'கேன்சர் நோய்க்குப் பிறகும் ஒரு வாழ்க்கை இருக்கிறது'- மனிஷா கொய்ராலா!

1

உயிர் பிழைப்போம் என்கிற கடைசி நம்பிக்கையையும் இழந்து மீண்டெழுந்து வரும் நாயகிகள் சினிமாவில் சர்வ சாதரணம். ஆனால், நிஜ வாழ்விலும் அப்படி ஒரு நிலையை சந்தித்து மீண்டும் எழுந்து வந்திருக்கிறார், நடிகை மனிஷா கொய்ராலா.

கேன்சர் நோய் பாதிப்புக்குப் பிறகும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று புன்னகைக்கும் மனிஷா, தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். 'இடவபாதி' என்னும் மலயாளப் படத்தின் ஷூட்டிங்கின் போது யுவர்ஸ்டோரியுடன் மனம் திறந்தார். 

'கேன்சரை வென்ற நடிகை' என்று பலரும் என்னைப் பார்ப்பதை முறியடிப்பதுதான் கடினமாக இருக்கிறது. சினிமா உள்பட ஊடகங்கள் கேன்சர் என்பது மரணத்தை நோக்கி தள்ளும் கொடிய நோய் என்று மக்களை பயமுறுத்தி வைத்திருக்கிறது. மற்ற நோய்களைப் போலவே கேன்சரும் குணமாக்க கூடிய நோய்தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார் மனிஷா. இதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விழிப் புணர்வு நிகழ்ச்சிகளிளும் தற்போது அவர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளார். டெல்லி இலக்கிய மாநாட்டின் போது கேன்சர் குறித்த புத்தகம் ஒன்றையும் வெளியிட இருக்கிறாராம்.

கேன்சர் நோய் பாதிப்பை நியூ யார்க் டாக்டர்கள் கண்டறியும் முன்னர் உடல் நலம் குறித்து யோசித்து பார்த்ததே இல்லை. பல படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளிலும் நடித்துள்ளேன். நோயோடு போராடிய போதுதான் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை புரிந்து கொள்ள முடிந்தது. 

'உடலை நலமுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை நோய் வரும் முன்னரே அனைவரும் உணர்ந்து வாழவேண்டும்' என்பது மனிஷாவின் அறிவுரை.

கர்நாடகாவில் 37 ஆண்டுகளாக அகதிகளாக வாழும் ஒரு பிறிவு மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் படம் தான் மனிஷா நடித்துக் கொண்டிருக்கும் 'இடவபாதி'. மோகன்லால் நடித்த யோதா படத்தில் நேபாள சிறுவனாக நடித்த சித்தார்த் லாமா தான் படத்தின் நாயகன். படம் ஜனவரியில் வெளிவர உள்ளது. 1991 முதல் 10 ஆண்டுகளுக்கு மேல் இந்தி, தமிழ், மலையாலம் என்று பிசியாக இருந்தவருக்கு சினிமாவிலும் மறு வாழ்வு கிடைத்திருக்கிறது மகிழ்ச்சியான தகவல்.

ஆக்கம்: முகேஷ் நாயர் | தமிழில்: ஜெனிடா