ஒபாமா ஃபவுண்டேஷன் ஃபெலோஷிப் திட்டத்தில் தேர்வாகியுள்ள முதல் இந்தியர் ப்ரீத்தி ஹெர்மன்!

2

முன்னாள் அமெரிக்க அதிகர் பராக் ஒபாமாவின் ஃபவுண்டேஷனின் மதிப்புமிக்க ஃபெலோஷிப்பிற்காக குடிமைப்பணி மற்றும் சமூகப் பிரிவில் பணியாற்றும் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் தேர்வான ஒரே இந்தியர் ப்ரீத்தி ஹெர்மன். இவர் தற்போது Change.org நிறுவனத்தில் உலகளாவிய நிர்வாக இயக்குனராக பணியாற்றுகிறார். 

இந்த ஃபெலோஷிப்பிற்காக 191 நாடுகளில் இருந்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்தது. இருப்பினும் ப்ரீத்தியின் தகுதியும் அனுபவமும் ஒபாமா ஃபவுண்டேஷன் ஃபெலோஷிப்பின் முதல் எடிஷனில் இணைவதற்கான வாய்ப்பினைப் பெற்றுத் தந்துள்ளது. மற்ற 19 பேரும் அமெரிக்கா, யூகே, ஃபிலிஃபைன்ஸ், டொமினிக்கன் ரிபப்ளிக், எல் சால்வடர், மாலி, ருவாண்டா, ஹங்கேரி, க்ரீஸ், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அத்துடன் அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நவ்தீப் காங் என்பவரும் தேர்வானவர்களில் ஒருவராவார்.

ஊட்டியின் கூடலூர் நகரைச் சேர்ந்த ப்ரீத்தி நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். Change.org நிறுவனத்தில் இணைவதற்கு முன்பு ஒரிசாவில் உள்ள பழங்குடியினருடனும் கர்நாடகாவில் உள்ள தலித் சமூகத்தினருடன் நேரம் செலவிட்டுள்ளார்.

(ப்ரீத்தி ஹெர்மன் பற்றிய விரிவான கட்டுரை: ’மாற்றுத்துக்கான மாற்றமாய்’- தொழில்நுட்ப சமூகப் புரட்சி ஏற்படுத்தும் ப்ரீத்தி ஹெர்மன்!)

நிதி ஆயோக், MyGov.in மற்றும் ஐக்கிய நாடுகள் ஆகியவற்றின் #WomenTransform முயற்சியின் ஒரு பகுதியாக இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்திய 25 பெண்களில் ப்ரீத்தி ஒருவராவார். இவ்வாறு பல விதமாக அவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இந்த ப்ரோக்ராம் குறித்தும் விண்ணப்பத்தவர்களில் இருந்து இந்த 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதன் காரணம் குறித்தும் ஒபாமா ஃபவுண்டேஷனின் அதிகாரப்பூர்வமான தளத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

நமது சமூகத்தை மேம்படுத்த பல்வேறு வழிமுறைகளை பின்பற்றலாம் என்பதற்கான முன்னுதாரணமாக இந்த ஃபெலோக்கள் விளங்குகின்றனர். மக்கள் பணியில் ஈடுபடும் இந்தத் தலைவர்கள் சமூக ஒருங்கிணைப்பு, சுகாதாரம், தொழில்நுட்பம், கலை என பல்வேறு பிரிவுகளில் தங்களுக்கு உள்ள திறனைகளை இந்தப் பணிகளுக்காக பயன்படுத்துகின்றனர். 

பள்ளிகளை மேம்படுத்த பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அதிகாரமளித்தல், கல்வி சார்ந்த டூல்களை காது கேளாத குழந்தைகளும் மற்ற குழந்தைகளுக்கு சமமாக அணுகுவதை உறுதிசெய்தல், குற்றவியல் நீதி அமைப்பிலும் அகதிகள் முகாம்களிலும் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கான பராமரிப்பு வசதி ஏற்படுத்துதல், தீய பழக்கங்களுக்கு அடிமையானோருக்கு சிகிச்சை வழங்க பல்வேறு சுகாதார அமைப்புகளுடன் கைகோர்த்து செயல்படுதல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக தங்களது திறன்களை பயன்படுத்துகின்றனர்.

சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக இந்தத் தலைவர்கள் தங்களது சமூகத்துடன் இணைந்து செயல்படுகின்றனர். மாற்றத்தை ஏற்படுத்த நம்மை வேறுபடுத்தும் எல்லைகளைக் கடந்து செயல்படவேண்டும் என்பதை நன்குணர்ந்துள்ளனர். கூட்டாக மேற்கொள்ளப்படும் முயற்சி, சமூக நலன் சார்ந்த பணி போன்றவை சமாளிக்கமுடியாத பிரச்சனைகளுக்குக் கூட வலுவான நிலையான தீர்வினை உருவாக்கும் என்பதற்கு இவர்களது வெற்றி சான்றாகும்.

இந்தியாவின் கடினமான பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதில் தங்களது சமூகத்துடன் ஒன்றிணைந்து செயல்பட பெண் தலைவர்களை தயார்படுத்துகிறார் என ப்ரீத்தி குறித்து தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிபர் பதவி காலம் முடிந்த பிறகு அவர் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த முக்கிய முயற்சிகளில் இந்த ஃபெலோஷிப்பும் ஒன்று. அதாவது உலகளாவிய தலைவர்களின் வம்சாவளியை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவர் இந்தியா வந்திருந்தபோது ஒபாமா தனது உரையில், 

“அடுத்த தலைமுறையினரில் தலைமைப்பண்பு மிக்கவர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த விரும்புகிறேன். அதுவே ஃபவுண்டேஷனின் முக்கிய நோக்கமாகும்,” என குறிப்பிட்டிருந்தார்.

ஆங்கில கட்டுரையாளர் : பின்ஜல் ஷா | தமிழில் : ஸ்ரீவித்யா