பில் பணத்தை செலுத்தாமலே  இங்கே இலவசமாக  வயிராற சாப்பிட்டு செல்லலாம்...

0

கேரளா ஆலப்புழாவில் உள்ள ஒரு உணவகம், பசியில்லா மாநிலம் என்ற தங்களின் இலட்சியத்தை அடைய, ரெஸ்டாரண்டில் புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

’எவ்வளவு வேண்டுமே அவ்வளவு சாப்பிடுங்கள், முடிந்தவரை அதற்கு பணம் கொடுங்கள்...’

இதுவே அந்த உணவகத்தில் காணும் வாக்கியம். ’ஜானகியா பக்‌ஷனஷலா’ அதாவது, ‘மக்களின் உணவகம்’ என்று பொருள்படும் பெயரில் மார்ச் 3-ம் தேதி இந்தாண்டு இந்த உணவகம் திறக்கப்பட்டது. கேரளாவில் உள்ள இதில் நாள் ஒன்றுக்கு மூன்று வேளை உணவு போடப்படும். வாடிக்கையாளர்கள் அதை இலவசமாக உண்டு செல்லலாம்.

சாப்பிட்ட உணவுக்கு காசு தரத்தேவையில்லை என்றாலும், அந்த உணவகத்தில் ஒரு உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. அதில் தங்களால் ஆன பணத்தை விருப்பம் இருந்தால் போட்டுவிட்டு செல்லலாம். அதில் சேமிக்கப்படும் பணம் உணவகத்தில் இலவச உணவு அளிக்கவே பயன்படுத்தப்படும்.

உணவகத்தின் வெளியே 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை விவசாயம் செய்யப்படுகிறது. இதில் விளையும் காய்கறிகள் உணவு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. நிலத்தில் விளையும் காய்கறிகளை மக்களும் வாங்கிச்செல்லலாம். இதன் மூலமும் உணவகத்துக்கு நிதி கிடைக்கிறது. 

இந்த உணவகத்தை ஸ்னேஹஜலகம் என்ற வலி மற்றும் நோய்தடுப்பு பாதுகாப்பு மையம் நிறுவியுள்ளது. N Traveller செய்திகள் படி கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் கூறுகையில்,

”நீங்கள் பசியாக இருந்தால் இங்கே வந்து சாப்பிடலாம். இங்கே கேஷியர் கவுண்டரில் இருக்கமாட்டார். உங்கள் பில் பற்றி கவலைப்படவேண்டாம். உங்கள் மனசாட்சியே உங்கள் காஷியர். உங்களால் முடிந்ததை கவுண்டரில் உள்ள பெட்டியில் போட்டுவிட்டு செல்லலாம். முடியாதவர்கள் அதைப்பற்றியும் கவலைப்படவேண்டாம். வயிராற சாப்பிட்டு செல்லுங்கள்,” என்றார். 

உணவகத்தில் எல்லா வசதிகளுடன் கிட்சன் அமைக்கப்பட்டு சுமார் 2 ஆயிரம் பேருக்கு சமைக்கும் அளவிற்கு தயார் செய்யப்பட்டுள்ளது. இதை கட்டமைக்க 11.25 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. 

கழிவு சுத்தீகரிப்பு ப்ளாண்ட் மற்றும் நீர் சுத்திகரிப்பு முறையும் இந்த உணவகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு மாடி கொண்ட இந்த உணவகத்தில், லிப்ட் மூலம் சாப்பாட்டு பொருட்கள் கொண்டு செல்லப்படும் வசதியும் உள்ளது. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி,

“உணவகத்தை நிறுவத் தேவையான நிதி, கேரள மாநில நிதி முனைவகத்தின் சிஎஸ்ஆர் மூலம் அளிக்கப்பட்டது,” என்றார் தாமஸ்.

கட்டுரை: Think Change India