குப்பை மலையை அகற்ற முயற்சி செய்யும் பெங்களூர் 'காலிபாட்டில்'

0

மறுசுழற்சி மூலம் சம்பாதிக்கமுடியும் என என்றாவது நீங்கள் நினைத்தது உண்டா? நடந்தால் நன்றாக இருக்கும் தானே? பெங்களூரைச் சேர்ந்த ’காலிபாட்டில்’  தொடக்க நிறுவனம் குப்பையை பணம் ஆக மாற்றுகிறது.

நிறுவனர் நவீன் மரியான்
நிறுவனர் நவீன் மரியான்

வெறும் குப்பை மறுசுழற்சி மூலமே சம்பாதிக்கிறது இந்த ஸ்டார்ட்-அப். தெளிவாகக் கூறினால், வாடிக்கையாளர்கள் குப்பைகளை விற்று பணம் சம்பாதிக்கலாம், அதைப்பெறும் இந்நிறுவனம் மறுசுழற்சி செய்து லாபம் ஈட்டுகிறது.

மாற்றத்தின் தொடக்கம்

நிறுவனர் நவீன் மரியான் சவாலை எதிர்நோக்கும் ஒருவர். முதலில் ஒரு சமையல் வல்லுனராக தன் தொழில் பயணத்தை தொடங்கினார் இவர். அதனை தொடர்ந்து ’பிளேட் அப்’ என்னும் கேட்டரிங் சேவையை 2013-ல் துவங்கினார். ஆனால் இவரது கேட்டரிங் சேவை நினைத்த அளவு முன்னேறாமல் 2015-ல் மூடப்பட்டது.

தான் தொழிலில் ஈடுப்பட்டுக் கொண்டு இருந்த போதே மறுசுழற்சி திட்டத்தை பற்றி ஆராய்ச்சி செய்திருந்தார் அது தான் தற்போதைய ’காலிபாட்டில்’. டிசம்பர் 2016-ல் முழுமையாக இந்த திட்டத்தை கையில் எடுக்கும் முன் சிறு காலம் ஜோமாட்டோவில் பணிபுரிந்திருக்கிறார் இவர். அதன் பின் தன் ஐந்து நண்பர்களுடன் இணைந்து ஐந்து வெவ்வேறு இடத்தில் காலிபாட்டில் நிறுவனத்தை துவங்கினார்.

“தற்போது இந்தியாவில் கழிவு மேலாண்மை என்பது ஒரு ஒழுங்கற்ற பிரிவாகும். காலிபாட்டில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தொழிநுட்பம் மூலம் கழிவுகளை ஒருங்கிணைத்து, மறுசுழற்சி செய்ய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மேலும், இது வேலை வாய்ப்பையும் அதிகரிக்கும்,”

என தெரிவிக்கிறார் நிறுவனர் நவீன் மரியான். பெங்களூரில் மட்டும் தோராயாமாக 5,000 டன் கழிவுகள் உற்பத்தி ஆகிறது, அதில் 10 சதவீதம் காகிதம், அட்டை, கண்ணாடி, உலோகம், பிளாஸ்டிக், மின்னணு பொருட்கள் என மறுசுழற்சி செய்யக் கூடிய பொருட்களாகும். இதை பயன்படுத்திய நவீன் தன் நிறுவனத்தை நடத்துகிறார்.

மறுசுழற்சி செய்யும் கதை

வாடிக்கையாளர்கள், பெரும்நிறுவனர்கள் மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளை இந்நிறுவனத்திற்கு வழங்க இவர்கள் ஆன்லைன் பதிவையும் துவங்கியுள்ளனர். அந்த ஆன்லைன் தளத்தில் பதிவு செய்தால் காலிபாட்டில் நிறுவனம் நேரடியாக வந்து கழிவுகளை பெற்றுக்கொள்ளும்.

கழிவுகளை பெற ஆன்லைன் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ பதிவு வந்தால் இவர்களது குழு டிஜிட்டல் எடை இயந்திரம் மற்றும் சீருடையுடன் வாடிக்கையாளர்களின் வீட்டுக்குச் சென்று அவர்கள் தரும் குப்பையை எடை பார்த்து அதற்கேற்ற பணத்தையும் தருகின்றனர். தானமாக கொடுக்கும் ஒரு வாய்ப்பையும் அளிக்கின்றனர். வாங்கிய கழிவுகளை மென்மையான பிளாஸ்டிக், பாட்டில்கள், கண்ணாடி, அட்டை பொருட்கள், மற்றும் உலோகம் என தனித்தனியாக பிரிக்கின்றனர். அதன் பின் பெங்களூர், மைசூர் மற்றும் ஹைதராபாத் சுற்றியுள்ள மறுசுழற்சி செய்யும் தொழிற்கூடத்திற்கு சாலை அல்லது இரயில் வழியாக அனுப்பி வைக்கப்படுகிறது. வடக்கு பெங்களூரில் இரண்டு கிடங்குகள் வைத்து கழிவு மேலாண்மையை பார்த்துக்கொள்கிறது.

“ஃபிரெஷ்மெனு, கார்டிசன், ஹவுஸ் ஜாய் மற்றும் ஜஸ்ட் டையல் உடன் கூட்டு வைத்துள்ளது இந்நிறுவனம். மேலும் வீட்டிற்கு நேரடியாக சென்று கழிவுகளை பெற Urdoorstep உடன் இணைந்துள்ளோம். 18 உணவகங்கள் மற்றும் விடுதிகள், மூன்று சுழற்சி நிறுவனங்கள், 34 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் 12 சேவை அபார்ட்மெண்ட்களுடன் இணைந்துள்ளோம்," என்றார்.

குறைந்த பயணம்

தற்பொழுது 15 பேர் கொண்ட குழுவாக காலிபாட்டில் இயங்கி வருகிறது, அதில் இரண்டு பேர் தொழில்நுட்ப குழுவிலும், கழிவுகளை பெற ஆறு பேர் கொண்ட குழு, இரண்டு ஓட்டுனர்கள், கழிவு பிரித்தல் குழு என பிரிந்து பணிபுரிகின்றனர். இன்னும் இந்த குழுவை பெங்களூர் முழுவதும் விரிவாக்க உள்ளார் நவீன்.

“இது வரை, எங்கள் குழு இந்த நகரத்தில் மட்டும் 119 டன் குப்பைகளை மறுசுழற்சி செய்துள்ளது. மேலும் 4256 வாடிக்கையாளர்கள் எங்களுடன் பதிவு செய்துள்ளனர், அதில் 73% வழக்கமான வாடிக்கையாளர்கள். ஒவ்வொரு மாதமும் 22% வரும் பதிவுகள் உயர்ந்து கொண்டே வருகிறது,” என்கிறார் நவீன்.
“பல ஸ்டார்ட்-அப் போலவே காலிபாட்டில் இன்னும் அந்த பிரேக் ஈவன் புள்ளியை தொட வில்லை. ஆனால் நாங்கள் மெதுவாக அதை நோக்கி நகர்கிறோம், வரும் ஜுன் மாதத்திற்குள் அந்த இலக்கை அடைந்து விடுவோம்.”

கழிவு மேலாண்மையே நவீனின் முக்கிய குறிக்கோளாக இருந்தால் கூட, இதன் மூலம் உடல் மற்றும் சமூக ரீதியாக பின் தங்கியோருக்கு வேலை வாய்ப்பை அளிக்க விரும்புகிறார். இதை விரிவாக்க இவர் பல ஆஃப்லைன் கடைகளை திறக்க விரும்புகிறார் குப்பையை கொடுத்து பணம் பெரும் வசதியை அந்த கடைகளில் அமைக்க உள்ளார். மேலும் இந்த கடைகளில் கல்லூரியை பாதியில் விட்டவர்கள், ஒரு பெற்றோரை மட்டும் கொண்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை பணிக்கு அமர்த்த உள்ளார்.

”காலிபாட்டிலின் கதை தண்ணீர் இல்லா பாலைவனத்தில் பயணம் செய்து ஒரு வசந்த காலத்தில் குளிர்ந்த மற்றும் தெளிவான நீரை கண்டது போல,” என பெருமையுடன் முடிக்கிறார் நவீன்.

ஆங்கில கட்டுரையாளர்: செளரவ் ராய் | தமிழில்: மஹ்மூதா நெளசின்