்படையில் இ-காமர்ஸ் மாடலில் செயல்படுகிறது. இதைத்தவிர பாரம்பரிய முறைகளிலும் விற்பனை மாதிரியை கொண்டு அதிவேகமாக வளர்ந்து வருகின்றனர். ஆன்லைனில் அதிக வாடிக்கையாளர்கள் இவர்களை பரிந்துரைப்பதன் அடிப்படையில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கின்றனர். ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு முகாம்களை பள்ளி, கல்லூரிகளில் நடத்தி, இளம் வயதினரிடையே தங்கள் தயாரிப்பை கொண்டு செல்ல பணிகள் செய்து வருகின்றனர். மருத்துவர்கள் மற்றும் டயடீசியன்களோடும் இணைந்து செயல்படுகின்றனர் என்று காசி கூறினார். 

முதலீடு

சுயமுதலீட்டில் தொடங்கியுள்ள OMG Labs, ரிலையன்ஸ் ஜியோ தயாரிப்பு தலைவர் மற்றும் Mckinsey-ன் முன்னாள் துணைதலைவரிடம் இருந்து ஏஞ்சல் முதலீட்டை பெற்றுள்ளனர். லாபம் ஈட்டத்தொடங்கியுள்ளதால் தற்போதைக்கு முதலீடுகள் தேவையில்லை என்று நிறுவனர் தெரிவிக்கிறார்.