குண்டு, ஒல்லி என்று பெண்கள் உடலமைப்பை விமர்சிப்பதை உடனே நிறுத்துங்கள்! 

பெண்களின் உடலமைப்பு குறித்து அவமானப்படுத்தும் வழக்கத்தை ஒட்டுமொத்தமாக தடுத்து நிறுத்தவேண்டும்!

0

ஒருவரின் உடலமைப்பு குறித்த கேலியான விமர்சனங்களை முன்வைப்பது பொதுவாக நடைமுறையில் இருக்கும் ஒரு அம்சமாகும். குறிப்பாக சோனாக்ஷி சின்ஹா, சோனம் கபூர், தீபிகா படுகோன், ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன், சமீபத்தில் சரண்யாமோகன் என பலர் இப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

பெரும்பாலும் பெண் பிரபலங்களை மையப்படுத்தியே இவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்படும். ஏனெனில் பெண்ணின் உடல்வாகு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அவர்களே முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகின்றனர்.

பிரபலங்கள் ’சரியான உடலமைப்பு’ என்கிற வார்த்தைக்கு பொருத்தமானவர்களாக இருக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது. இதற்குக் காரணம் அவர்கள் தங்களை அவ்வாறே வெளிப்படுத்திக் கொள்கின்றனர். இதனால் இந்த விதியிலிருந்து சற்றே மாறுபட்டாலும் அவர்களது உடலமைப்பு குறித்த கேலியான விமர்சனங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.

இத்தகைய விமர்சனங்கள் பிரபலங்களுக்கு மட்டுமல்ல. நாம் அனைவருமே ஏதோ ஒரு தருணத்தில் இதை அனுபவித்திருப்போம். நம்மில் பெரும்பாலானோர் நமது உடலமைப்பு குறித்த ஒரு சாதாரணமாக விமர்சனத்தையாவது நிச்சயம் கடந்து வந்திருப்போம். சில சமயம் நமது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள்கூட கேலியாக விமர்சித்திருப்பார்கள். அது நம்முடைய மன ஆரோக்கியத்தை எந்தளவிற்கு பாதித்திருக்கும் என்பதை உணர்ந்திருக்க மாட்டார்கள். உங்களில் சிலர் உங்களையேகூட கேலியாக விமர்சித்துக்கொண்டிருப்பீர்கள்.

ஒருவர் தனது உடலமைப்பைக் கேலி செய்து கொள்வதன் மூலம் சுயமதிப்பையும் தன்னம்பிக்கையையும் அழித்துக்கொள்கிறோம் என்பதை உணராமல் மிகவும் சாதாரணமாக அப்படிப்பட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகம் விமர்சிக்கப்படுகின்றனர்

உடலமைப்பு சார்ந்த கேலிகளுக்கு ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகம் ஆளாகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பிஎம்ஐ 30-35 இருக்கும் ஆண்களைக் காட்டிலும் அதே பிஎம்ஐ கொண்ட பெண்கள் மூன்று மடங்கு அதிகமாக தங்களது உடல் எடை குறித்த பாரபட்சமாக விமர்சிக்கப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

ஏன் பெண்கள் இப்படிப்பட்ட நிலைக்கு தள்ளப்படுகின்றனர்?

ஆண்களைக் கவரும் விதத்தில் ஒரு குறிப்பிட்ட உடல்வாகு கட்டாயம் பெண்களுக்கு இருக்கவேண்டும் என்று அவர்களது குழந்தைப் பருவம் முதலே பெண்களின் மனதில் பதியவைத்து விடுகின்றனர்.

36-24-36 என்கிற உடலமைப்பு கொண்ட பெண்தான் முன்னுதாரமாக விளங்கும் பெண் என்கிற கண்ணோட்டத்தையே நமது சமூகம் பிரதிபலிக்கிறது. இந்த எண்களைக் குறிப்பிட்டு இதுதான் ஒரு பெண்ணுக்கு பொருத்தமான அளவு என்று சமீபத்தில் சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி டெல்லி காவல் துறையினர் அந்த வெளியீட்டாளரின் மீது எஃப்ஐஆர் பதிவு செய்தனர்.

உடலமைப்பு குறித்து அவமானப்படுத்துவது என்றால் என்ன?

ஒருவரது உடலின் வடிவத்தையோ அல்லது அளவையோ குறித்து கேலியான கருத்துக்களை வெளிப்படுத்தி அவர்களை அவமானப்படுத்துவதே உடலமைப்பு சார்ந்த அவமானப்படுத்தும் செயலாகும். அகராதிகள் அவ்வாறே விவரிக்கிறது.

உடல் சார்ந்த கேலி என்றதும் பொதுவாக உடல்எடை சார்ந்தே விமர்சிக்கப்படும். பெரும்பாலும் பெண்களே ‘அதிக உடல் எடை கொண்டவர்கள்’ என்று இரக்கமின்றி விமர்சிக்கப்படுவார்கள்.

அதிக உடல் எடை கொண்ட பெண்களை களங்கப்படுத்தும் விதத்தில் விமர்சிப்பது ஊடகங்களில் பிரபலமாக இருப்பினும் மற்றொருபுறம் சாதாரணப் பெண்களும் இதிலிருந்து தப்புவதில்லை.

அதே போல் பெண்கள் ஒல்லியாக இருப்பதற்காக கேலிக்கு உட்படுத்தப்படும் தருணங்களும் உண்டு. ஆனால் குண்டாக இருப்பதாக விமர்சிக்கப்படுவதுடன் ஒப்பிடுகையில் இதற்கான தாக்கம் சற்று குறைவானதே. ஒரு பெண்ணை சமூகத்தின் தரநிலையுடன் ஒப்பிட்டு ’அதிக உடல் எடையுடன்’ இருப்பதற்காக அவரை வருத்தப்பட வைப்பது தவறு. அதேபோல குறைந்த உடல்எடையுடன் இருப்பதற்காக வருத்தப்பட வைப்பதும் தவறான செயலாகும்.

உடலமைப்பு குறித்த கேலிகளுக்கு உட்படுத்தப்படுவதை எவ்வாறு தடுப்பது?

91 சதவீத பெண்கள் தங்களது உடலமைப்பு குறித்து வருத்தப்படுகின்றனர். உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்கின்றனர். ஊடகங்களில் பொருத்தமான உடலமைப்பு என்று சித்தரிக்கப்படும் பெண்களைப் பார்க்கும்போது அவர்கள் தங்களது உடலமைப்பு குறித்து வருத்தப்படுவதாக 80 சதவீத பெண்கள் தெரிவிக்கின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இப்படிப்பட்ட அவமானங்களை தடுப்பதற்கு முதலில் உங்களிடமிருந்துதான் துவங்க வேண்டும். ஒருவர் தனது உடலமைப்பில் அதிக நம்பிக்கையுடன் இருப்பாராயின் அவர் மற்றவர்களையும் மதிப்பிடுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும். ஏனெனில் நமது எதிர்பார்ப்புகளை அவர்கள் பூர்த்திசெய்யத் தவறும்போதே நாம் அவர்களை மதிப்பிடுகிறோம். உங்களது உடல்எடை குறித்து உறவினர் ஒருவர் உங்களுடைய ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தி திட்டினார் என்றால் ஒருவேளை அவர் தனது உடல்சார்ந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருக்கமாட்டார் என்றே நாம் புரிந்துகொள்ளலாம்.

”அழகிற்கான தரநிலைகள் குறித்த பல கருத்துக்கள் சமூகத்தில் நிலவுகிறது. அவற்றுடன் சரியாக பொருந்துவதற்கு மக்கள் உடலளவிலும் உணர்ச்சி ரீதியாகவும் மனஅழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக குறைவான சுயமரியாதை, மனஅழுத்தம், உணவு சீர்குலைவு, கட்டாய உடற்யிற்சி போன்ற நிலைகள் ஏற்படத் தூண்டுதலாக அமைகிறது. அடுத்தவரின் மதிப்பீடுகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவமானது அவர்களது மன ஆரோக்கியத்தையும் சீர்குலைக்கிறது. துறைசார்ந்த நிபுணர்களிடம் இதுகுறித்து வெளிப்படையாக பேசி ஆலோசனைகளைப் பெறலாம். ஆகவே,

“நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே நம்மை ஏற்றுக்கொள்ளவேண்டும். அத்துடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நமக்காக பின்பற்றவேண்டுமே தவிர மற்றவர்களை திருப்திப்படுத்துவதற்காக அல்ல,”

என்கிறார் சமீபத்தில் உளவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்ற வந்தனா செசில்.

சமூக மாற்றம்

உடலமைப்பு குறித்த அவமானங்களுக்கு தனிப்பட்ட அளவில் சவால் விடுக்கப்பட்டாலும் இதை சமூக அளவில் அணுகுவது அவசியமாகும்.

ஊடகங்களும் சமூகமும் யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகளையே ஊக்குவிக்கிறது. அறுவை சிகிச்சை, மேக்அப், ஃபோட்டோஷாப் போன்றவற்றால் மட்டுமே சாத்தியப்படும் ஒரு உடல்வாகை சமூக ஊடகங்கள் குறிப்பாக இன்ஸ்டாக்ராம் என்கிற தளம் ஊக்குவிக்கிறது. ஒருவர் ஆரோக்கியமாக இருக்கையில் அவரது தோற்றம் குறித்து கவலை கொள்ளவேண்டிய அவசியமில்லை. 

“தங்களது உடல்வாகு சரியாக இல்லை என்று மற்றவர்கள் கிண்டல் செய்வதால் பல சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் தங்களது உடல்வாகை விரும்புவதில்லை.” என்கிறார் சமீபத்தில் XIC-யில் பட்டம்பெற்ற 22 வயது நிகிதா சத்திராஜு.

பெண்கள் இப்படிப்பட்ட தோற்றத்தில்தான் இருக்கவேண்டும் என்பதற்கான சமூகத்தின் பார்வையை மக்கள் தடுத்து நிறுத்தவேண்டும். திரைப்படங்கள், விளம்பரங்கள், நாளிதழ்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றை உருவாக்குபவர்களை அணுகி அனைத்து வடிவம் மற்றும் அளவுகளில் இருக்கும் பெண்களையும் போற்றுவதற்கு உதவச்செய்வதே இதற்கான எளிதான வழிமுறையாகும்.

பொருத்தமான சரியான உடலமைப்பைப் பெற விரும்பும் 40 சதவீத பதின்பருவ பெண்களுக்கு உணவு குறைபாடுகள் பிரச்சனை ஏற்படுவதாகவும் அவ்வாறு பெற இயலாத நிலையில் விரக்தியடைந்து விடுவதாகவும் 2015-ம் ஆண்டின் ஆய்வு தெரிவிக்கிறது.

இதைச் சரிசெய்ய பிரபலங்கள், ப்ராண்டுகள், புதிய ஃபேஷனை அறிமுகப்படுத்துபவர்கள் போன்றோர் உடலமைப்பு சார்ந்து அவமானங்களுக்கு எதிராக குரல் கொடுக்கவும், அனைத்து நிறம் மற்றும் அளவுகளில் இருக்கும் பெண்களையும் போற்றவும் சமூகஊடகங்கள் என்னும் தளத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

ஒட்டுமொத்தமாக அனைத்து அளவுகளிலும் இருக்கும் ஆண் மற்றும் பெண்களை போற்றும் கலாச்சாரம் உருவாகவேண்டும் என்று விரும்பினாலும் முதலில் தனிப்பட்ட நபரிடமும் அவரது மனநிலையிலும் உண்மையான மாற்றம் ஏற்பட வேண்டும். அடுத்தவரின் மதிப்பீட்டின் அடிப்படையில் உங்களை நீங்களே அவமானப்படுத்திக் கொள்வதை நிறுத்துங்கள்.

உங்களைப் பற்றியோ அல்லது அடுத்தவரைப் பற்றியோ நீங்கள் உருவாக்கிக்கொள்ளும் தரநிலைகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடுவதை நிறுத்திவிடுங்கள். குண்டாகவோ அல்லது ஒல்லியாகவோ இருக்கும் உடலமைப்பு குறித்த நகைச்சுவையான பேச்சுக்களையும் நிறுத்துங்கள். உங்களது ஹோம்பேஜில் காணப்படும் இன்ஸ்டாக்ராம் மாடல்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதை நிறுத்துங்கள். அவர்களது உடல்வாகுதான் மிகச்சரியானது என்கிற எண்ணத்தை மாற்றுங்கள். 

உங்களையும் உங்களது உடலையும் அதன் குறைபாடுகளுடன் அவ்வாறே ஏற்றுக்கொண்டு நேசியுங்கள். கண்ணாடியில் பார்க்கும் உங்களது உருவத்தை அப்படியே ரசிக்கவும். நீங்கள் எப்படிப்பட்டவரோ அவ்வாறே இருங்கள். ஒரே மாதிரியான எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் தூக்கியெறிந்து விடுங்கள். ஏனெனில் நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதுதான் உங்களுக்கான உண்மையான அடையாளம். அதை யாரும் மாற்ற அனுமதிக்காதீர்கள்.

ஆங்கில கட்டுரையாளர் : சஞ்சனா ரே