மோடியின் கனவு இந்தியாவின் அடையாளம் 'இம்ரான் கான்'

0

ஒரு மனிதனின் புகழ் அவரை விட வேகமாகவும், துரிதமாகவும், பரவலாகவும் மற்றவர்களுக்கு தெரிந்து விடும், அவர் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும். ஆரம்பப் பள்ளி ஆசிரியரான இம்ரான் கான் ராஜஸ்தானின் ஆல்வாரை விட்டு வெளியே எங்கும் சென்றதில்லை. அதே போன்று தன்னுடைய பெயர் ஏழு கடல் தாண்டி ஒலிக்கும் என்று அவர் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை.

பிரிட்டனின் வெம்ப்லி ஸ்டேடியத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தின் நடுவே உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியா, இம்ரான் கான் போன்ற தன்னுடைய மக்களை நம்பியே இருக்கிறது என்றார். இதுவே ஆல்வாரைச் சேர்ந்த கானின் உடனடி புகழுக்குக் காரணம்.

என்னைப் போன்ற ஊடகவியலாளர்களுக்கு யார் இந்த இம்ரான் கான் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. உடனே அவருடைய பெயரை கூகிளில் தேடத் தொடங்கினோம். உடனடியாக அவரை ஒரு நேர்காணல் செய்ய வேண்டும் என்ற ஒரு மின்னஞ்சலை இம்ரானுக்கு அனுப்பினேன், அதைத் தொடர்ந்து காலையிலேயே அவர் என்னை தொலைபேசியில் அழைத்துப் பேசினார்.

“இது மிகவும மகிழ்ச்சியான தருணம்,” என்று வியப்பில் இருந்து மீளாத இம்ரான் கூறினார். நான் அவரிடம் எப்படி இந்தியாவின் உண்மையான குடிமகனுக்கான அடையாளம் நீங்கள் தான் என்று பிரதமர் மோடி உங்களுடைய பெயரை குறிப்பிட்டார் என்று அவரிடம் கேட்டேன். “நான் இதை எப்போதுமே எதிர்பார்க்கவே இல்லை” என்று புன்னகைக்கிறார் இம்ரான். "தற்சமயம் என்னுடைய வீட்டிற்கு வெளியே பல்வேறு ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன," என்று கூறும் அவர், “என் பெற்றோர் இதை கண்டு ஆச்சரியப்படுகின்றனர். அவர்களின் மகன் பலரும் பாராட்டும் படியாக என்ன செய்திருக்கிறார் என்று அவர்களுக்கு வியப்பு” என்கிறார்.

என்ன செய்தார் இம்ரான் கான்?

34 வயது இம்ரான், ராஜஸ்தானின் அரசு (சமஸ்கிருத) கத்துமார் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக உள்ளார். 2012ம் ஆண்டு ஆல்வாரின் ஆட்சியர் ஆசுதோஷ் ஏ டி பட்நேகர், இம்ரானின் இணையதளத்தில் பொது அறிவு கேள்விகளுக்கு பதில் வழங்கப்பட்டிருப்பதைக் கண்டு அவர்பால் ஈர்க்கப்பட்டார். “ஆட்சியர் என்னை சொந்தமாக செயலி தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டார், அப்போது செயலி என்றால் என்ன என்றே எனக்குத் தெரியாது. என்னிடம் சாதாரண செல்பேசியே இருந்தது, அதனால் அவர் என்னிடம் அவருடைய ஸ்மார்ட் போனில் சில செயலிகளை காண்பித்ததாக,” கூறுகிறார் இம்ரான்.

இதுவே குழப்ப நிலையில் இருந்து அவர் புகழ் பெற காரணமாக அமைந்தது.

இம்ரான் புத்தகங்கள், இணையதள தேடல்கள் மூலம் செயலியை எவ்வாறு உருவாக்குவது என்று பயின்றார். மேலும் அவரின் சகோதரர் இட்ரீஸ் "அவருடைய கணினி அறிவியல் புத்தகத்தில் இருந்த சிலவற்றை இவருக்குக் கூறினார். 2012ல் இம்ரான் என்சிஈஆர்டி(NCERT)க்காக ஒரு அறிவியல் செயலியை உருவாக்கினார், அதற்கு பின்னர் அவருடைய தயாரிப்புகளை யாராலும் நிறுத்த முடியவில்லை. “நான் ஆரம்பப் பள்ளி மற்றும், இடைநிலை பள்ளி மாணவர்களுக்காகவும், போட்டித் தேர்வுக்குத் தயாராகுபவர்களுக்காகவும் புவியியல், வரலாறு, கணிதம் மற்றும் அறிவியல் என வெவ்வேறு பாடத்திட்டங்களில் செயலியை உருவாக்கியுள்ளேன்,” என்கிறார் அவர்.

இந்த ஆண்டு மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி, இம்ரானை அவருடைய செயலிகளை அமைச்சகத்துக்கு காண்பிப்பதற்காக அழைப்பு விடுத்துள்ளார். “நான் என்னுடைய செயலிகள் அனைத்தையும் நாட்டிற்காக இலவசமாக நன்கொடை அளித்துள்ளேன்,” என்று பெருமையோடு கூறுகிறார் அவர். மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு இணையவழி கல்வி கற்றல் சாதனங்களை வழங்கும் இது டிஜிட்டல் இந்தியாவை முன்எடுத்துச் செல்லும் திட்டத்தின் கீழ் வருகிறது.

விஞ்ஞானியாக விரும்பிய ஆசிரியர்

ஆசிரியர் பணிக்கு செல்லும் போது இம்ரான் உயர்நிலையில் தேர்ச்சி மட்டுமே பெற்றிருந்தார். 

"என்னுடைய தந்தை ஒரு விவசாயி, நான் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் சிறந்த மாணவனாக இருந்தேன், அவருக்கு அதன் மதிப்பு தெரியவில்லை. அனைவருமே ஒரு அரசாங்க உத்தியோகத்தை உடனயாக தேடிக்கொள்ளவே எனக்கு ஆலோசனை வழங்கியதாக," 

தன்னுடைய நினைவலைகளை அசைபோடுகிறார் இம்ரான். அதன் பின்னர் இம்ரான் ஆங்கிலத்தில் டபுள் எம்ஏவும், தனியார் கல்லூரி ஒன்றின் வாயிலாக பொருளாதாரத்தில் ஒரு பட்டமும் பெற்றார்.

ராஜஸ்தானின், சரிஸ்கா புலிகள் சரணாலயத்தின் எல்லையோர கிராமமான கரேடாவைச் சேர்ந்த சிறுவனாக வளர்ந்த இம்ரான், இது தனக்கு பொருந்தாது என்று தனக்கு தானே கண்டறிந்தார். அவருடைய வீட்டில் இருந்து பள்ளிக்கூடத்திற்கு 10 கிலோமீட்டர் தூரம் செல்வது அவருக்கு எப்போதும் எதிர்பார்ப்பை குறைக்கவில்லை. ஆனால், உயர்கல்வியில் அறிவியல் பற்றி தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்ககாதது அவருக்கு கடினமாகவே இருந்தது. “இதனால் நான் ஒரு விஞ்ஞானியாக ஆசைப்பட்டேன், எனக்கு அறிவியலும் கணிதமும் மிகவும் பிடித்தது. ஆனால் நான் இதை படிப்பதற்கு ஊக்கமளிக்கவோ அல்லது ஆதரவு தரவோ யாரும் இல்லை. நம் நாட்டில் அனைவருமே வேலையை தேடிப் பிடிப்பதிலேயே கவனமாக உள்ளனர், அதிலும் உங்களுக்கு அரசாங்க வேலை கிடைத்து விட்டால் உங்கள் வாழ்வு நல்லபடியாக அமைந்து விடும் என்பதே அவர்களின் எண்ணமாக உள்ளதாகக் கூறுகிறார் அவர்.

இம்ரானே எங்கள் குடும்பத்தின் அப்துல் கலாம் என்கிறார் இட்ரீஸ், இவர் இம்ரானின் 25 வயது இளைய சகோதரர். இட்ரீஸ் ஒரு மென்பொருள் பொறியாளர், இம்ரானின் உதவி இருந்ததாலேயே தன்னால் இவற்றை செய்ய முடிந்ததாகவும், தான் இன்று இந்த நிலையை அடைய முடிந்ததாகவும் கூறகிறார் இட்ரீஸ்.

“அவர் தான் என்னுடைய கடவுள், எங்கள் குடும்பத்திற்கும் நாட்டிற்கும் பெருமைதேடித் தர வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் கனவு.”

நான்கு சகோதரர்கள், மூன்று சகோதரிகளுடன் பிறந்த இம்ரான் தான் அந்த குடும்பத்தின் மூன்றாவது குழந்தை.

இம்ரானின் செயலி உலகம்

இம்ரான் கூகுள் ப்ளே ஸ்டோரில் ‘gktalk_Imran’ என்ற பெயரில் 53 செயலிகள் பட்டியலை வைத்துள்ளார்.

அவருடைய பிரபலமான செயலி இந்தியில் உள்ள ‘பொது அறிவியல்’, அதில் தற்போது 5 லட்சத்திற்கும் மேல் பதிவிறக்கங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த செயலி இயங்க இணையதள வசதி தேவையில்லை, தற்சமயம் வாழ்க்கை அறிவியல் தொடர்பான 300 கேள்வி பதில்கள் இந்தியில் உள்ளது. இந்த செயலியின் பயன் தொடர்பான விரிவாக்கத்தை ப்ளே ஸ்டோர் இவ்வாறு குறிப்பிடுகிறது, 

“இந்த செயலி அடிப்படை அறிவியல் கேள்விகளை எளிதில் புரிந்து கொள்ள உதவுகிறது. இது மாணவர்கள் மற்றும் ஐபிபிஎஸ், ஐஏஎஸ், மாநில பிஎஸ்சி, எஸ்எஸ்சி மற்றும் இதர அரசுப் பணிக்குத் தயாராகுபவர்களுக்கு உதவும். அதே போன்று அரசோ அல்லது அரசு சார்ந்தத் துறையில் பணியில் சேர விரும்புவோர் அல்லது நுழைவுத் தேர்வு எழுதுவோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.”

இம்ரானின் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவிறக்கங்களைக் கொண்ட மற்ற டாப் ரக செயலிகள் வரலாறு பொது அறிவு, இந்தி இலக்கணம், இந்தியில் புவியியல் பொது அறிவு, இந்திய அரசியலமைப்பு பொது அறிவு மற்றும் 2012ல் இந்தியில் வெளியான அவரது முதல் செயலி கண்டுபிடிப்பான என்சிஈஆர்டி அறிவியல். இவரின் அனைத்து செயிலிகளையும் பயன்படுத்தியவர்கள் பொருளடக்கத்தின் தரம், எளிமையான வடிவமைப்பு மற்றும் பயனாளர் அணுகுமுறையை மிகவும் பாராட்டியுள்ளனர்.

இந்த செயலிகளோடு கூடுதலாக இம்ரான், எண்ணிலடங்கா இதர செயலிகளை உருவாக்கியுள்ளார். அவை இயற்பியல், வேதியியல், சூரிய குடும்ப அமைப்பு, கட்டுரை எழுதுதல், எதிர்சொற்கள், இணைசொற்கள், அடிப்படை கணினி, மனித உடலமைப்பு, முகலாய பேரரசு என பலவகைப்படும்.

ஆர்வமும் விடாமுயற்சியும்

பல்வேறு ஊடகங்கள் இம்ரானுக்காக படையெடுத்து வெளியில் காத்திருக்கும் சமயத்திலும் கூட இம்ரான் என்னுடைய அடுத்த கேள்வியை நிதானமாக கேட்டு, இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பொறுமையையும், பக்குவத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் பதிலளித்தார். இம்ரான் கூறுகையில்,

“உங்களுடைய விருப்பம் எதுவாக இருந்தாலும் அதை முழுமனதோடு நேர்மையாக அடைய நினையுங்கள், அது உங்களுக்கு உடனடி பிரதிபலனை அளிக்காவிடினும், நீண்ட ஓட்டத்திற்கு பின் அவை மதிப்புமிக்கதாக இருக்கும்.”

தன் பயணத்தில் சாதித்த ஒரு மனிதன் கூறுவது நிச்சயமாக மதிக்கத்தக்கது என்பதை புலன்படுத்தி இருக்கிறார் இம்ரான்.

கட்டுரை: தீப்தி நாயர் | தமிழில்: கஜலட்சுமி மகாலிங்கம்