38 வயதிற்கு மேல் சைக்கிள் ஓட்டத் துவங்கி இன்று சாம்பியனாக வலம் வரும் பத்மப்ரியா!

-1

பொதுவாகவே விளையாட்டில் பெண்கள் அதிகமாக காணப்படுவதில்லை, முக்கியமாக தமிழ்நாட்டில் இருந்து கைவிட்டு எண்ணக் கூடிய அளவில் தான் விளையாட்டு வீராங்கனைகள் இருக்கின்றனர். அப்படி இருக்கையில் அரிதாக சைக்கிள் ஓட்ட வீராங்கனையாக மின்னுகிறார் சென்னையைச் சேர்ந்த பத்மப்ரியா.

இந்தியாவில் 1000 கீமி தூரத்தை 75 மணிநேரத்திற்குள் கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை முதன்முதலில் படைத்தவர் சென்னை பத்மப்ரியா. இவரின் இச்சாதனையை நாம் கேட்கும் பொழுது இவர் நிச்சயம் சிறு வயதில் இருந்து சைக்கிளிங்கில் ஆர்வம் கொண்டு முயற்சி செய்து இந்த எல்லையை எட்டி இருப்பார் என்றே நினைப்போம். ஆனால் இப்போது 41 வயதாகும் பத்மப்ரியா கடந்த நான்கு வருடங்குளுக்கு முன்பே மிதிவண்டி ஓட்டத்தை துவங்கியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா...

“நான் பள்ளிக்கூடத்தில் கூட ஓட்ட பந்தையமோ அல்லது எந்த ஒரு விளையாட்டிலும் கலந்துக்கொண்டது இல்லை. 38 வருடம் எந்த விளையாட்டையும் முயற்சி செய்ததில்லை. தற்செயலாக அமைந்ததே இந்த சைக்கிளிங் பாதை,” என்கிறார் பத்மப்ரியா.

பெரும்பாலானோர் போலவே காலை ஒன்பது முதல் மாலை ஆறு மணி வரை வேலையில் பணிபுரிகிறார் இவர். கல்லூரி படிக்கும் வயதில் ஓர் மகன் இருக்கும் இவர் ஒற்றை பெற்றோராக இருந்து வீட்டையையும், பணியும் பார்த்துக்கொள்கிறார். இதற்கிடையில் தான் தன் அலுவலக நண்பர் மூலம் மிதிவண்டிக்கு பரிட்சியமானார் பத்மப்ரியா. ஆனால் இன்று தன் வாழ்க்கையில் இது இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார்.

2014-ல் தன் சைக்கில் பயணத்தைத் துவங்கி தன் முதல் நெடுதூற 100 கிமீ சைக்கிளிங் போட்டியில் பங்கேற்று தமிழ்நாடு சைக்கிள் கிளப் சாம்பியன் பட்டத்தை பெற்றார். அதில் இருந்து அவரது சைக்கிள் பயணம் நிக்காமல் தொடர்கிறது. அதே வருடத்தில் 200, 300, 400 மற்றும் 600 கிமீ என தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார் பத்மப்ரியா. ஒரு வருட பயிற்சிலே 75 மணிநேரத்திற்குள் 1000 கி மீ சாதனையை தொட்டுவிட்டார்.

“எனது அலுவலக நண்பர் சொல்லி ஒரு வருடம் கழித்து தான் சைக்கிளிங் செய்ய முயற்சியே செய்தேன். 10 கிமி-இல் துவங்கி 30, 40 என படிப்படியாக முன்னேறினேன். தற்பொழுது என் அலுவலகத்திற்கே மிதிவண்டியில் தான் செல்கிறேன். அதாவது ஒரு நாளுக்கு 50கீமி ஓட்டுகிறேன்,” என்கிறார்.

அலுவலகத்திற்கு சென்று கொண்டே தன் சைக்கிளிங் பயணத்தையும் தொடர்கிறார் இவர். பெரும்பாலான போட்டிகள் வார இறுதியில் நடப்பதால் தன் இயல்பு வாழ்க்கைக்கு எந்த வித தடையும் இருப்பதில்லை என்கிறார். மேலும் தினமும் தன் அலுவலகத்திற்கு தன் மிதிவண்டியிலே பயணம் செய்வதால் அதுவே தன்னை போட்டிகளுக்கு தயார் செய்கிறது என்கிறார் பத்மப்ரியா. அதையும் தாண்டி தன் பயிற்சியாளர் கிரேடியன் கோவியஸ் அளிக்கும் சில அறிவுரைகள் படி அதிகாலையில் போட்டிக்கான பயிற்சிகளை மேற்கொள்கிறார்.

கோச் மற்றும் சக சைக்கிளிங் பயணிகளுடன் பத்மப்ரியா
கோச் மற்றும் சக சைக்கிளிங் பயணிகளுடன் பத்மப்ரியா

பெண்ணாக இருப்பதினால் சந்திக்கும் சவால்கள்

“இந்த விளையாட்டை பொறுத்தவரை ஆண் பெண் இருவருக்கும் சாலையும் செல்லும் பாதையும் ஒன்று தான். நம்பிக்கையுடன், போட்டிக்கு முன் கூட்டியே தயார் ஆன நிலையில் இருந்தால் ஆண் பெண் என்ற வேறுபாடு எதுவும் இல்லை,” என்கிறார்.

நெடுஞ்சாலைகளில் செல்லும்போது போட்டியாளர்கள் சந்திக்கும் அபாயம் ஒன்று தான். சாலையின் இருட்டு, சாலை விபத்து போன்ற ஆபத்துகள் பாலினம் பார்த்து ஏற்படுவதில்லை. அதனால் பெண்ணென்ற முறையில் தனிப்பட்ட எந்த சவால்களையும் சந்திக்கவில்லை என்கிறார். இந்த விளையாட்டு தன் பார்வையை மாற்றியுள்ளதாகவும், அனைத்தையும் நல்ல கண்ணோட்டத்துடன் தைரியமாக சந்திக்கும் திறனை தனக்குள் வளர்த்ததாகவும் தெரிவிக்கிறார். நான்கு வருடத்திற்கு முன் இருந்த பெண்ணாக தான் இன்று இல்லை என்றும் தற்பொழுது எந்த சவாலையும் எதிர்க்கொள்ளும் துணிச்சல் இருப்பதாக திடமாகக் கூறுகிறார்.

“பெண்கள் எப்படி யோகா போன்றவற்றில் ஈடுபடுகிறார்களோ அது போன்று சைக்கிளிங்கையும் முயற்சி செய்ய வேண்டும். சைக்கிளிங் செய்தால் தினமும் நாம் செல்லும் சாலை கூட புதுவிதமாக தெரியும். மேலும் இது பிறரை சாராமல் தனி சுதந்திரத்தை நிச்சயம் தரும்,” என பெண் ஓட்டுனர்களை ஊக்குவிக்கிறார்.

தொடக்கத்தில் தன் குடும்பத்தில் இதை ஏற்கத் தயங்கினாலும் தற்பொழுது இவரைக்கண்டு பெருமிதம் கொள்கிறார்கள். நம் பெற்றோர், குழந்தைகள் என அனைவருக்கும் தெரிய வேண்டும் நமக்கென்று ஓர் வாழ்க்கை மற்றும் விருப்பங்கள் உள்ளது என்று. நம்மை எவரும் அலட்சியமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. இதை என் குடும்பம் புரிந்துக்கொண்டு எனக்கு ஆதரவாக நிற்கின்றனர் என்கிறார்.

எந்த விளையாட்டு பின்னணியில் இருந்தும் வராமல், 38 வயதிற்கு மேல் தனக்கு என்று ஒரு பாதையை ஏற்படுத்திக்கொண்டு வயது வெறும் எண்ணிக்கை தான் என நிரூபித்துக் காட்டியுள்ள பத்மப்ரியா சைக்கிளிங்கில் மேலும் பல சாதனையை படைக்கக் காத்திருக்கிறார்.  

Related Stories

Stories by Mahmoodha Nowshin