ஊரக இந்தியாவை சூரிய சக்தியில் ஒளிரவைக்கும் முனைப்பில் 'பூந்த்'

0

ஒவ்வொரு துளியும் சேர்ந்துதான் ஒரு சமுத்திரம் உருவாகிறது. ரஸ்தம் சென்குப்தா நிறுவிய "பூந்த் எஞ்சினீயரிங் அண்ட் டெவலப்மென்ட் பிரைவட் லிட்" (Boond) பின்பற்றும் தாரக மந்திரமே இதுதான். சமூக நிறுவனமான பூந்த், மாற்று எரிசக்தியை ராஜ்ஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் இதர வடமாநிலங்களில் பிரபலப்படுத்தி வருகிறது.

கடந்த 2010-ல் இருந்து இந்தியாவின் குக்கிராமப் பகுதிகளுக்கு மின்சாரம், சுத்தமான குடிநீர், கொசு ஒழிப்பு, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை பூந்த் வழங்கி வருகிறது. அத்துடன், சூரிய மின் விளக்குகள், சோலார் ஹோம் சிஸ்டம்ஸ், தண்ணீர் சுத்திகரிப்பு, சமையல் அடுப்புகள் முதலான தயாரிப்புகளுக்காக ஊரக தொழில்முனைவர்களை உருவாக்கி விநியோகத்திலும் பங்கு வகிக்கிறது. "அடிப்படை வசதிகள் இல்லாத ஊரகப் பகுதிகளில் மின்சார வசதிகளை அளிப்பதுடன், அங்குள்ள பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டு வருகிறோம். பல்வேறு சமூகங்கள், துறைகள் மற்றும் பகுதிகளுக்கு போதுமானதும் சரியானதுமான சூரிய மின்சக்தி மூலம் தீர்வுகளை அளிப்பதுதான் எங்களது முக்கிய நோக்கமாகும்" என்கிறார் ரஸ்தம்.

சமூக நிறுவனரும், 'பேஸ் ஆஃப் தி பிரமிட்' (பிஓபி - BoP) திட்ட நிபுணருமான ரஸ்தம், நீடித்த சமூக நிறுவன அமைப்புகள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு, அந்த அனுபவங்களை நேரடியாக களத்தில் நடைமுறைப்படுத்தினார். பிஓபி தயாரிப்புகள், சேவைகளுக்கான வடிவமைப்பிலும் தரவு பகுப்பாய்விலும் நிபுணரான இவர், சந்தை நுழைவு மற்றும் வளரும் சந்தைப் பொருளாதாரம் தொடர்புடைய பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் பலவற்றிலும் ஆலோசனை வழங்கி வருகிறார். ஐஎல்எஸ்இஏடியில் எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், இர்வின் - கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிகல் எஞ்சினீயரிங்கில் எம்.எஸ். முடித்தவர். மூன்று கண்டங்களில் வங்கித் துறையில் பணியாற்றிய இவர், ஸ்டாண்டர்ட் சார்ட்டட் (சிங்கப்பூர்), சின்கென்டா (சுவிஸ்) மற்றும் டிலாய்ட் கன்சல்டிங் (அமெரிக்கா) முதலான நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் இருந்தவர்.

"உலகின் பிற பகுதிகளில் வசிக்கும் மக்களைப் போலவே குக்கிராமங்களில் வசிப்பவர்களும் உரிய வாய்ப்புகளைப் பெற்று பொருளாதார மேம்பாட்டை அடைய வேண்டும் என்பதுதான் 'பூந்த்' திட்ட இலக்கு. இந்தச் சமூகத்தினருக்கு தேவையான தயாரிப்புகள், சேவைகளை சிறந்த விநியோக முறைகள் மூலமும், புத்தாக்க நிதித் திட்டங்கள் மூலமும் அளித்தால் மட்டுமே இவையெல்லாம் சாத்தியமாகும்" என்கிறார் ரஸ்தம்.

மேலும் அவர் கூறும்போது, "உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பாரா கிராமத்தில், மாதந்தோறும் ரூ.5,000-க்கும் குறைவான வருமானம் உள்ள 24 ஏழை விவசாயிகள் தங்களது வீடுகளுக்கு ப்ரீ-பெய்டு கார்டு மூலம் மின்சார வசதியை ஏற்படுத்த வழிவகுக்கப்பட்டுள்ளது. செல்போன் ரீசார்ஜ் போலவே இதையையும் பயன்படுத்திக்கொள்ளலாம். சூரிய மின் உற்பத்தி உபகரணம் வாங்குவதற்கு பொருளாதார வசதியில்லாத ஏழைக் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக இந்த அமைப்புமுறை செயல்படுத்தப்படுகிறது. அபிகோ-க்ரிடு (apico-grid) அமைப்பில் இருந்து இவர்கள் மின்சாரம் பெறுகின்றனர். சூரிய மின் உற்பத்தி உபகரணத்தை விற்பனை செய்யும் பூந்த் மூலம் இந்த 25 ஏழைக் குடும்பங்களும் பயனடைந்து வருகின்றனர். பாரா கிராமத்தில் ஒரு கிலோ வாட் சோலார் மின் உற்பத்தி பிகோ-க்ரிடு சிஸ்டத்தை பூந்த் நிறுவியிருக்கிறது" என்றார் ரஸ்தம்.

அபிகோ-க்ரிடு 800 வாட் சிஸ்டம் மூலம் 25 வீடுகளுக்கு சேவைகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் டைனமிக் மின் மீட்டர் அல்லது கன்ட்ரோல் பொருத்தப்பட்டிருக்கும். நுகர்வோர் தங்களது விருப்பம் போல் ப்ரீ-பெய்டு அல்லது போஸ்ட்பெய்டு வசதியை தேர்வு செய்துகொள்ளலாம். ரிசார்ச் கார்டு மூலம் மின்வசதியைப் பெற விரும்புவோர், ரிசார்ஜ் கார்டுகளை வாங்கிப் பயன்படுத்தலாம். "மைக்ரோ-க்ரிடு சிஸ்டம் திட்டத்தின் மூலம் இரண்டு மின்விளக்குகள், ஒரு மொபைல் சார்ஜர் மற்றும் ஃபேன் ஆகியவற்றுக்கு மின் வசதி அளிக்கப்படுகிறது. ஒவ்வோரு வீட்டிலும் மீட்டர் இருக்கும். தேவையான வாட்டேஜ்களுக்கு ஏற்ப ப்ரீ-பெய்டு மூலம் மின் வசதியைப் பெற்றுக்கொள்ளலாம்" என்று அவர் விவரித்தார்.

நுகர்வோர்கள் தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள பூந்த் சார்ஜிங் நிலையங்களுக்குச் சென்று ப்ரீ-பெய்டு கார்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் தங்கள் வீடுகளுக்குத் தேவையான மின்சாரத்தை வாங்கும் அதேவேளையில், அதற்கேற்ப மின் உற்பத்தி உபகரணத்தின் பயன்பாட்டின் நேரத்தையும் நிர்ணயித்துக்கொள்ள வழிவகுக்கப்படுகிறது. ஒவ்வொரு ரீசார்ஜ் கார்டிலும் தங்களுகுத் தேவையான வாட்டேஜ்களை ஒட்டி, ரகசிய குறியீடுகள் இருக்கும். இந்த வழிமுறையைப் பின்பற்றி, ராஜஸ்தானிலும் உத்தரப் பிரதேசத்திலும் 275 குடும்பங்கள் பயனடையும் வகையில், மே 2014-ல் பூந்த் 11 அபிகோ-க்ரிடு சிஸ்டங்களை நிறுவியிருக்கிறது. ''இந்த மின் உற்பத்தி அமைப்புகள் மூலம் மண்ணெண்ணெய்யை சார்ந்திருக்க வேண்டிய நிலையில் இருந்து ஊரக மக்கள் விடுவிக்கப்படுகிறார். அவர்களுக்கு தூய்மையான மின்சக்தி தங்களால் வாங்கக் கூடிய மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த ஆண்டு முடிவுக்குள், நிறுவி பயன்பாட்டில் உள்ள க்ரிடு சிஸ்டங்களின் எண்ணிக்கையை 50 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்" என்றார் ரஸ்தம்.

இத்துடன், அப்கோ-க்ரிடின் ப்ரீ-டிஃபைண்ட் லோடு மாடல் ஒன்றையும் பூந்த் மேம்படுத்தியுள்ளது. முந்தைய அமைப்பு முறையில், நுகர்வோர் விநியோக லைன்களைப் பயன்படுத்துவர். ஆனால், ஒரு குறிப்பிட்ட அளவு மின்சாரத்துக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்துவர். இந்த மேம்படுத்தப்பட்ட அமைப்பு முறையில், ஒவ்வொரு வீட்டிலும் மீட்டர்கள் பொருத்தப்படும். க்ரிடு உடனான இணைப்பை நிறுத்தும்போது பயன்படுத்திய மின்சார விவரம் காட்டும். தாங்கள் பயன்படுத்திய மின்சாரத்துக்கு உரிய தொகையை செலுத்த வழிவகுக்கப்படுகிறது.

அபிகோ-க்ரிடு உடனான ஃபிக்சட் பேமன்ட் முறையில், நுகர்வோர் தங்களது வீட்டில் மின் வசதிக்காக பேட்டரிகளை பூந்த் மத்திய சார்ஜிங் நிலையங்களுக்குக் கொண்டு சென்று சார்ஜ் செய்துகொள்ள வேண்டும். இதற்கு, மாதம்தோறும் ரூ.50 முதல் ரூ.100 வரை செலுத்த வேண்டும். மின்வசதி இல்லாமலும், மோசமான மின்வசதிகளுடனும் நாடு முழுவதும் சுமார் 20 கோடி மக்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்தித் தருவதுடன் ஒரு நிறுவனமாக பயனடையவும் வாய்ப்புகள் நிறைந்துள்ளன. மக்களில் பெரும்பாலானோர் தினமும் ரூ.200 முதல் ரூ.400 வரையில் சம்பாதிக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குத் தேவையான மின் இணைப்புகள் இல்லை என்று ரஸ்தம் சுட்டிக்காட்டுகிறார்.

இதுபோன்ற மின் திட்டங்கள் மூலம் சமூக மாற்றத்தை உண்டாக்க முடியும். உ.பி.யின் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள ஹசன்கஞ்ச் பகுதியில் பால் உற்பத்தி செய்தும், பால் விநியோகத்திலும் ஈடுபட்டு வருபவர் 27 வயது அமித் குமார். மின்சார வசதி இல்லாததால் பாலின் தரத்தின் அடிப்படையில் சரியான விலையை நிர்ணயிக்க முடியாத நிலையில் மிகவும் சிரமப்பட்டார். எலக்ட்ரானிக் முறையில் பால் தரத்தைச் சோதிக்கும் உபகரணம் செயல்படும் வகையில், 224 வாட் சூரிய மின் உற்பத்தி உபகரணத்தை பூந்த் அமைத்துத் தந்தது. இதன் மூலம் அமித் குமாரின் வருவாய் 30-ல் இருந்து 40 சதவீதம் வரை உயர்ந்தது. அத்துடன், ஒவ்வொரு வீட்டிலும் மூன்று மின்விளக்குகள் மற்றும் ஒரு சார்ஜர் இயங்கும் வகையில், 40 வாட்ஸ் சூரிய மின் உற்பத்தி உபகரணத்தையும் பூந்த் அமைத்துத் தந்தது.

"நம் நாட்டிலுள்ள ஊரகப் பகுதிகளில் மின் வசதி தேவைப்படும் வீடுகளின் எண்ணிக்கை குறித்தும், அவர்களால் சூரிய மின் உற்பத்தி தயாரிப்புகளுக்கு எவ்வளவு செலவிட முடியும் என்பது பற்றியும் தொடர்ச்சியாக கணக்கெடுப்பு நடத்தி வருகிறோம். தங்கள் மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு உரிய சோலார் சிஸ்டத்தை அவர்கள் வாங்குவதற்கு வழிவகுக்கப்படும். ஆனால், அவர்களுக்கு சூரிய மின் தயாரிப்புகளை வாங்குவதற்காக வங்கி அல்லது அமைப்புகளில் கடன் கிடைக்கச் செய்வதுதான் பெரும் சவாலாக உள்ளது.

பூந்த் இதுவரை 7500 சூரிய மின் உற்பத்தி உபகரணங்களை விறப்னை செய்துள்ளது. அதன் மூலம் ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள 50,000-க்கும் மேலான குடும்பங்கள் பயனடைந்துள்ளனர். இந்த ஊர்களில் உள்ள குழந்தைகள் மின்சாரத்தை சேமிப்பதற்காக சீக்கிரமாக தூங்குகிறார்கள். ஆனால், மாலை நேரங்களில் போதிய அளவில் அவர்களால் வீட்டுப் பாடத்தைப் படிக்க முடிகிறது. சூரிய மின் உற்பத்தி உபகரணத்தைப் பொருத்திக்கொள்வதன் மூலம் ஒரு கடைக்காரர் 30 சதவீத கூடுதல் விற்பனையைப் பெற முடியும்.

நாங்கள் 2015 இறுதிக்குள் 10 மாவட்டங்களில் தடம்பதிக்க திட்டமிட்டுள்ளோம். நடப்பு நிதியாண்டுக்குள் 1500 கிலோ வாட் மின்திறனை நிறுவுவதன் மூலம் பல்வேறு துறைகள் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதன்மூலம் ஒரு லட்சம் தனி நபர்களும், சிறு தொழில் நிறுவனர்கள் பலரும் பயனடைவார்கள்" என்றார் சென்குப்தா. தியேட்டர், நடிப்பு மற்றும் நாடக இயக்கம் முதலான கலை ஈடுபாட்டுக்கு பகுதி நேரத்தை ஒதுக்கும் இவர், இதுவரை 35 நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். மேம்பாட்டுக்கு நிலையான மாதிரிகள் அவசியம் என்றும், அதன்மூலம் சமூக மாற்றத்தை உருவாக்க முடியும் என்று நம்புபவர். இதையொட்டி, இந்திய பல்கலைக்கழங்களுக்கு வகுப்புகள் நடத்தியும், சர்வதேச மேம்பாட்டு முகமைகளுக்கு ஆலோசனை வழங்கியும் சமூகப் பொறுப்பு மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த முக்கியத் தகவல்களைப் பரப்பி வருகிறார்.

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Stories by கீட்சவன்