'முற்றிலும் ஆர்கானிக் மாநிலம்'- ஐக்கிய நாடுகள் விருதினை வென்ற இந்திய மாநிலம்! 

0

உலகின் முற்றிலும் ஆர்கானிக் மாநிலம் என்கிற அந்தஸ்தை வென்றுள்ளது சிக்கிம். ரோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் விழாவில் பியூச்சர் பாலிசி 2018 விருதினை சிக்கிம் வென்றுள்ளது. அத்துடன் நிலையான வளர்ச்சியை எட்டியதற்காக இந்நிகழ்வில் சிறந்த கொள்கைகளுக்கான ஆஸ்காரையும் பெற்றுள்ளது. 

உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (FAO) தலைமையகத்தில் இந்த விருது வழங்கப்பட்டது. 25 நாடுகளில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட 51 இடங்களுடன் இந்த மாநிலம் போட்டியிட்டது. வேளாண் சூழலியலை ஊக்குவிக்கும் உலகின் மிகச்சிறந்த சட்டங்கள் மற்றும் கொள்களைகளைக் கொண்ட மாநிலத்திற்கு பியூச்சர் பாலிசி 2018 விருது வழங்கப்படுகிறது. 

சிக்கிம் முதலமைச்சர் குமார் சாம்லிங், சிக்கிம் ஜனநாயக முன்னணி எம்பி பிரேம் தாஸ் ராய், இந்திய தூதர் ரீனத் சந்து ஆகியோர் அம்மாநிலத்தின் சார்பில் விருதினை பெற்றுக்கொண்டனர்.

சிக்கிம் முன்னுதாரண மாநிலமாக திகழ்வதாக பாராட்டிய FAO-வின் துணை இயக்குனர் மரியா ஹெலனா செமெடோவிடம் இருந்து விருதினை பெற்றுக்கொள்ளும்போது, 

”நாம் ஒன்றிணைந்து ஆர்கானிக் உலகை உருவாக்குவோம்” என்றார்.

சிக்கிமின் ஆர்கானிக் விவசாய கொள்கை 66,000-க்கும் அதிகமான விவசாயக் குடும்பங்களுக்கு பலனளித்துள்ளது. அத்துடன் சுற்றுலா சார்ந்த வரவையும் அதிகரித்துள்ளது. ஐஏஎன்எஸ் உடனான இமெயில் உரையாடலில் பிரேம் தாஸ் ராய் குறிப்பிடுகையில்,

இந்தியாவின் ஹிமாலய மாநிலம் இந்த ஆண்டின் வேளாண் சூழலியலில் பியூச்சர் பாலிஸி விருதினை வென்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. முதலமைச்சர் பவன் சாம்லிங் தலைமைத்துவம் பாராட்டிற்குரியது. 

“தொலைநோக்கு பார்வையும் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்கிற நோக்கமுமே இந்த கொள்கை வகுக்கப்பட்டதற்கான முக்கியக் காரணமாகும். இவை எளிமையாக இருக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மனித குலத்தின் வளர்ச்சிக்காகவும் பருவநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துவதற்காகவும் பரவலாக அமல்படுத்தப்படும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கைகள் நிலையான வளர்ச்சித் திட்டங்களை எட்டும் முயற்சியை ஆதரிக்கிறது. இந்த தருணத்தை நினைத்து சிக்கிமும் இந்தியாவும் பெருமைப்படவேண்டும்,” என்றார்.

ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் முற்றிலுமாக நீக்கிவிடும் விதத்தில் அமைக்கப்பட்ட கொள்கைகளே கவனத்தை ஈர்த்து விருதினை பெற்றுத்தந்துள்ளது. இந்த மாநிலத்தில் ரசாயன பூச்சிக்கொல்லிகள் முழுமையாக தடைசெய்யப்படவும் உதவியுள்ளது. வேளாண் சூழலியலை ஊக்குவித்ததன் மூலம் 2014 மற்றும் 2017-ம் ஆண்டுகளிடையே சிக்கிமில் 50 சதவீத வளர்ச்சி காணப்பட்டது.

2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சிக்கிமை நாட்டின் முதல் ஆர்கானிக் மாநிலமாக அறிவித்தார். அத்துடன் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இந்த மாநிலம் ஆர்கானிக் விவசாயத்தின் முன்னோடி என்றும் குறிப்பிட்டார்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL