விபத்தால் செயலிழந்தும் பலரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை ப்ரீத்தி ஸ்ரீனிவாசன்!

0

ப்ரீத்தி ஸ்ரீனிவாசன், 19 வயதுக்குட்பட்ட தமிழக பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன். ஜூனியர் அளவில் விளையாடிய இளம் வீராங்கனை என்ற சாதனையைக் கொண்டவர். தேசிய நீச்சல் வீராங்கனையாகவும் இருந்தவர் இவர்.

விளையாட்டுத் துறையில் வெற்றிகளை குவித்த நல்ல எதிர்காலத்தை கொண்டு முன்னேறிக் கொண்டிருந்த ப்ரீத்தியின் வாழ்வில் இடியாய் வந்தது அந்த விபத்து. 18 வயதாக இருந்த போது அவருக்கு ஏற்பட்ட விபத்தால் கை, கால் செயலிழந்து நடக்கமுடியாமல் போனார். ஆனால் அவரின் உற்சாகம் மட்டும் குறையவில்லை. தனக்கு ஏற்பட்ட சம்பவத்தை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு அதனோடு வாழ முடிவெடுத்தார் அந்த இளம் வீராங்கனை.

செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 1979-ல் பிறந்த ப்ரீத்தி, நான்கு வயதாக இருந்தபோதில் இருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் கொள்ளத் தொடங்கினார். 1983-ல் இந்தியா உலக கோப்பையை இங்கிலாந்து அணிக்கு எதிராக வென்றபோது அந்த விளையாட்டால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். 

ஏழு வயதானதும் கிரிக்கெட் கோச்சிங் மையத்தில் சேர்ந்து 300 பையன்களுக்கு மத்தியில் அற்புதமாக பேட்டிங் பயின்றார். ப்ரீத்திக்கு பந்து வீசவே அங்கிருந்த மாணவர்கள் பயப்படும் அளவிற்கு அதிவேகமாக பேட் செய்வாராம். ப்ரீத்தியின் அளவில்லா திறமையால் அவர் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பார் என்று அனைவருமே எதிர்ப்பார்த்தனர். 

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, 1988, ஜூலை 11-ம் தேதி, கல்லூரி நண்பர்களுடன் சென்னையில் இருந்து பாண்டிச்சேரி சென்று திரும்பியபோது அந்த விபத்து நடந்தது. வழியில் இருந்த ஒரு தனியார் பீச்சுக்குள் சென்று நண்பர்களுடன் கடலில் விளையாடினார் ப்ரீத்தி. நீச்சல் வீராங்கனையான போதும் வேகமாக வந்த கடல் அலையில் சிக்கிக்கொண்டு கடலுக்குள் வீசப்பட்டார். 

தனக்கு நடந்த விபத்தை பற்றி விவரிக்கையில்,

“என் கால்கள் திடீரென செயலிழந்து போனது. அவற்றை நான் நகர்த்த முயற்சித்தபோது முடியாமல் தண்ணீரில் விழுந்தேன். எனக்கு ஷாக் அடித்தது போல் இருந்தது. என்னை என் நண்பர்கள் தான் கடலில் இருந்து தூக்கிச் சென்றனர்,” என்றார் ப்ரீத்தி. 

கடலில் தன்னை ஏதோ கடித்துவிட்டது என்றும் சில நாட்களில் சரியாகிவிடும் என்றே அவர் நினைத்திருந்தார். ஆனால் அவருக்கு முதுகு தண்டு வடத்தில் ஏற்பட்ட அடியின் காரணமாக அவர் கை, கால்கள் செயலிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விளையாடித் திரிந்த கால்களை நகர்த்தக்கூட முடியாது என்ற நிலை அவரை புரட்டிப் போட்டது.

வீல் சேரில் வாழ்க்கையை கழிக்கத்தொடங்கிய ப்ரீத்தியின் குடும்பம் அவருக்கு ஆதரவாக இருந்தனர். அவரை ஊக்கப்படுத்தி, இதே நிலையில் உள்ள பலருக்கு முன்மாதிரியாக திகழ அவரை கேட்டுக்கொண்டனர்.

Soulfree என்ற தன்னார்வ தொண்டு மையம் ஒன்றை தமிழகத்தில் நடத்திவரும் ப்ரீத்தி, தன்னைப் போல் பாதிக்கப்பட்டு தவிக்கும் உடல் ஊனமானவர்களுக்கு உதவிகள் புரிகிறார். மாற்றுத்திறனாளிகள் சமூகத்தினருக்கு தேவையான விழிப்புணர்வு, மக்களிடையே அவர்களின் நிலை குறித்த புரிதலை ஏற்படுத்தி வருகிறார். சிலருக்கு வேலைவாய்ப்பையும் தேடி வழங்கி வருகிறார். உடல் பாதிப்புள்ள பலருக்கு பயிற்சிகள் அளித்து, ரேடியோ அறிவிப்பாளர், பேச்சு புத்தகங்கள், போன்ற பல துறைகளில் ஈடுபட முயற்சிகளும் எடுத்துள்ளார் இந்த தன்னம்பிக்கை வீராங்கனை.

கட்டுரை: Think Change India

Related Stories

Stories by YS TEAM TAMIL