நெட்டிசன்களை வசப்படுத்தும் முனைப்பில் தமிழக கட்சிகளும் தலைவர்களும்! 

அரசியல் தலைவர்களை போன்றே தேர்தல் ஆணையமும் சமூக வலைதள பிரச்சாரத்தில் மும்முரம்! 

0

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி மே 16 நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் தேர்தலுக்கான களம் மெல்ல சூடு பிடித்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் களம், தொழில்நுட்பத்தை மிகவும் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது.

முகநூலிலும், டிவிட்டரிலும் தடம் பதிக்காமல் இருந்தால் தங்கள் அரசியல் பிரச்சாரங்களை எல்லாத் தரப்பு மக்களிடம் குறிப்பாக ஓட்டளிக்கும் உரிமையுடைய இளைய சமுதாயத்திடம் கொண்டு செல்ல முடியாது என கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் உணர்ந்தே உள்ளனர். 

இதற்காக, அரசியல் கட்சிகள் தங்களுக்குள் தகவல் தொழில்நுட்ப பிரிவுகளை ஏற்படுத்தி தங்கள் கட்சிகளுக்கான பிரச்சாரத்தை சமூக தளங்களுக்காக பிரத்யேகமாகவும் மிகவும் வேகமாக முன்னெடுத்து செல்லத் தொடங்கியுள்ளனர்.

சமூக வலைதளத்தில் குதித்த தேர்தல் ஆணையம்

இதில் சுவாரசியம் என்னவென்றால், அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது, தேர்தல் ஆணையமும் சமூக வலைதள பிரச்சாரத்தில் குதித்திருப்பது தான். டிவிட்டர், ஃபேஸ்புக், யூடியூப் என சமூக வலைத்தளங்களில் பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளது தேர்தல் ஆணையம். (இருக்காத பின்ன! பணம் முடக்கி எலக்ஷன் நடத்தும்போது எல்லாரும் வீட்டுல முடங்கி கிடந்தா ?)

வாக்களிப்பதற்கான அவசியத்தை பிரபலங்கள் மூலம் வீடியோ எடுத்து அதனை இந்த சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறது தேர்தல் ஆணையம். வாக்களிப்பது ஜனநாயக கடமை என நடிகர்கள் கூறும் வீடியோவும் அதில் ஒன்று. அது போன்றே மீம்களை இறக்கியும் கலக்கி வருகிறது.

“சக்திமான் சீரியல் பாத்திருக்கீங்களா ? அப்படின்னா உங்களுக்கு ஓட்டு போட வயசு வந்தாச்சு.” என கேட்டு சக்திமான் வேடத்தை இன்றைய இளைஞர்களுக்கு நினைவுப்படுத்திய பெருமை தேர்தல் ஆணையத்திற்கு உண்டு. #TN100percent என்ற ஹேஷ் டாக் உருவாக்கி, அதில் இத்தகைய பிரச்சாரங்களை கொண்டு செல்கிறது. தேர்தல் ஆணையத்தின் ஸ்பெஷல் சம்மரி ரிவிஷன் -2016 (special summary revision-2016) என்ற முகநூல் பக்கம், 9380 லைக்குகளை கொண்டுள்ளன. இதுபோன்றே TNelectionsCEO என்ற பெயரிலான டிவிட்டர் ஐடியை பின்தொடர்வோர் 2967 பேர். எது எப்படியோ எல்லாரையும் ஓட்டு போட வெச்சாகணும் என கங்கணம் கட்டி சமூக வலைத்தளத்தில் புகுந்து விளையாடுகிறது தேர்தல் ஆணையம்.

ஆன்லைனில் கலக்கும் கலைஞர் அன் கோ

90 வயதை கடந்த பின்னரும் சமூக வலைதளத்தில் சளைக்காமல் செயல்படுபவர் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி. Kalaignar89 என்ற பெயரில் டிவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். தினமும் குறைந்த பட்சம் 2 பதிவுகளையாவது போட அவர் தவறுவதில்லை. அவருக்கே உரித்தான வகையில் கேள்வி பதிலாக போடும் பதிவுகள் இன்னும் அருமை. அவரது ஃபேஸ்புக் பக்கத்தை 492316 பேரும் டிவிட்டர் கணக்கை 66500 பேரும் பின்தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைக்கும், இந்த வயதிலும் பல லட்சக்கணக்கான அவரது தொண்டர்களை, சமூக வலைதளம் வழி கலைஞர் கருணாநிதி தொடர்பில் வைத்திருப்பது ஆச்சரியமான ஒன்று.

அடுத்து அவரது மகனும், திமுகவின் பொருளாளருமான முகஸ்டாலின். ஃபேஸ்புக்கில் 15 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளுடன் வலம் வருகிறார். Mkstalin என்ற பெயரில் ஃபேஸ்புக் பக்கத்தையும், டிவிட்டர் கணக்கையும் வைத்துள்ளார். அவரது ஒவ்வொரு அரசியல் பிரச்சார பயணங்களை குறித்த விபரங்களை, தனது முகநூல் பக்கத்தில் போட இவர் தவறுவதில்லை. இவரது நமக்கு நாமே பயணதிட்டங்கள் குறித்த ஒவ்வொரு விபரங்களும் இதே பக்கத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் பத்திரிக்கைகளிலும், சமூக வலைதளங்களிலும் திமுகவினரால் பரப்பப்பட்ட மீம்கள் பலராலும் பரவலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவின் சமூகவலைதள பிரச்சாரம்

திமுக தலைவர் கருணாநிதியை போல் அதிமுக பொது செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா சமூக வலைதளத்தில் செயல்படாமல் இருந்தாலும், தனது கட்சிக்கென தனியாக ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் கணக்குகளை பராமரிக்கிறார்.

ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் aiadmkofficial என்ற முகநூல் கணக்குகளை துவங்கி தங்கள் அரசின் சாதனைகளை பிரச்சாரம் செய்கின்றனர். 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்துள்ளனர். அதுபோன்றே 13800 பேர் டிவிட்டரில் பின்தொடருகிறார்கள்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

Vijayakant-DMDK என்ற பெயரில் தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தை நிர்வகித்து வருகிறார் விஜயகாந்த். 72021 இந்த பக்கத்தை லைக் செய்துள்ளனர். தேமுதிக இயக்க நிகழ்வுகள், தவறாமல் இந்த பக்கத்தில் பதிவிடப்பட்டு வருகிறது. அவ்வப்போது தனது கட்சியில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், பிரச்சாரங்களை இவரது பக்கத்தில் காணமுடிகிறது.

மதிமுகவின் வைகோ

மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் வைகோ TheVaiko என்ற ஐடியில் தனது ஃபேஸ்புக் பக்கத்தை நிர்வகித்து வருகிறார். இவரது பக்கம் அரசியல் சார்ந்த பதிவுகளை அதிகம் தாங்கி வருகிறது. மக்கள் நல கூட்டணியின் பிரச்சார கூட்டணியின் படங்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டு விடுகின்றன. இவரது  பக்கத்தை 1,30,369 பேர் லைக் செய்துள்ளனர்.

பாமகவின் அன்புமணி ராமதாஸ்

AnbumaniRamadoss என்ற இவரது ஃபேஸ்புக் பக்கத்தை 1,31,440 பேர் லைக் செய்துள்ளனர். draramadoss என்ற டிவிட்டர் கணக்கையும் வைத்துள்ளார். அதில் 9279 பேர் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். 537 ட்வீட்களையும் செய்துள்ளார். இளைஞர்களை அதிகம் கவர நினைக்கும் அன்புமணி தனது கூட்டங்களிலும் சரி மற்ற தளங்களிலும் சரி தொழில்நுட்பத்தை நன்கு பயன்படுத்தி வருகிறார். தனது புதுமொழி பிரச்சாரங்களை அதிகம் தனது பக்கங்களில் பகிர்கிறார் அன்புமணி.

காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரான இவிகேஎஸ் இளங்கோவன் EVKSELANGOVAN.OFFICIAL என்ற ஃபேஸ்புக் பக்கத்தை நிர்வகிக்கிறார். 8439 பேர் லைக் செய்துள்ள இந்த பக்கத்தில், தனது அரசியல் அறிக்கையை வெளியிட்டு வருகிறார். இது போன்றே EVKSElangovan என்ற டிவிட்டர் கணக்கையும் பயன்படுத்தி வருகிறார்.

அதேப்போல் பாரதீய ஜனதாவின் மாநில தலைவரான தமிழிசை சவுந்திரராஜனும் drtamilisaibjp என்ற டிவிட்டர் கணக்கை பயன்படுத்தி வருகிறார். அதில் தனது கட்சியின் தகவல்களையும், தான் வெளியிடும் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகிறார். அவரது டிவிட்டரில் 1824 டிவீட்கள் உள்ளன. 16200 பேர் டிவிட்டரில் அவரை பின் தொடருகின்றனர். இது போன்றே ஃபேஸ்புக்கில் TamilisaiBJP என்ற கணக்கில் இருந்து வருகிறார். 85025 பேர் அவரது பக்கத்தை லைக் செய்துள்ளனர். இவர் பெரும்பாலும் பா.ஜ.க பற்றி வந்த செய்தி விடியோக்களை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளதை காண முடிகிறது.

மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன்

மக்கள் நல கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்ஸிட் கம்யுனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரான ஜி.ராமகிருஷ்ணன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவுகளை நேரடியாக போடுபவர். சமீபத்தில் மக்கள் நல கூட்டணி தலைவர்கள் ஒன்றாக எடுத்து கொண்ட செல்பி படத்தை இவர் தனது பக்கத்தில் பகிர்ந்து கொண்டு, தனது கூட்டணியின் கொள்கைகளையும் குறிப்பிட்டது பெருமளவு பேசப்பட்டது. GRama krishnan என்ற அவரது ஃபேஸ்புக் பக்கத்தை 15600 பேர் லைக் செய்துள்ளனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன்

tholthiruma என்ற டிவிட்டர் கணக்கை வைத்திருக்கும் திருமாவளவனை 943 பேர் பின் தொடருகிறார்கள். தனது கட்சி பற்றிய பத்திரிக்கை குறிப்புகள், அன்றாட அரசியல் நிகழ்வுகளை இவர் இதில் வெளியிட்டு வருகிறார். இது போன்றே Thirumavalavan என்ற அவரது ஃபேஸ்புக் பக்கத்தை 3527 பேர் லைக் செய்துள்ளனர்.

இவரும் மக்கள் நல கூட்டணியில் இருப்பதால் அக்கூட்டணி பற்றிய செய்திகளை பகிர்ந்து வருகிறார்.

மக்கள் நல கூட்டணியினர் தங்களது கூட்டணிக்காகவே தனியாக mnk2016 என்ற ஃபேஸ்புக் பக்கத்தையும், mnk2016 என்ற டிவிட்டர் பக்கத்தையும் வைத்து தங்கள் அரசியல் கொள்கைகளை பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விறுவிறுப்பாக இயங்கும் அரசியல் தலைவர்களையும் சமூக தளங்கள் ஈர்த்துள்ளது என்பதை, இந்த தேர்தல் நமக்கு தெளிவாக காட்டுகிறது. அதே சமயம் டெல்லி அரசியல்வாதிகளைப் போல் டிவிட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் பதிலடிகள் கொடுத்து பிரச்சனைகளை விவாதிக்கும் அளவிற்கு தமிழக அரசியல் தலைவர்களையும் விரைவில் எதிர்பார்க்கலாம்...

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்