ஈரோட்டின் இந்த 8 கிராம மக்கள் 17 வருடங்களாக பட்டாசு வெடிப்பதில்லை... ஏன் தெரியுமா?

0

ஈரோடு மாவட்டத்தை சுற்றியுள்ள எட்டு கிராமத்தை சேர்ந்த மக்கள் கடந்த 17 ஆண்டுகளாக தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிப்பதில்லை என்று சொன்னால் நம்புவீர்களா? இந்த மாவட்டதின் அருகில் உள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளதே இதற்குக் காரணம் என்று சொன்னால் அது நம் ஆச்சர்யத்தை மேலும் அதிகரிக்கிறது. இந்த பறவைகள் சரணாலயத்தில் வாழும் பறவைகள் அதிக சத்தத்தை கண்டு பயந்து மிரளும் என்பதாலும், பட்டாசு சத்தத்தை கேட்டால் அங்கிருந்து பறந்து செல்ல வாய்ப்புள்ளதாலும் இந்த கிராம மக்கள் பொறுப்புணர்வுடன் எடுத்த முடிவு இது. 

சுமார் 750 குடும்பங்கள் இந்த 8 கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். 1996 இல் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் 80 ஹெக்டர் நிலப்பரப்பில் இந்த கிராமங்களை சுற்றி அமைக்கப்பட்டது. அப்போதிலிருந்து அந்த மக்கள் பட்டாசு வெடிப்பதை நிறுத்தி விட்டனர். குறிப்பாக செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இந்த சரணாலயத்தை நோக்கி பறவைகள் வருவதால் இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர். 

ஈரோடு மாவட்டத்தில் தலக்கரை, தொட்டகொம்பை, சோலாகனை, சுண்டபூர், கதிரிமலை, கக்கயனூர் மற்றும் நத்தடி உள்ளிட்ட ஏழு வன மண்டலங்களை சேர்ந்தவர்களும், சத்யமங்களம் மற்றும் ஹசனூர் பிரிவில் வாழுவோர் சத்யமங்களம் புலிகள் சரணாலயம் இருப்பாதாலும் பட்டாசுகளை வெடிப்பதில்லை என்று உறுதி எடுத்துள்ளதாக தி ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் இருந்து பறவைகள் இந்த சரணாலயத்தை நோக்கி வருடாவருடம் வருகின்றன. இவை இங்கே கூடு அமைத்து, முட்டை இட்டு, குஞ்சு பொறித்ததும் இரண்டு, மூன்று மாதங்கள் கழித்து இங்கிருந்து சென்றுவிடுகின்றன என்று பிடிஐ தெரிவித்துள்ளது. 73 வயதாகும் சின்னசாமி கெளண்டர் நினைவு கூறுகையில், 

“நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு பட்டாசுகள் வெடிப்போம். ஆனால் பறவைகள் சரணாலயம் அமைந்த பிறகு அதை நிறுத்திவிட்டோம்,” என்று கூறினார். 

கிராம மக்கள் இது பற்றி பேசுகையில், “கடந்த இரண்டு ஆண்டுகள் முன்பு வரை மத்தாப்பு கூட கொளுத்தாமல் இருந்தோம், ஆனால் தற்போது இங்குள்ள குழந்தைகள் மத்தாப்பு கொளுத்தி விளையாடுகின்றனர். இருப்பினும் பட்டாசு வெடிகள் இங்கே முற்றிலும் வெடிப்பதில்லை,” என்கின்றனர். 

கட்டுரை: Think Change India