சென்னையில் தனி மனிதனாய் ரயில் நிலையங்களை சுத்தம் செய்யும் தன்னார்வலர் !

3

நாம் அனைவரும் பல முறை ரயில் நிலையத்திற்கு சென்று இருப்போம், பல முறை அசுத்தமான ரயில் நடை பாதைகளை கண்டு முகம் சுளித்திருப்போம். அந்த அசுத்தங்கள் நம் மேல் படமால் நேர்த்தியாக நடந்து சென்றிருப்போம் அல்லது அசுத்தமாக பராமரிக்கும் அரசாங்கத்தை குறை கூறி இருப்போமே தவிர, அதை நாம் ஏன் சுத்தம் செய்யக்கூடாது என்று ஒருப்போதும் நினைத்திருக்க மாட்டோம். ஆனால் இங்கு 46 வயதான ராஜேஷ் கண்ணன் யாதவ் அசுத்தங்களை பார்த்து மூக்கை மூடி செல்லாமல் தானே இறங்கி சுத்தம் செய்துள்ளார்.

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் காரைக்குடியை சேர்ந்த ராஜேஷ், 2015ல் IELTS தேர்வு எழுதுவதற்காக சென்னை குரோம்பேட்டில் தங்கி இருந்தார். அப்பொழுது ஊரப்பாக்கத்தில் இருக்கும் தன் நண்பரை சந்திக்க ஊரப்பாக்கம் ரயில் நிலையத்திற்கு முதல் முதலாக வந்த ராஜேஷ் அசுத்தமாக இருந்த ரயில் நிலையத்தை கண்டு சுத்தம் செய்ய முடிவு செய்தார்.

“ஊரப்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வருவதற்கு ஒரு வாரம் முன்பு தான் செய்தித்தாளில் ரயில் நிலையத்தை மக்கள் தத்தெடுத்து சுத்தம் செய்யலாம் என்னும் செய்தியை படித்தேன். அதனால் ஏன் நாம் அதை துவங்க கூடாது என முடிவு செய்தேன்” என்கிறார் ராஜேஷ்

மறுநாளே ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தை சுத்தம் செய்யும் தன் விருப்பத்தை கடிதம் மூலம் உரிய அதிகாரிகளிடம் கொடுத்த ராஜேஷ்-க்கு ஒரு மாதம் மட்டும் சுத்தம் செய்ய அனுமதி கிடைத்து. அனுமதி கிடைத்த அடுத்த நாளில் இருந்தே காலை 4 மணிக்கு சுத்தம் செய்யும் பணியை துவங்கிவிட்டார். ஒரு மாத காலத்திற்குள் ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தை சுத்தம் செய்து அசுத்தமான சுவருகளை மாற்றி அழகிய ஓவியங்கள் வரைந்து, பல இடங்களில் குப்பை தொட்டிகளை நிறுவி மற்றும் பூந்தொட்டிகளால் அலங்காரம் செய்து அடையாம் தெரியாமல் மாற்றிவிட்டார்.

தனி மனிதனாய் இவரது உழைப்பை கண்ட அதிகாரிகள் இன்னும் ஆறு மாத காலம் இவர் பணியை தொடர அனுமதித்தனர். அதன் பிறகு பல நாட்கள் பயனில்லாமல் மூடி கிடந்த கட்டண கழிப்பிடத்தை தானே குத்தகைக்கு எடுத்து சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். ஊரப்பாக்கத்தை அடுத்து பீச் நிலையத்தை சுத்தம் செய்ய ஒரு மாதம் அனுமதி வாங்கினார் ராஜேஷ்.

“பீச் நிலையத்தின் சுகாதார பொறுப்பு ஒரு தனியார் நிறுவனத்திடம் இருந்தது, இதை சுத்தம் செய்தால் பெயர் அந்த நிறுவனத்திற்கே செல்லும் என நண்பர்கள் கூறினர். ஆனால் நான் செய்வது பெயருக்காக இல்லை என என் பணியை முடித்தேன்.”

மேலும் அந்த நிறுவனங்களும் சுகாதாரத்தை பற்றி பெரியதாய் கண்டுக்கொள்ளவில்லை என்கிறார் ராஜேஷ். அதனால் அத்துடன் அதை சற்று நிறுத்திவைத்தார். அதை நிறுத்தினாலும் தன் தூய்மை பயணத்தை இவர் நிறுத்தவில்லை. நண்பரை ஓர் மருத்துவமனையில் சந்திக்க சென்ற ராஜேஷ் அங்கு இருந்த காந்தி சிலை மற்றும் அதை சுற்றியுள்ள இடத்தின் அசுத்தத்தை கண்டு, மருத்துவமனை அனுமதியுடன் 30 ஆயிரம் செலவுசெய்து சுத்தம் செய்து கொடுத்துள்ளார்.

பட உதவி: தி ஹிந்து 
பட உதவி: தி ஹிந்து 

அதன் பிறகு கடந்த மாதம் சென்னை பார்க் நிலையத்தை சுத்தம் செய்து தர முடியுமா என ஒரு அமைப்பு இவரை அணுக ஒரு மாத கால அவாகாசம் பெற்று சுத்தம் செய்ய துவங்கினார்.

"இரவு நேரத்தில் என் நண்பருடன் இணைந்து சுத்தம் செய்து, LED லைட்களை பொருத்தினேன். இருட்டு என்பதால்தான் அங்கு சிறுநீர் கழிக்கின்றனர், வெளிச்சமாக இருந்தால் செய்ய கூச்சப்டுவார்கள்,” என்கிறார் சமூக அக்கறையுடன்.

பூங்கா நிலையத்தை நிஜ பூங்கா போல் ஆக்க வேண்டும் என்பதற்காக தன் பணியை இன்னும் மூன்று மாத காலம் நீட்டியுள்ளார் இவர்.

நீங்கள் ஏன் எந்த அமைப்பின் உதவியையும், தன்னார்வர்களின் உதவியையும் பெறவில்லை?

“நான் சந்தித்த பலர் இதனால் தங்களுக்கு என்ன ஆதாயம் என பார்த்தனர். மேலும் சமூக தளத்தில் போட்டு பேர் வாங்குவதையே நோக்கமாக கொண்டு இருந்தனர். நம் நாட்டுக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எவருக்கும் இல்லை” என்கிறார்.

இதுவரை பலாயிரம் செலவு செய்த ராஜேஷ், “தாய்க்கு செலவு செய்வதையும், தாய்நாட்டிற்கு செலவு செய்வதையும் கணக்கு பார்க்கக்கூடாது,” என்கிறார் மிக எளிமையாக.

வருங்காலத்தில் தூய்மை இந்தியா பற்றி பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டுள்ளார். மாணவர்களை இதில் இணைக்க அரசாங்கமும் முயற்சிகள் எடுக்க வேண்டும் என முடிக்கிறார் இந்த தன்னார்வலர்.

மேலும் இவரது பணி சிறக்க வாழ்த்துக்கள்!

Related Stories

Stories by Mahmoodha Nowshin