தைரியம், தன்னம்பிக்கைக் கொண்டு மதுரை மருத்துவமனையை ரூ.350 கோடி சாம்ராஜ்யமாக உயர்த்திய டாக்டர் குருஷங்கர்!

37 வயதான இந்த இளம் தொழில்முனைவர், தனது உண்மையான நோக்கத்திற்கு இடையூறாக செயல்பட்டு நிறுவனத்தில் ஆதிக்கம் செலுத்திவந்த ஒட்டுமொத்த கூட்டத்தையும் இரக்கமின்றி வெளியேற்றினார்... 

33

மதுரை மாவட்டத்தில் பயணிக்கும்போது குறைந்தது இரண்டு மீனாட்சி மிஷன் மருத்துவமனை பேருந்துகளையாவது வழியில் காணமுடியும். தகவல் தொழில்நுட்பம் வாயிலாக மருத்துவ பராமரிப்பளிக்கும் டெலிமெடிசன் யூனிட்கள் இந்த பேருந்தில் இருக்கும். இது மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்குச் சொந்தமானது. இதிலுள்ளவர்கள் மதுரை கமாண்ட் செண்டரிலுள்ள மருத்துவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பதைப் பார்க்கலாம்.

ஒவ்வொரு வருடமும் 1,50,000 மக்களுக்கு சேவையளித்து வரும் இந்தப் பேருந்துகளை உருவாக்கியவர் டாக்டர் எஸ்.குருஷங்கர். தமிழ்நாட்டின் தெற்குப் பகுதிகளிலுள்ள பலரும் விரும்பும் ஒரு மருத்துவமனையாக மாற்றியவர் இவர். இந்த மருத்துவமனை, சூழ்ச்சிகள் நிறைந்த ஒரு விரும்பத்தகாத காலகட்டத்தைக் கடந்து வந்துள்ளது.

1985-ம் ஆண்டு என்.சேதுராமன் என்கிற சிறுநீரக மருத்துவரால் நிறுவப்பட்டது மீனாட்சி மிஷன் மருத்துவமனை. இவர் மதுரை போன்ற இரண்டாம் நிலை நகரத்தில் ஒரு நவீன மருத்துவமனையை உருவாக்க விரும்பினார்.

1991-ம் ஆண்டில் நூறு படுக்கை வசதிகளைக் கொண்ட இந்த மருத்துவமனை தேவர் சமூகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளுடையதாக பார்க்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் இந்த குலத்தைச் சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். தென்னிந்தியாவில் வணிகத்திலும் அரசியலிலும் வலுவான சமூகம் அல்லது குலம் சார்ந்த தொடர்பு இருக்கும். இது சாதி அமைப்பைக் காட்டிலும் சக்திவாய்ந்தது. மறைந்த ஜெயலலிதா, மறைந்த ஏபிஜே அப்துல் கலாம் போன்றோர் அடிக்கடி இந்த மருத்துவமனைக்கு அடிக்கடி சென்றுள்ளனர்.

எனினும் 2005-ம் ஆண்டு சேதுராமனால் மருத்துவமனையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியவில்லை. குறைந்த செலவில் அனைவருக்கும் ஹெல்த்கேர் கிடைக்கவேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இந்த மருத்துவமனையை உருவாக்கினார். ஆனால் தேர்தல் சமயத்தில் அரசியல்வாதிகள் மருத்துவமனையை அவரது நோக்கத்திலிருந்து விலக்கி தவறாகப் பயனபடுத்தத் துவங்கினர்.

மருத்துவமனையைக் காப்பாற்றும் பொறுப்பை தனது இளைய மகனான டாக்டர் குருஷங்கரிடம் ஒப்படைத்தார். அரசியல் மற்றும் அதிகார வர்கத்தைச் சேர்ந்தவர்கள் கையில் சிக்கியதால் மருத்துவமனையின் நற்பெயர் பாதிக்கக்கூடும் என்று கவலையுற்றார். 100 கோடி நிறுவனமாக இருந்தபோதும், 250 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக இருந்தபோதும் அதன் ஆதாயம் கணிசமாகக் குறைந்தது. தொழில் தர்மத்தில் சமரசம் செய்துகொண்டு சேவகர்கள் அதிக லாபத்தை எடுத்துக்கொண்டனர். மருத்துவமனையின் தரம் குலையத் துவங்கியது. உதவி தேவைப்பட்டது. குருஷங்கர் பொறுப்பேற்க அடியெடுத்து வைத்தபோது அவர் 25 வயது நிரம்பிய அனுபவமற்றவராக இருந்தார். மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் சேர்மேன் குருஷங்கர் கூறுகையில்,

”அந்த சமயத்தில் பொறுப்பேற்றுக்கொள்வதற்கான தயார் நிலையில் நான் இல்லை. படிப்பிற்காக வெளிநாடு செல்ல ஆயத்தமான நிலையில்தான் என்னுடைய அப்பா சந்தித்துக்கொண்டிருக்கும் பிரச்சனைகளை உணர்ந்தேன். அவருக்கு என்னுடைய உதவி தேவைப்பட்டதை உணர்ந்தேன். வெளிநாடு செல்லும் திட்டத்தை ரத்து செய்தது என்னுடைய வாழ்க்கையை மாற்றியது.”

வெளிநாட்டில் படிப்பை முடித்த பிறகு இந்தியா திரும்பிவிடவே திட்டமிருந்தார். இருப்பினும் அவரது அப்பாவின் மருத்துவமனையில் அவர் 12 வருடங்கள் மேற்கொண்ட சாகசம் நிறைந்த பயணத்திற்கு எந்தவித அனுபவமும் சூழலும் அவரைத் தயார்படுத்தியிருக்க முடியாது.

இந்தப் பயணத்தில் திவாலாகிவிட்ட நிலையை சந்திக்கவேண்டியிருந்தது. நண்பர்களை இழக்க நேர்ந்தது. ஆனால் அவரது குடும்பத்தையும் தொழிலையும் அவரால் காப்பாற்ற முடிந்தது. தற்போது 350 கோடி மதிப்புள்ள நிறுவனமாக உருவாக்கியுள்ளார். அடுத்த ஐந்தாண்டுகளில் 500 கோடியாக வருவாயை உயர்த்த திட்டமிட்டுள்ளார். 2024-ம் ஆண்டிற்குள் மேலும் மூன்று மருத்துவமனைகளைத் துவங்கவும் ஆப்ரிக்காவிற்காக டெலிமெடிசன் ப்ராக்டிஸ் உருவாக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது. தற்போது இந்த மருத்துவமனை ஒவ்வொரு வருடமும் அரை மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ சேவையளித்து வருகிறது.

ஆரம்பக்கட்டம்

”குரு புத்திசாலி மாணவன். அவர் எங்களுக்கு இயற்பியல் கற்றுக்கொடுப்பார். எப்போதும் படித்துக்கொண்டிருப்பார்.” என்றார் குருஷங்கரின் குழந்தைப் பருவ நண்பரான அடெல். இவர் தற்போது மருத்துவமனையின் மார்கெட்டிங் மற்றும் ப்ராஜெக்ட் பிரிவிற்கு தலைமை வகிக்கிறார். அவர் ஈடுபடும் அனைத்து செயல்களிலும் வெற்றியடையக்கூடிய குழந்தையாகவே இருந்தார் என்கிறார். “அனைவரும் கடுமையாக உழைத்துப் படித்தாலும் அவர் கான்செப்ட்களை விரைவாக புரிந்துகொள்வார். அதிகம் பிரயத்தனப்படாமல் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்.” என்றார் அடெல்.

அவர் நன்றாக படித்ததற்கு தனது அம்மாதான் காரணம் என்றும் சிறு வயது முதலே கான்செப்டுகளை புரிந்துகொள்ளக்கூடிய திறன் அவரிடம் இருந்தது என்றும் தெரிவித்தார் குருஷங்கர். ஆனால் அவர் தொழிலில் பங்களிக்கவில்லை. அவரது அண்ணன்தான் நிர்வகிப்பதாக இருந்தது.

”என்னுடைய அப்பா செயல்பட்டு வந்தபோது தொழிலில் ஆதிக்கம் செலுத்தியவர்களை கையாள்வதில், என் அண்ணன் மிகவும் கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டார்.”

நிதித்துறை, கொள்முதல் துறை, மருத்துவருடன் இணைப்பது, அரசியல் செல்வாக்கு, மார்கெட்டிங் துறை ஆகிய துறைகளில் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.

2005-ம் ஆண்டு குருஷங்கர் தொழிலில் நுழைந்தவுடன் ஒரு போர்ட் மீட்டிங் அமைக்கப்பட்டது. இதில் குருஷங்கர் மருத்துவமனையின் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன் சில ஆண்டுகள் துணைத் தலைவராக பொறுப்பேற்பார் என்று அவரது அப்பா அறிவித்தார். இந்த அறிவிப்பைப் பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. நிறுவனத்தின் சில மூத்த உறுப்பினர்கள் தாங்கள் பரிந்துரைப்பவர்களை நியமிக்கவேண்டும் என்றனர். ஆனால் இறுதியில் சேதுராமனின் முடிவை ஏற்றுக்கொண்டனர்.

எனினும் இந்த முடிவினால் ஆதிக்கம் செலுத்தியவர்களின் செயல்பாடுகள் நிற்கவில்லை. குருஷங்கர் அவர்கள் ஒவ்வொருவரையும் தனியாக அழைத்து நிறுவனத்திலிருந்து வெளியேற்றினார். மேனேஜ்மெண்ட் அமைப்பு சீரமைக்கப்படத் துவங்கியது. குருஷங்கர் நிறுவனத்தை மேலும் விரிவுப்படுத்தினார். முக்கிய துறைகளில் இளைஞர்களை இணைத்துக்கொண்டார். மருந்து நிறுவனங்களுடன் நல்ல முறையில் பேரம் பேசுவதற்கு அறிவுரை வழங்கினார். இருப்பினும் ஆதிக்கம் செலுத்திவந்த முக்கியமான இருவரை அகற்றவேண்டியிருந்தது. தொழிலில் அதிக செல்வாக்கு இருந்த மருத்துவர்களையும் மற்ற பிரிவுகளைச் சேர்ந்த மக்களை ஒதுக்குவதற்கு மருத்துவமனையை ஒரு மேடையாகப் பயன்படுத்தி வந்த அரசியல்வாதிகளையும் அப்புறப்படுத்தவேண்டியிருந்தது.

பெரிய மருத்துவர்கள் ஒவ்வொருவரும் மருத்துவமனைக்கு வெளியே தனிப்பட்ட முறையில் நோயாளிக்கு ஆலோசனை வழங்குவதை தவிர்த்துவிட்டு மருத்துவமனைக்கு தங்களை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். நிறுவனத்தின் லாபத்திலிருந்து மருத்துவர்களுக்கு மிகப்பெரிய தொகையை அளிப்பதாக உறுதியளித்தார்.

பல மருத்துவர்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேறினர். இளம் மருத்துவர்கள் மட்டும் தொடர்ந்தனர். இன்று கிட்டத்தட்ட 330 மருத்துவர்கள் பணிபுரிகின்றனர். இதில் 150-க்கும் மேற்பட்டோர் எம்டி மற்றும் எம்எஸ் மருத்துவர்கள். குருஷங்கர் கூறுகையில்,

”தங்களது தனிப்பட்ட சிகிச்சை மையங்களுக்கு மக்களை ஈர்த்து அதிக பணம் சேர்ப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் மருத்துவர்களை இப்படிப்பட்ட வணிக மாதிரி அகற்றிவிடும். இவர்களது செயல்கள் ஹெல்த்கேர் சேவையை கெடுத்துவிடும்,” என்கிறார்.

அடுத்த நடவடிக்கை அரசியல்வாதிகளை அகற்றுவது.

“நான் மற்றவர்களிடம் மறுப்பை தெரிவிக்கக் கற்றுக்கொண்டேன். என்னுடைய தொழில் அரசியல் சாராமல் இருப்பதை உறுதிசெய்தேன்.” என்றார் அவர்.

அதற்கு பதிலாக அவருக்கு நன்மை பயக்கும் விதத்தில் அரசியலைப் பயன்படுத்திக் கொண்டு தொண்டு புரியும் நடவடிக்கைகளில் ஈடுபடத் துவங்கினார். அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து பிளவுபட்ட உதவு மற்றும் அண்ணப்பிளவிற்கான அறுவை சிகிச்சையை 10,000 பேருக்கு நடத்தி வைத்தார். இந்த அறுவை சிகிச்சைகள் அனைத்தும் குழந்தைகளுக்கு நடத்தப்பட்டது. மருத்துவமனையின் இந்த சிறப்பான பணியை அங்கீகரித்து மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பாராட்டினார்.

“என்னுடைய தந்தை அரசியலில் ஈடுபட்டிருந்தார். இதனால் குறிப்பிட்ட குலம் சார்ந்தவர்கள் மருத்துவமனையில் இணைந்திருந்து ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்த இணைப்பை நான் முழுவதுமாக விலக்கினேன்.” என்றார்.

அரசியல்வாதிகள் அவரது அப்பாவிடம் சென்று புகாரளித்தனர். அவர் நிறுவனத்தின் எந்தவித செயல்பாடுகளிலும் தற்போது தலையிடுவதில்லை என்று பதிலளித்துவிட்டார். அனைத்தையும் சரிசெய்ய குருஷங்கர் மூன்றாண்டுகள் எடுத்துக்கொண்டார். 2016-ம் ஆண்டு நிறுவனத்தின் தலைவரானார். நிலைமை கட்டுக்குள் வந்தது. அன்றைய நிலையில் மருத்துவமனை 1000 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக விரிவடைந்தது. தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் மேலும் விரிவடைய திட்டமிட்டார். 100 படுக்கை வசதி கொண்ட சிறிய மருத்துவமனைகள் அடங்கிய தஞ்சாவூர் பகுதியை ஆராய்ந்தார். பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் கொண்ட மருத்துவமனைகள் இந்தப் பகுதியில் இல்லாததை அறிந்தார். 2009-2010-ம் ஆண்டில் தஞ்சாவூர் பகுதியில் நிலத்தை வாங்கி அந்த பகுதி மக்களுக்கு சேவையளிக்கும் விதத்தில் 250 படுக்கை வசதிக் கொண்ட மருத்துவமனையின் கட்டுமானப் பணியைத் துவங்கினார். ஆனால் நிதியை உயர்த்துவது எளிதான விஷயமாக இல்லை.

வளர்ச்சி

மதுரை மருத்துவமனையில் ஈட்டப்பட்ட பணத்தை எடுத்துக்கொள்ள குருஷங்கர் விரும்பவில்லை. மாறாக அவரது சொந்த பணத்திலிருந்து 70 கோடி ரூபாயை முதலீடு செய்தார். மேலும் 80 கோடி ரூபாய் வங்கியிலிருந்து கடன் பெற்றார்.

“2013-ம் ஆண்டில் என்னுடைய வங்கிக் கணக்கில் 80,000 ரூபாய் மட்டுமே இருந்தது. சிறப்பாகச் செயல்படமுடியுமா என்கிற கவலை எனக்கு ஏற்பட்டது.” என்றார் அவர்.

மருத்துவமனை திறக்கப்பட்ட முதல் மாதத்தில் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு 10,000 பேர் மருத்துவமனைக்கு வருகை தந்தனர். ஆனால் 12 சிறப்பு மருத்துவப் பிரிவும் புற்றுநோய் சிகிச்சை வசதியும் மருத்துவமனையின் வளர்ச்சிக்கு உதவியது. இன்று ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 1,20,000 பேருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. 2017 நிதியாண்டில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளது.

வெற்றி வசப்படும் என்கிற நம்பிக்கையோடு அதிக சவால்களை எதிர்கொள்ளத் தயாரானார் குருஷங்கர். மருத்துவமனைகளின் ஒன்றிணைந்த வருவாய் 350 கோடி ரூபாயாக இருந்தது.

வருங்கால வணிகத் திட்டம்

ப்ரீமியம் சேவையை வழங்கி அவர்கள் தங்களது ப்ராண்டை நிலைநிறுத்தியதால் புதிய மருத்துவமனைகள் வளர்ந்துகொண்டே இருந்தது. பத்தாண்டுகளில் வளர்ச்சியை சந்தித்தது க்ளௌட் நைன் மருத்துவமனைகள்.

”தொழிலில் செயல்முறைகளை திறம்பட நிர்வகித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் ப்ராண்டின் மதிப்பை உயர்த்தவேண்டும்.” என்றார் க்ளௌட் நைன் மருத்துவமனையின் எம்டி எம்ஏ ரோஹித். இந்த மருத்துவமனை நாடு முழுவதுமுள்ள 12 மையங்கள் வாயிலாக 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருவாய் ஈட்டுகிறது.

விலை மற்றும் ஆப்பரேடிங் மாதிரி காரணமாக வருவாய் வேகமாக வளர்ச்சியடைந்தது. மருத்துவர்களுக்கு நிலையான சம்பளம் வழங்கப்பட்டது. மருந்துகளை கையிருப்பு வைத்துக்கொள்ளவும் இயந்திரங்களை வாங்கவும் மருத்துவமனை தீர்மானித்தது. அந்தந்த பகுதியின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டே சிகிச்சைக்கான விலையை நிர்ணயித்தது. அப்போலோ மருத்துவமனை மற்றும் சில சிறிய மருத்துவமனைகளிடமிருந்து போட்டி நிலவியது. அப்போலோ மருத்துவமனையின் விலையைவிட பாதி விலையில் பொது மக்களுக்கு சிகிச்சையளித்தது. இது ஒர் ப்ரீமியம் மருத்துவமனை அல்ல.

அந்தப் பகுதியிலுள்ள மேல்தட்டு மக்களுக்கு சேவைபுரியும் நோக்கத்துடன் ஒரு ப்ரீமியம் மருத்துவமனையை மதுரையில் அமைக்க திட்டமிட்டுள்ளார் குருஷங்கர். மூன்றாம் நிலை நகரமான சேலத்தில் 250 படுக்கை வசதிகொண்ட மருத்துவமனையை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது இந்நிறுவனம். சென்னையில் ஒரு மருத்துவமனையை அமைக்கவும் திட்டமிட்டு வருகின்றனர்.

300 கோடி ரூபாய் முதலீட்டில் மதுரையில் ஒரு நர்சிங் கல்லூரியை அமைக்கத் திட்டமிட்டுள்ளார். இந்த கல்லூரிக்கு ஆதரவளிக்கும் விதத்தில் நியூசிலாந்து பல்கலைக்கழகத்துடன் இணையும் முயற்சியையும் எதிர்நோக்கியுள்ளார். ஆப்ரிக்க மாணவர்களுக்கு பயிற்சியளிக்க இந்த கல்லூரியை பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்த மாணவர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பச் சென்று மீனாட்சி மருத்துவமனையால் அமைக்கப்பட்ட டெலிமெடிசன் செண்டரில் நர்ஸ்களாக பணியாற்றலாம். நைரோபியிலுள்ள ஒரு மருத்துவமனையுடன் இணைந்து கென்யாவில் செயல்பட திட்டமிட்டுள்ளார் குருஷங்கர்.

மதுரையில் நடத்திய சமீபத்திய ஆய்வின் விளைவாகவே டெலிமெடிசன் என்கிற பகுதி முளைத்தது. சில வருடங்களுக்கு முன்னால் ஒரு பேருந்தை சிகிச்சை மையமாக மாற்றலாம் என்கிற எண்ணம் மருத்துவமனை மேனேஜ்மெண்டிற்கு தோன்றியது. மதுரை மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் இந்த பேருந்து சென்று மக்களுக்கு சிகிச்சையளிக்கும். ஒரு நர்ஸ் நோயாளியிடம் முக்கிய ஆய்வுகளை மேற்கொள்ள வீடியோ இண்டர்ஃபேஸ் வாயிலாக மருத்துவர் சிகிச்சையை பரிந்துரைப்பார். இந்தத் தகவல்கள் ISRO-வால் மருத்துமனைக்கு அனுப்பப்படும். இந்தச் சேவையை வழங்குவதற்காக மருத்துவமனை ISRO-வுடன் இணைவதற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் உதவினார். குருஷங்கர் தனது மருத்துவமனை சிறந்து விளங்குவதற்காக தேவையானவற்றை அடுத்தவரிடம் கேட்க சற்றும் தயங்கவில்லை. அவர் கூறுகையில்,

”இதே மாதிரியை வெளிநாட்டிலும் பின்பற்ற விரும்புகிறேன். இந்த முறை புத்திசாலித்தனம் நிறைந்த ஒரு ஸ்டார்ட் அப் தளத்தின் உதவியோ அல்லது இந்தியாவிலிருந்து ஆப்ரிக்காவிற்கு சேவைபுரியவேண்டும் என்கிற கனவை நனவாக்கக்கூடிய ஒருவரின் உதவியோ தேவைப்படலாம்.”

முதலீட்டாளர்களை அணுகவும் அவர் தயங்கவில்லை. அதே சமயம் குறைந்த விலையில் பராமரிப்பளிக்கவேண்டும் என்பதும் நீண்ட கால வளர்ச்சியுமே அவரது நோக்கம். இதே நோக்கத்தைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய முதலீட்டாளர்களுடன் மட்டுமே இணைந்துகொள்வேன் என்று எச்சரிக்கிறார்.

”குறுகிய கால லாபத்தை மனதில் கொண்டு செயல்படமாட்டேன். லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படுவோருடன் இணையமாட்டேன்.” என்றார் குருஷங்கர்.

அவரது விருப்பத்தின் அடிப்படையிலேயே அனைத்தையும் உருவாக்க விரும்பினார். ’Seven Habits of Highly Successful People’ என்கிற புத்தகமும் ’The Godfather’ என்கிற திரைப்படமும் அவருக்கு மிகவும் பிடித்தமானவை என்பதில் ஆச்சரியமில்லை. அவர் மிகவும் ரசிக்கும் திருவள்ளுவரின் வரிகளின் பொருள் இதோ:

தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்?

தகுதிமிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது.

மக்கள் அஞ்சும்படி தண்டனை தரும் ஆட்சி, நீதி நூல்களைக் கல்லாதவரின் துணையுடன் நிற்கும் நாட்டிற்கு அக்கூட்டத்தாரைவிடப் பெரிய சுமை இல்லை மருத்துவ சேவை.

தொழில்முனைவில் ஈடுபடும் ஒருவர் வெற்றியடைய சில விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்கிறார். அவை:

• உங்களுடைய தேவை என்ன என்பதை நன்கு அறிந்திருக்கவேண்டும். முக்கிய நோக்கத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தவேண்டும். நோக்கத்திலிருந்து சற்றும் விலகக்கூடாது.

• நிறுவனத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்களை விலக்கவேண்டும்.

• நிறுவனத்தின் வெற்றிக்கு பாடுபடும் மேனேஜ்மெண்டை முறையாக அங்கீகரிக்கவேண்டும்.

• உங்களுடைய நேரத்தை வீணாக்குபவர்களிடம் திடமாக உங்களது மறுப்பை தெரிவிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.

தஞ்சாவூர் மற்றும் மதுரை மருத்துவமனைகளின் ஒட்டுமொத்த வருவாய் 2014-2015-ம் ஆண்டில் 316 கோடி ரூபாயாக இருந்தது. 2015-2016-ம் ஆண்டில் 13 சதவீத வளர்ச்சியுடன் 350 கோடி ரூபாயை எட்டியுள்ளது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்த வளர்ச்சியை தக்கவைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம்.

நிறுவனத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதற்கான பல திட்டங்களை சிந்தித்து தொடர்ந்து குறிப்பெழுதி வருகிறார் குருஷங்கர். அவர் குளியரையில் செலவிடும் நேரத்தில் கூட பல யோசனைகள் அவருக்குத் தோன்றும் என்றும் அவற்றை உடனடியாக குறிப்பெழுதிக் கொண்டு அடுத்த நாளே மருத்துவமனையில் அதை செயல்படுத்த முயற்சியெடுப்பார் என்றும் தெரிவித்தார் அவரது மனைவி காமினி. இவரது தொழில்முனைவை இந்தியா முழுவதும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளார். இருப்பினும் யுவர் ஸ்டோரியுடன் பகிர்ந்துகொள்கையில்,

“மிகச்சிறந்த மருத்துவ சேவையை முதலில் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டும்.” என்றார் குருஷங்கர்.

ஆங்கில கட்டுரையாளர் : விஷால் கிருஷ்ணா