நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுக்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்து 21,000 கி.மீ தூர பிரச்சாரப் பயணம்!

0

இந்திய இளைஞர்களை நாட்டின் வளர்ச்சியில் பங்களிக்க, அவர்களின் ஆர்வத்தின் அடிப்படையில் சரியான பணியை தேர்ந்தெடுக்க ஊக்கப்படுத்தி, 48 நாட்கள் இந்தியாவைச் சுற்றி 21,000 கி.மீ தூரம், "டச்சிங் பார்டர்ஸ் டச்சிங் லைப்ஸ்" (Touching borders, Touching lives) எனும் பிரச்சார பயணம் மேற்கொள்ள உள்ளார், லக்ஷ்மணன் கிருஷ்ணமுர்த்தி.

பதினைந்து வருடங்களாக தொழில் முனைவோர்களுக்கு வர்த்தக ஆலோசகராக இருந்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த லக்ஷ்மணன் கிருஷ்ணமுர்த்தி. இளைஞர்களையும், அனுபவசாலிகளையும் கொண்டு "யூத் எம்பவர்மென்ட் டிரஸ்ட்" என்ற அமைப்பை இந்த ஆண்டு நிறுவியுள்ளார் லக்ஷ்மணன்.  சமூக மாற்றத்தை உண்டாக்கவும், வெவ்வேறு கலாச்சாரங்கள் பற்றி தெரிந்து கொள்ள பயணம் மேற்கொள்வதும் இவருக்கு பிடித்த ஒன்றாகும்.

சென்னை வெள்ள பேரழிவின் தாக்கம்

சமூக முன்னேற்றத்திற்கு உதவ, கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில், தனிப்பட்ட முறையில் எங்களால் முடிந்த உதவியை, தொழில் செய்யத் தொடங்கிய நாளில் இருந்து நாங்கள் செய்து வருகின்றோம்.

 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட சென்னை மழை வெள்ள பேரழிவின் மீட்புப் பணியில், நானும் ஈடுபட்டு இருந்தேன். அப்பொழுது எந்த அழைப்பும் இன்றி, தன்னார்வத்தில் மீட்புப் பணியில் ஈடுபட வந்த ஏராளமான இளைஞர்கள் கண்டு பிரமித்தேன். உதவி செய்ய முன்வந்த அனைவரும் 35 வயதிற்கு உட்பட்டோர் ஆவர். எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி உதவி செய்து விட்டு சென்ற இளைஞர்கள்கள்தான், அந்த பேரழிவின் பெரிய தாக்கமே. இத்தனை சக்தி வாய்ந்த இளைய தலைமுறையை ஒன்றிணைக்க, மற்றொரு பேரழிவு வரை நம்மால் காத்திருக்க முடியாது.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 65 சதவிதம் 35 வயதுக்குள்ளான இளைஞர்கள் ஆவர். திறமையும் ஆற்றலும் கொண்ட இவர்கள் இந்தியாவிற்கு கிடைத்த வரமாகும். இவர்களை முறையே வழிகாட்டி, ஊக்கப்படுத்தி செயல்பட வைத்தால், இந்தியா செழிக்க முடியும், அவர்களுக்கும் மனநிறைவு கிட்டும்.

பிரச்சாரத்தின் நோக்கமும் முக்கியத்துவமும்

2005இல் ஏற்பட்ட ஐ.டி. துறை வளர்ச்சியின் புரட்சியால், பெற்றோர் விருப்பத்திற்காகவோ, பிறர் விருப்பத்திற்காகவோ, மெக்கானில், ஆட்டோமொபைல் என்ஜினீரிங் படித்தவர்கள் கூட, தூண்டுதலால் 40,000 முதல் 1,00,000 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது என்று தன்னார்வம் இல்லாத ஒரு பாதையை தேர்ந்தெடுத்துச் செல்கின்றனர். அவர்கள் செய்த தவறை உணர்வதற்குள், வாழ்க்கையில் 30 வயதை கடந்து விடுகின்றனர். இதனால் பலர் மிகுந்த மனஅழுத்ததிற்கு ஆளாகின்றனர். 

'இளைஞர்கள் தனக்கு விருப்பமான ஒரு துறையில்தான் ஈடுபட வேண்டும்' என்பது குறித்து, ஐ.ஐ.டி மாணவர்களிடம் கலந்துரையாடியபோது, தொழில் முனைவதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வத்திற்கு அளவில்லை என்பதை உணர்ந்தேன். இதுபோன்ற இந்தியாவின் எண்ணற்ற மாணவர்களையும், ஆர்வம் இருக்கும் துறையிலே செல்லுமாறு ஊக்கப்படுத்தி, வழிகாட்ட மேற்கொள்ளும் பிரச்சாரம் தான், "கார்விங் கேரீயர்ஸ்- ட்ரைவிங் சேன்ஜ்" (Carving careers- Driving change), என்கிறார், லக்ஷ்மணன்.

முதல் கட்ட திட்டத்தில், விழிப்புணர்வு ஏற்படுத்த, சாலை வழியே நான்கு சக்கர வாகனத்தில் சுமார் 23 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்கள் என இந்திய எல்லைகளின் பலவித நிலப்பரப்பில் பயணிக்க உள்ளனர். 32 இடங்களில் இளைஞர்கள் குழுவுடன் விழிப்புணர்வு மற்றும் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார்.  

பிரச்சாரத்தின் சிறப்புமிக்க அம்சங்கள்

இந்தியாவின் 30-40 எல்லை மாநிலங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பிரச்சாரம் செய்ய உள்ளனர். எல்லையின் எட்டு திசைகளிலும் பிரச்சாரம் செய்ய இவரும், இவரது நண்பரும் புகைப்படக் கலைஞருமான மிக்கேல் இணைந்து 21,000 கி.மீ தூர பயணம் மேற்கொள்ள உள்ளனர். மேலும் பிரச்சாரத்தில், விவசாயத்தின் புதிய கண்டுபிடிப்புகள் குறித்தும், ராணுவம், கடற்படை, விமானப்படை மட்டுமல்லாது, இந்திய பாதுகாப்பு படையில் உள்ள வெவ்வேறு துறைகளில் இளைஞர்கள் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்தும் பேச உள்ளனர். உலக சுகாதார அமைப்பின் ( WHO ) அறிக்கைப்படி, 29 வயதுக்குள்ளோர்கள் தான் அதிகமாக சாலை விபத்துகளை சந்திக்கின்றனர். அதனால், சாலை விபத்துக்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். இயற்கை மற்றும் செயற்கை பேரழிவுகள் சமயத்தில், பாதுகாப்பாக எப்படி எதிர் செயல் ஆற்ற வேண்டும் என்பது குறித்தும் அறிவுரைக்க உள்ளோம் என்று லக்ஷ்மணன் கூறினார்.

பிரச்சார பயணமும் நிதியுதவி தேவையும்

வருகிற ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் இறுதி வாரம் வரை, சராசரியாக 48 நாட்கள் இந்த பிரச்சாரத்தை செய்ய உள்ளனர். இந்த பயணத்தில் டீசல் செலவு, சாப்பாட்டு செலவு, தங்கும் செலவு, சுங்கச்சாலைகளில் செலுத்த வேண்டிய கட்டணம் என லட்ச கணக்கில் செலவுகள் இருப்பதால், இந்த நற்பணியை வெற்றிகரமாக செய்து முடிக்க, நிதியுதவிகளை எதிர்நோக்கி உள்ளனர். ketto.org எனும் இணையதளம் வழியாக நிதிதிரட்டி வருகின்றனர். பணமாக இல்லையென்றாலும், பயணத்தின் வழியில் களைப்பாற, ஓரிரவு தங்க இடவசதி அல்லது உணவு தர முடிந்தால் கூட சந்தோஷம்தான் என லஷ்மணன் கேட்டுக்கொண்டார்.

எதிர்கால நோக்கம்

13-23 வயது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம், முக்கியமாக நம் தமிழ் நாட்டிலும் வடகிழக்குமாநிலங்களிலும், இந்த பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தை கொண்டு சேர்க்க உள்ளனர். இந்த பிரச்சாரத்தின் தாக்கமாக, எங்கள் "யூத் எம்பவர்மென்ட்.இன்" எனும் இணையதளத்தில் மாணவர்களை இணைக்க உள்ளோம். இந்த இணையதளம் வழியாக அனுபவமிக்க வல்லுனர்களைக் கொண்டு இளைஞர்களை ஒன்றிணைத்து, அவர்கள் கலந்துரையாடிக் கொள்ளவும், அறிவு சார்ந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளவும் வழி அமைக்க உள்ளோம் என்று தன் வருங்கால திட்டத்தை நம்மிடம் பகிர்கிறார் லஷ்மணன் கிருஷ்ணமுர்த்தி.

இதற்கு நீங்களும் நிதி உதவி செய்ய விரும்பினால், இங்கே கிளிக் செய்யவும்.