வெள்ளத்தால் இருண்ட வீடுகளுக்கு வாட்டர்ப்ரூவ் எல்இடி விளக்குகள் உருவாக்கிய பொறியியல் மாணவர்கள்!

வெள்ளம் பாதித்த கேரள மக்களுக்கு எடையில்லா ஒளிரும் விளக்குகளை உருவாக்கி வருகின்றனர் திருவனந்தபுரம் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள். 

0

வரலாறு காணாத பெருவெள்ளத்தால் இந்திய வரைபடத்தில் புதிதாக ஒரு கடல் உருவாகியது போல காட்சியளிக்கிறது கேரளா. திரும்பிய திசையெங்கும் தண்ணீர், பல லட்சங்கள் செலவழித்து கட்டிய வீடுகள் இடிந்து விழுந்து சுக்கு நூறாகிப் போனது. உயிர் பிழைத்தால் போதும் என்று வீடுகளை விட்டு வெளியேறி தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கி இருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள். ஒரு வாரத்தில் பேயாட்டம் போட்டு விட்டுப் போன கனமழையால் கேரள மாநிலத்தில் பலரது வாழ்க்கை இருண்டுகிடக்கிறது. 

உடைகள், உடைமைகளை இழந்து நிர்க்கதியாய் நிற்கும் அவர்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் மட்டுமின்றி ஐக்கிய அரபு நாட்டில் இருந்தும் உதவிக்கரம் நீட்டப்பட்டு வருகிறது.

படஉதவி : முகநூல்
படஉதவி : முகநூல்

மழை ஓய்ந்தாலும் கேரள மாநிலத்தின் பல பகுதிகள் இன்னும் இருள் சூழ்ந்தே இருக்கிறது. கேரளாவிலும் மழையால் அதிகம் பாதிக்கப்படாத இடங்களில் இருந்து தங்கள் மாநில மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர் பலரும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரளாவின் பல்வேறு பகுதிகளில் மையம் வைத்து எண்ணற்ற பொருட்களை விநியோகம் செய்து வந்த மாணவர் குழுவினர். ஆக்கப்பூர்வமான ஒன்றை தற்போது உருவாக்கி விநியோகம் செய்து வருகின்றனர்.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பேர்டன் ஹில் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் தண்ணீர்பட்டாலும் தொடர்ந்து செயல்படக்கூடிய எல்இடி விளக்குகளை உருவாக்கி வெள்ளத்தால் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். இந்தக் கல்லூரியின் கேன்டெலா திட்டத்தை ஐஈஈஈ மாணவர்கள் செய்து வருகின்றனர். அதிக நேரம் நீடித்து நிற்கக் கூடிய குறைந்த வோல்டேஜ் விளக்குகளை மாணவர்களை உருவாக்கியுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இரவு நேரங்களில் மிகுந்த அவதிக்குள்ளாவதாகவும், அவர்களுக்கு விநியோகம் செய்யும் அளவில் மெழுகுவர்த்தி, தீப்பெட்டிகள் கிடைப்பதில் இதற்கு பற்றாக்குறை இருப்பதையும் அறிந்த மாணவர்கள் இதற்கு மாற்றாக ஏதேனும் கண்டறிய வேண்டும் என்பதன் விளைவாக அவர்கள் கண்பிடித்தது தான் இந்த கேன்டெலா.

படஉதவி : முகநூல்
படஉதவி : முகநூல்

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கும் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாததால் அச்ச உணர்வு ஏற்படுகிறது. மேலும் வெள்ளநீர் வடிந்த பகுதிகளில் மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். 

ஒரு வாரமாக வெள்ளம் சூழ்ந்திருந்த வீட்டில் மின்சாரம் இருக்காது மேலும் சிலிண்டர் லீக்கேஜ் உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே மெழுகுவர்த்தி எடுத்துச் செல்வது ஆபத்தானது, அவர்களின் பாதுகாப்பு கருதியே எல்இடி விளக்குகள் வடிவமைத்து கொடுக்கப்படுவதாக கேன்டெலா குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது 50 மாணவர்கள் சேர்ந்து இதுவரை 900 எல்இடி விளக்குகளை உற்பத்தி செய்துள்ளனர். இவை அனைத்தும் கேரளா முழுவதும் உள்ள அரசின் வெள்ள நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முகாம்களில் தங்க வரும் மக்களும் இந்த கேட்ஜெட்டுகளை வாங்கி விநியோகம் செய்து வருகின்றனர்.

படஉதவி  : முகநூல்
படஉதவி  : முகநூல்

இந்த கேட்ஜெட் ட்ராப் டெல்ட், வாட்டர்ப்ரூவ் டெல்ட் என அனைத்து பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது என்பதால் பாதுகாப்பானது. சுமார் 15 மணி நேரம் ஒளிர்ந்து இந்த எல்இடி விளக்கு வெளிச்சம் தரும் என்பதே இதன் சிறப்பம்சம். 

கல்லூரி நிதியையும், முன்னாள் மாணவர்கள் செய்த நிதியுதவியையும் பயன்படுத்தி பொருட்கள் வாங்கப்பட்டு தற்போது எல்இடி விளக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கல்லூரி நிதி குறைவான அளவிலேயே ஒதுக்கப்படுவதால் முழுவதும் அதனை சார்ந்தே கேன்டெலா உற்பத்தி செய்வதில் சிக்கல் இருக்கிறது. எனவே நன்கொடை தர விருப்பம் இருப்பவர்களும், எந்த பகுதிக்கு இந்த கேட்ஜெட்டுகளை அனுப்ப வேண்டும் என்பதையும் தெரிவித்தால் உற்பத்தி செய்து அனுப்பப்படும் என்று கல்லூரியின் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவை முழுக்க முழுக்க வெள்ளம் பாதித்த மக்களுக்காக தயாரிக்கப்பட்டவை, விற்பனைக்காக அல்ல, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இவற்றை வழங்க விரும்புபவர்கள் நன்கொடை அளிக்க தொடர்பு கொள்ள வேண்டிய எண் லெட்சும் +91 94473 35336, ராகுல் +91 85470 32569.

Related Stories

Stories by Priyadarshini