அமெரிக்க வேலையை துறந்து ஒன்றிணைந்த மருத்துவத்தை அளிக்கும் Syncremedies தொடங்கிய அர்ஜுன் ராவ்!

0

அர்ஜுன் ராவ் 1998-ல் குவெம்பு விஷ்வவித்யாநிலயாவில் மருத்துவர் பட்டம் பெற்றார். எனினும் உடனடியாக அமெரிக்காவுக்கு மருத்துவப் பயிற்சிக்காக சென்றுவிட்டார். எம்பிஏவும் முடித்தார். ஆனால் 16 வருடங்கள் கழிந்ததும் ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்தார். 

”நவீன மருந்துகள் ஏன் ஒருவருக்கு நோய் தாக்கிய பின்பு சிகிச்சை அளிக்கிறது? வியாதியின் ஆரம்ப கட்டத்திலேயே அதை தடுக்கவோ அல்லது நோய்தாக்கத்தை குறைக்கவோ ஏன் உதவுவதில்லை? ஒரு சிலருக்கு வாழ்நாள் முழுவதும் உடல்நலப் பிரச்சனை இருக்கும். பக்கவிளைவுகள் குறித்து அதிகம் தெரிவிக்காமல் அதே மருந்துகள் தொடர்ந்து பரிந்துரைக்கப்படும்.” என்றார் Dr ராவ்.

ஆரோக்யமான வாழ்க்கையை அடைய உலகளவில் சிறந்த மருந்துகளை பாரம்பரியமாக பல காலமாக நிரூபிக்கப்பட்ட சிகிச்சை முறைகளுடன் இணைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து 2013-ல் அவர் சிந்தித்தார். 2014-ல் இந்தியா திரும்பியதும் ’சின்க்ரெமிடீஸ்’ (Syncremedies) அமைத்து ’ஒருங்கிணைந்த மருத்துவம்’ என்கிற முறையை ஆராயத் தொடங்கினார். இந்த முறையை உறுதிப்படுத்துவதிலும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதிலும் கடந்த மூன்றாண்டுகளை செலவிட்டார்.

ஃபில்டர் காபிக்கு பெயர் போன பசவனகுடி, சிறு கடைகள் போன்ற பாரம்பரிய பகுதிகளில் இந்த முறையை ஆராயத் துவங்கினார். அவரது நோக்கத்தை ஆதரிக்கும் மற்றொரு மருத்துவரை கண்டறிந்தார். ஒவ்வொரு புதன்கிழமையும் பசவனகுடியின் ஒரு க்ளினிக்கில் அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம் என வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த மருத்துவர்களும் சிறந்த சிகிச்சைக்கு மருத்துவ முறைகளை எப்படி ஒருங்கிணைப்பது என்பது குறித்து நோயாளிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

நிவாரணம் பெற பொருத்தமான சிகிச்சை முறையுடன் கூடிய ஆதாரம் சார்ந்த அணுகுமுறையை பயன்படுத்துகின்றனர். உதாரணத்திற்கு ஒரு நோயாளிக்கு வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் இருந்தால் ஆயுர்வேத மருத்துவர் நச்சுக்களை உடலிலிருந்து வெளியேற்ற பொருத்தமான உணவு மற்றும் உடற்பயிற்சி குறித்து மற்ற துறை சார்ந்தவர்களுடன் ஆலோசனை மேற்கொள்வார். அதன் பிறகு அலோபதி மற்றும் ஹோமியோபதி மருத்துவர்கள் அடுத்தகட்ட சிகிச்சை முறையை மேற்கொள்வார்கள். 

ஆக உணவுமுறை நிர்வாகம், மருத்துவம் மற்றும் பழக்கத்தில் மாற்றங்கள் ஆகியவற்றின் மூலம் ஆறு மாதங்களில் நோயாளி குணப்படுத்தப்படுவார். நாடு முழுவதும் தொழிலை விரிவுபடுத்தும் பணிக்காக வந்திருந்த தெரிந்த நபர் ஒருவர் மூலமாக Dr ராவ் 2016-ல் பூஜா ப்ரகாஷ் ராவை சந்தித்தார். பூஜா ஆர்வி பொறியியல் கல்லூரியில் 2010 பேட்ச்சில் பட்டம் பெற்றவர். ஐஐஎம்-பி 2015 பேட்ச் மாணவி. இவர் எம்பிஏ முடித்ததும் வேலை தேடிவந்தார். அர்ஜுனை சந்தித்த பிறகு தொழில்முனைவோராவதற்காக ஆபத்துகளை சந்திப்பதில் தவறில்லை என்று நினைத்தார். நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஓஓ ஆனார்.

Syncremedies நோயாளிகளையும் மருத்துவர்களையும் தொடர்புகொள்ளச் செய்ய இணையத்தை பயன்படுத்தியது. ஒவ்வொரு நோயாளியின் சிகிச்சை குறித்த தகவல்களையும் சேகரிப்பதால் இது ஒரு எலக்ட்ரானிக் மெடிக்கல் ரெக்கார்ட் தளமாகும். ஒரு நோயாளி ஒருங்கிணைந்த மருத்துவம் வாயிலாக சிகிச்சை பெற விரும்பினால் Syncremedies வலைதளத்தில் நுழைந்தால் போதும்.

ஆலோசனை ஆன்லைனில் வழங்கப்படும். ஆனால் நோயாளிகள் மருத்துவர்களை தேர்வு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்யப்பட்டதும் வீடியோ மூலம் மருத்துவர்கள் நோயாளியுடன் தொடர்புகொண்டு சிகிச்சைக்கான திட்டத்தை உருவாக்க 40 நிமிடங்கள் செலவிடுவார்கள். திட்டம் உறுதிப்படுத்தப்பட்ட பின்பு ப்ரிஸ்க்ரிப்ஷனும் மருந்துகளும் நோயாளியின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும். 

Syncremedies தளத்தில் நான்கு க்ளினிக்குகளுடன் 21 மருத்துவர்கள் பதிவு செய்துள்ளனர். எந்த க்ளினிக்கும் நிறுவனத்தினுடையதல்ல. க்ளினிக்கின் மருத்துவரகள் இவர்களின் தளம் வாயிலாக தன்னுடைய அறிவாற்றலை மற்ற துறை சார்ந்த மருத்துவர்களுடன் பகிர்ந்துகொள்வார். பெங்களூருவில் 20, புனேவில் 10, ஹைதராபாத்தில் 5 என க்ளினிக்குகளின் எண்ணிக்கையை வருடத்தின் இறுதிக்குள் உயர்த்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

”இது ஒரு ஆன்லைன் மாடல் என்பதால் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.” என்று விவரித்தார் Dr ராவ். 

சிகிச்சை திட்டங்கள் முறையாக செயல்பட இணையதளம் அல்லது ஸ்மார்ட்ஃபோன் பெரிதும் உதவுகிறது என்றார். உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளுடன் தடுப்பு நடவடிக்கைகளை அளிக்கிறது Syncremedies. மேலும் பொதுவான மற்றும் வாழ்க்கைமுறை சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை பராமரிப்பும் ஆரோக்கியத்திற்கான சேவையும் வழங்குகிறது.

பொதுவான நோய்களுக்கான ஆரோக்கியம் சார்ந்த அணுகுமுறைக்காக அமெரிக்கா மற்றும் அமெரிக்காவிலுள்ள தனியார் க்ளினிக்குகளுடன் கையொப்பமிடுகிறது. இந்த பகுதிகளிலுள்ள க்ளினிக்குகள் தடுப்பு மற்றும் ஆரோக்கிய சேவைகளுக்காக Syncremedies தளத்தை பயன்படுத்துகிறது. அமெரிக்காவில் டெலிமெடிசன் பயன்படுத்தி ஒரு ஆலோசனை தளமாக விளங்க விரும்புகிறது இந்த ஸ்டார்ட் அப்.

சவால்கள் மற்றும் வாய்ப்புகள்

ஒருங்கிணைந்த மருத்துவம் நோயாளிகளுக்கு உதவும் என்பதை நன்கறிந்த மருத்துவர்களை கண்டறிவதே நிறுவனத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். Dr ராவ் விவரிக்கையில்,

”பல மருத்துவர்கள் வருவாய்க்கான வழியாக இதை பார்க்கின்றனர். மக்கள் தகவல்களுடன் சரியான பலனையும் பயனுள்ள சிகிச்சை முறையையும் அளிக்கும் தளமாக இதைப் பார்க்கின்றனர்.”

50 லட்சம் ரூபாயை இந்நிறுவனம் முதலீடு செய்துள்ளது. தற்போது ஒரு கோடி ரூபாயை எட்ட உள்ளது. மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் சிகிச்சை திட்டத்திற்கான கட்டணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை பெற்றுக்கொள்ளும் விதத்தில் இந்நிறுவனத்தின் வணிக மாதிரி அமைந்துள்ளது.

வெவ்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள் ஒன்றிணைவதற்கு சம்மதிக்க வைப்பதுடன் துறையிலேயே பல சிக்கல்கள் உள்ளது. மருந்து துறை 55 பில்லியன் டாலர் அளவுடையது என்று இந்தியன் ப்ராண்ட் ஈக்விட்டி ஃபவுண்டேஷன் தெரிவிக்கிறது. எனினும் ஒருங்கிணைந்த மருத்துவத்தின் தேவையிருப்பதை WHO அங்கீகரித்துள்ளது.

பாரம்பரிய மற்றும் ஈடுசெய்யும் மருத்துவத்தின் முக்கியத்துவத்தை WHO அங்கீகரித்தாலும் ஹெல்த்கேரின் சில பகுதிகளுக்கு முக்கியத்துவமளிப்பதில்லை. உலகின் ஒவ்வொரு நாட்டிலும் சிகிச்சைமுறை காணப்படுகிறது. அதன் தேவையும் அதிகரித்து வருகிறது. ஹெல்த்கேரின் ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்குவதற்கான தேவையிருப்பதை பல நாடுகள் அங்கீகரித்துள்ளது. 

இதன் மூலம் அரசாங்கம், ஹெல்த்கேர் பயிற்சியாளர்கள் மற்றும் ஹெல்த்கேர் சேவைகளை பெறுபவர்கள் போன்றோர் இந்தத் துறையை பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் சிக்கனமாகவும் அணுக உதவும். இந்த அணுகுமுறைக்கான முறையான ஒருங்கிணைப்பு, கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வை போன்றவற்றிற்கான ஒரு உலகளாவிய உத்தி ஹெல்த்கேரின் இந்த முக்கிய பகுதிக்கான செயல்திறன் கொள்கையை உருவாக்க நினைக்கும் நாடுகளுக்கு பயன்படும். பாரம்பரிய மருத்துவத்தை சமீப காலத்திற்கு கொண்டு வருவதில் தொழில்நுட்பம் பெரும் பங்கு வகிக்கும்.

”பலன் சார்ந்த வணிகத்தின் வெற்றிக்கு தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தவேண்டும்,”

என்கிறார் ஐடியாஸ்ப்ரிங் கேப்பிடல் நிறுவனத்தின் சிஇஓ நாகானந்த் துரைசாமி. மருத்துவப் படிப்பிற்கான அவரது கடின உழைப்பும் முயற்சிகளும், நோயாளிகளின் தேவையை புரிந்துகொண்டதற்கும் சரியான பலன் Dr ராவுக்கு கிடைத்துவிட்டது. இதில் முறையாக இணையவேண்டிய ஒரே விஷயம் ஒருங்கிணைந்த மருத்துவத்தை நோயாளியும் மருத்துவரும் நம்பவேண்டும். இதுவும் நடந்துவிட்டால் அவர் எதிர்பார்த்த பலனை அடைந்துவிட்டார் எனலாம்.

ஆங்கில கட்டுரையாளர் : விஷால் கிருஷ்ணா