உலகத் திறன் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட இளைஞர்! 

1

இந்தியா ஒரு வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இருப்பதற்கு முக்கியக் காரணமே மலிவு விலையில் தொழிலாளர்கள் கிடைப்பதுதான். அப்படிப்பட்ட தொழிலாளர்கள் ஏன் உருவாகிறார்கள் என எப்போதாவது வியந்ததுண்டா? இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தொலைதூரங்களில் இருந்து புதிய நகரங்களுக்குக் குடிபெயர்ந்தவர்கள்.

ரோஹிம் மாமின் வாழ்க்கைப் பயணமும் இதே போன்றதுதான். குடும்பத்தைப் பரமாரிக்கவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டதால் பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்து மால்டா என்கிற தனது கிராமத்தில் இருந்து கட்டுமானப் பணியாளராகப் பணிபுரிய டெல்லிக்குக் குடிபெயர்ந்தார்.

"ஆசிரியராக வேண்டும் என்பதே என் சிறு வயது கனவு. பள்ளியில் முதலிடத்தில் இருந்தேன். படிப்பில் மிகவும் ஆர்வமாக இருந்தேன். ஆனால் என்னுடைய கடமையை நிறைவேற்றவேண்டிய பொறுப்பு இருந்ததால் கட்டுமானத் துறையில் சேரவேண்டிய நிலை ஏற்பட்டது,” என்று ரோஹிம் நினைவுகூர்ந்தார்.

அதிக வருமானம் ஈட்டவேண்டும் என்பதிலும் தனது மூன்று தங்கைகளுக்கும் சிறப்பான வருங்காலத்தை அமைத்துத் தரவேண்டும் என்பதிலும் இருந்த மன உறுதியே அவரை உடலுழைப்புடன்கூடிய பணியைத் தாண்டி செயல்படத் தூண்டியது. இந்தத் தூண்டுதலே அவர் திறன் பயிற்சி பெறவும் கட்டுமானத் திறனை மேம்படுத்திக்கொள்ளவும் அபுதாபியில் 2017-ம் ஆண்டு நடைபெற்ற உலக திறன் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்கவும் உதவியது.

ரோஹிமின் பயணம்

ரோஹிம் மல்டா பகுதியில் பிறந்து வளர்ந்தார். இவரது பெற்றோர் சாலை விபத்தில் இறந்தபோனதால் பதினோறாம் வகுப்புடன் படிப்பை நிறுத்துக்கொள்ளவேண்டிய சூழல் ஏற்பட்டது. 2014-ம் ஆண்டு மூன்று தங்கைகள் அடங்கிய இவரது குடும்பப் பொறுப்புகளை முழுமையாக ஏற்றுக்கொண்டார். கட்டுமானத் துறையில் தொழிலாளியாக சேர்ந்தார்.

”எங்களது கிராமத்தில் இருந்த ஒப்பந்ததாரர் ஒருவர் மக்களை பணியாட்களாக டெல்லிக்கு அழைத்துச் செல்வார். இவரது அறிமுகம் கிடைத்து நான் இவருடன் டெல்லிக்கு வந்தேன். என்னுடைய கிராமத்தைச் சேர்ந்த சுமார் 80 சதவீதம் பேர் கிராமத்திற்கு வெளியே கட்டடவேலையில் ஈடுபட்டுள்ளனர்,” என்றார் 22 வயதான ரோஹிம்.


ஆரம்பத்தில் சிமெண்ட் கலவைகளை தீர்மானிப்பதற்கு மேற்பார்வையாளரின் அறிவுறுத்தல்களையே பின்பற்றி உடலுழைப்பில் மட்டுமே இவர் கவனம் செலுத்தி வந்தார். சில நாட்களிலேயே கொத்தனார் அதிகம் சம்பாதிப்பதை இவர் உணர்ந்தார். பணத்தின் மீதான இந்த ஈர்ப்பு இந்தத் துறையை சிறப்பாகப் புரிந்துகொண்டு பணிக்கு சேர்ந்த ஓராண்டில் இந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற தூண்டுதலை ஏற்படுத்தியது.

ஒரு நாள் கட்டுமான தளத்தில் சில தொழிலாளர்கள் கட்டுமானப் பணி தொடர்பான ஒரு போட்டி குறித்து பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டார். இதில் கொடுக்கப்படும் பணிகளை குறிப்பிட்ட நேரத்தில் நிறைவு செய்யும் நபருக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என பேசிக்கொண்டனர். ரோஹிமுக்கு ஆர்வம் ஏற்பட்டது. உடனே இந்தப் போட்டியில் கலந்துகொண்டார். டெல்லி என்சிஆர் பகுதி முழுவதும் இருந்து கலந்துகொண்ட 18 போட்டியாளர்களில் இரண்டாவது இடம் பிடித்தார்.

”நிறுவனத்தின் தரப்பிலிருந்து நான்கு மணி நேரத்திற்குள் ’H’ வடிவிலான ஒரு மீட்டர் உயர சுவற்றை உருவாக்கச் சொன்னார்கள். இதற்கு ஒட்டுமொத்த உடலுழைப்பும் கவனமும் தேவைப்படும். போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே எனக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. ஆனால் நேரத்தை வீணாக்க மனமின்றி தண்ணீர் குடிப்பதைத் தவிர்த்துவிட்டேன். குறிப்பிட்ட நேரத்தில் துல்லியமாக பணியை நிறைவு செய்வதே வெற்றிக்கான முக்கிய அம்சமாகும்,” என்றார் அவர்.


குறிப்பிட்ட பகுதிக்கான திறன் போட்டிக்குப் பிறகு தேசிய அளவில் போட்டியிட்டு தேசிய திறன் போட்டியில் (2015) இரண்டாவது இடம் பிடித்தார். அதன் பிறகு உலக திறன் போட்டியில் போட்டியிட தேர்வானார். இதற்காக பதினான்கு மாதங்கள் புனேவில் உள்ள CREDAI-ன் Kushal-ல் தன்னை தயார்படுத்திக்கொண்டார்.

கட்டுமானப் பணித்திறன்

ஒரு வீடு அல்லது கட்டிடத்தின் கட்டுமானப் பணி என்பது நம் கண்முன் காட்சிப்படுத்தப்படும் அம்சத்தை மட்டுமே உள்ளடக்கியதாக கருதப்படுகிறது. திட்டத்திற்கு ஏற்றவாறு துல்லியமாகவும் நேர்த்தியாகவும் கட்டுவது கட்டுமானப் பணியாளரின் முக்கிய பொறுப்பாகும். இது பெரும்பாலும் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டதாக இருக்கும்.

”எந்த இரு திட்டங்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. எனவே கட்டுமானப் பணியாளர்கள் ஒவ்வொரு தனிப்பட்ட திட்டத்திற்கும் ஏற்றவாறு சிந்தித்து செயல்பட்டு சவால்களை திறமையாக கையாள வேண்டும்,” என அபுதாபி உலக திறன் போட்டிக்கான ஏற்பாட்டுக் குழுவினர் விவரித்தனர்.

ரோஹிம் 59 நாடுகளைச் சேர்ந்த மக்களுடன் போட்டியிடவேண்டியிருந்தது. இதில் வரைபடங்களை விளக்கி, அளவிட்டு உலகத் தரம் வாய்ந்த கட்டிடத்தை கட்டவேண்டியிருந்தது.

”அபுதாபியில் மோட்டார், மணல், பயன்பாட்டில் இருந்த தொழில்நுட்பம் என அனைத்துமே மாறுபட்டது. அந்தப் போட்டிக்காக புனேவில் உள்ள Kushal வாயிலாக தீவிர பயிற்சி எடுத்துக்கொண்டேன்,” என ரோஹிம் நினைவுகூர்ந்தார்.

இந்தப் போட்டி அவரது திட்டமிடல் திறன்களை சோதித்தது. திருத்தம், துல்லியம், நேர்த்தி, நுணுக்கங்களில் கவனம் செலுத்துதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அவரது கட்டுமானம் மதிப்பிடப்பட்டது. அபுதாபியில் மணல், சுண்ணாம்பு, சிமெண்டு போன்ற வெவ்வேறு பொருட்களால் ஆன கற்கள் மற்றும் ப்ளாக்குகளைப் பயன்படுத்தி ரோஹிம் கட்டுமானம் செய்தார். இதில் ’ஃபால்கன் டிசைன்’ அலங்கார கட்டுமானமும் இடம்பெற்றிருந்தது. 


ரோஹிம் ’மெடாலியன் ஆஃப் எக்ஸலன்ஸ்’ வென்று ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.

“முடிவுகளைக் கண்டு மிகுந்த ஏமாற்றமடைந்தேன். மிகவும் கடினமாக உழைத்ததால் அன்றைய நாள் முழுவதும் அழுதுகொண்டே இருந்தேன். எனினும் எனக்கு கிடைத்தது நினைத்து நான் மகிழ்கிறேன். என்னிடம் நல்ல வேலை உள்ளது,” என்றார்.

தொழிலாளர்கள் மீதான மரியாதை

வளர்ந்த நாடுகளில் மொத்த தொழிலாளர்களில் 60 முதல் 90 சதவீதம் பேர் திறன்பெற்ற தொழிலாளர்கள் ஆவார்கள். இதற்கு மாறாக இந்தியாவில் முறையான தொழிற்பயிற்சி திறன்களுடன்கூடிய தொழிலாளர்கள் 4.69 சதவீதம் மட்டுமே இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

”கட்டுமானத் துறை ஜிடிபி-யில் மிகப்பெரிய அளவில் பங்களிக்கக்கூடிய இரண்டாவது துறையாகும். இந்தத் துறையில் திறன் பெற்ற தொழிலாளர்கள் வெறும் நான்கு சதவீதம் மட்டுமே உள்ளனர். இந்தத் துறை போதுமான அளவு இயந்திரமயமாகவில்லை. எனவே கட்டுமானத்தின் தரத்தில் தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி நீடித்த, உயர்தர, குறைவான பராமரிப்புடன் கூடிய கட்டிடங்களை உருவாக்க உதவுவதுடன் தொழிலாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவுகிறது,” என்றார் CREDAI திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவர் விஷால் குப்தா.


பெரும்பாலும் கட்டுமானத் தளங்களில் வழக்கமாக நடைபெறும் கட்டுமானப் பணிகளை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

”முறையான கல்வி பயிலாதவர்கள் வேறு வழியின்றி இறுதியில் தேர்வு செய்வதே திறன் பயிற்சி என்கிற கண்ணோட்டம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இதுவே திறன் மற்றும் தொழில்முனைவுப் பகுதியில் காணப்படும் மிகப்பெரிய சவாலாகும்,” என்று திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம் 2016-17 ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

நடைபாதை, சுவர், வீடு என எங்கு கட்டுமானப் பணி நம் பார்வையில் பட்டாலும் அதில் அதிக நிபுணத்துவமும் திறனும் அடங்கியுள்ளது. தொடர்பு, படைப்பாற்றல் மற்றும் வடிவமைப்பு, சிக்கல்களுக்கு தீர்வு காணுதல், துல்லியம் ஆகியவற்றில் கட்டுமானப் பணியாளருக்கு இருக்கும் திறனுக்கு கட்டிடங்களே சான்றாகும்.

"வெளிநாடுகளில் கட்டுமானப் பணி தொடர்பான தொழில்முறை பாடங்கள் கல்லூரியில் உள்ளது. அத்துடன் அவர்கள் கட்டுமானப் பணியைத் தொழில் வாய்ப்பாகவே கருதுகின்றனர். எனினும் இந்தியாவில் முக்கியத் தேவை இருப்போர் மற்றும் ஏழ்மையில் இருப்போருக்கான பணியாகவே பார்க்கப்படுகிறது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இந்தப் பணியை பார்க்கும் கண்ணோட்டமே வேறுபட்டுள்ளது,” என்றார் ரோஹிம்.

போட்டியில் பங்கேற்ற பிறகு தனது சக பணியாளர்களிடையேயும் கிராமத்திலும் ரோஹிமிற்கு தற்போது மரியாதையும் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. மிக முக்கியமாக அவருக்கு ஏடிஎஸ் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் ஃபோர்மேன் பணி கிடைத்துள்ளது. மேலும் தேசிய மற்றும் சர்வதேச திறன் போட்டிகளில் பங்கேற்க உள்ளவர்களுக்கு பயிற்சியாளராகவும் உள்ளார்.

”எந்தப் பணியும் உயர்வானதோ தாழ்வானதோ இல்லை. அதை நீங்கள் எப்படி செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். ஒவ்வொருவரும் மனதார முழு ஈடுபாட்டுடன் பணிபுரியவேண்டும். அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும்,” என்றார்.

உடலுழைப்பு அதிகம் தேவைப்படும் பணிக்கும்கூட திறன் அவசியம். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். இந்த கருத்துகளையே ரோஹிம் தனது பணி மற்றும் பயிற்சி வாயிலாக மக்களிடையே பரப்ப விரும்புகிறார்.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கேடியா | தமிழில் : ஸ்ரீவித்யா