சிங்கப்பூர் நிறுவனம் க்ரயான் டேட்டாவில் ரத்தன் டாட்டா முதலீடு

0

சிங்கப்பூர் நிறுவனமான "க்ரயான் டேட்டா" (Crayon Data) இந்தியாவில் டபிள்யூபிபிக்கு (WPP) சொந்தமான மீடியா முதலீட்டு நிர்வாக அமைப்பான குரூப்எம் (GroupM) மற்றும் அதன் துணை நிறுவனமான மைண்ட்ஷேரின் கூட்டணியில் தனது வர்த்தகத்தை தொடங்கியிருக்கிறது. க்ரயான் டேட்டாவில் இந்தியத் தொழிலதிபர் ரத்தன் டாட்டா சமீபத்தில் ஒரு தொகையை முதலீடு செய்துள்ளார். தொகை எவ்வளவு என்பது வெளியிடப்படவில்லை.

“குரூப்எம், மைண்ட்ஷேர் மற்றும் கிரயான் டேட்டா மூன்று நிறுவனங்களும் சேர்ந்து இந்தியாவின் லட்சக்கணக்கான நுகர்வோரின் ரசனைக்கேற்ற வரைபடம் ஒன்றை தயாரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை மிகத் துல்லியமாக கண்டறிய அந்த வரைபடம் உதவும்” என்கிறது கிரயான் டேட்டா வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பு. கிரயான் டேட்டா ஒரு மிகப்பெரும் தனிஉரிம தரவுத் தளம் ஒன்றை உருவாக்கியிருக்கிறது. பெயர் சிம்ப்ளர் சாய்சஸ்( SimplerChoices). இது லட்சக்கணக்கான நுகர்வோரின் விருப்பங்களை உள்வாங்கி, அவர்களின் ரசனையை முன் கூட்டியே அறிந்து கொண்டிருக்கிறது.

“வாழ்க்கை டிஜிட்டல் மயமாகி வரும் இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் ஒருவரின் தேர்வுகளும் பல்கிப் பெருகுகின்றன. தனித்துவத்தை மையப்படுத்தும் ஒரு உலகை நோக்கி நாம் செல்ல இருக்கிறோம். எனவே நிறுவனங்கள், ஒரு தனிமனிதர் அளவில் அவர்களின் தேர்வையும் ரசனையையும் புரிந்து கொண்டு, வாடிக்கையாளர்களுக்குப் பொருத்தமான தேர்வு வாய்ப்புகளை எளிமைப்படுத்துகின்றன” என்கிறார் கிரயான் டேட்டா நிறுவனர் சுரேஷ் சங்கர்.

இந்த நிறுவனம் ஒரு சர்வதேச ‘வாடிக்கையாளர் விருப்ப வரைபட’த்தை (consumer taste graph) உருவாக்கியிருக்கிறது. கடினமான நெறிமுறைகளை (algorithms) பயன்படுத்தி 15 வகைகளில் தேர்வுகளை வகைப்படுத்தி இருக்கிறது. வாடிக்கையாளரின் இந்த விருப்ப வரைபடம் நிறுவனத்திற்குள் மற்றும் வெளியே (ஆன்லைன் மற்றும் சமூக வலைத்தளங்கள்) சேகரிக்கும் விரிவான தரவுகளோடு ஒப்பீடு செய்யப்பட்டு வாடிக்கையாளர் ஒவ்வொருவருக்குமான தனித்தன்மையான ரசனை கண்டறியப்படுகிறது.

இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனங்கள் உயர்தரமான தேர்வுகளை உருவாக்கிக் கொடுக்க முடிகிறது. சந்தைப்படுத்தலுக்கு தரவு அடிப்படையிலான அணுகுமுறையைத்தான் டபிள்யூபிபி கடைப்பிடிக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் கிரயான் டேட்டா செயல்படுகிறது.

“ஊடக வர்த்தகத்தில் சந்தையாளர்களின் அணுகுமுறையில் குரூப்எம் மாற்றத்தைக் கொண்டு வருகிறது. வேறு யாரையும் விட அதிகமாக இந்திய நுகர்வோரின் மனநிலையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதும் அதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட உதவியை வழங்க வேண்டும் என்பதும்தான் எங்கள் லட்சியம். இதை டபிள்யூபிபி டேட்டா கூட்டணியுடன் இந்தியாவுக்கான கிரயான் டேட்டாவின் கணக்கீடும் சேர்ந்து பிரதிபலிக்கின்றன” என்கிறார் குரூப்எம் இந்தியாவின் சிஇஓ சிவிஎல் ஸ்ரீனிவாஸ்.

குரூப்எம்-ன் அங்கமும் ஒரு சர்வதேச ஊடக முகவர் நிறுவனமுமான மைண்ட்ஷேர், 2014ல் கிரயான் டோட்டாவுடன் பங்குதாரர் ஆனது. அல்காரிதம் அடிப்படையிலான விளம்பர இலக்கு மற்றும் தனித்துவமாக்கும் திறன் ஆகியவற்றில் ஆசிய பசிபிக் சந்தையில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கிறது.

“இந்தக் கூட்டணியின் மூலம் மைண்ட்ஷேரின் தனி உரிம தரவுகள் மற்றும் ஆராய்ச்சிகள் கிரயான் டேட்டாவின் பகுப்பாய்வை மேலும் செலுமைப்படுத்துகின்றன. இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு துரிதமான அதே சமயத்தில் பொருத்தமான தீர்வைத் தர உதவுகிறது. வாடிக்கையாளரின் மனநிலை மற்றும் ரசனைகளை புரிந்து கொள்வது மிக மிக முக்கியமானது. அது எங்களுக்கு மிகப்பெரிய சாதகம். அதிலும் குறிப்பாக நாங்கள் டிஜிட்டலில் எங்கள் கவனத்தைக் குவிக்கும் பட்சத்தில் அது மிகப் பெரிய சாதகம். எங்கள் நுகர்வோரைப் புரிந்து கொள்ளும் பயணத்தில் இது ஒரு மிகப்பெரிய சாதகமாக இருக்கும்” என்கிறார் மைண்ட்ஷேர் சவுத் ஏசியா சிஇஓ பிரசாந்த் குமார்.

தமிழில் : சிவா தமிழ்ச்செல்வா