மதிப்பெண்களைத் தாண்டி தனித்திறன்களே திறமை!

0

ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் இருந்து உயர் கல்வி முடிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. உயர்கல்வி முடித்து கல்லூரி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டு தான் உள்ளது. ஆனால் கல்லூரி வாழ்க்கையை வெற்றிகரமாக முடித்து நல்ல வேலையுடன் அல்லது தொழில் செய்யும் முனைப்புடன் வெளியே வரும் மாணவர்களின் எண்னிக்கை வருடா வருடம் குறைந்து கொண்டு தான் உள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மாணவர்களின் தவறான புரிதலும் எண்ணமும் தான் காரணம் என்பது உண்மை.

ஆம், ஒவ்வொரு மாணவனும் பல்வேற கனவுகளுடனும் ஆசைகளுடனும் கல்லூரி வாழ்க்கையை நோக்கி செல்கின்றான். ஆனால் பெரும்பாலான மாணவர்கள் உயர் கல்வியில் பெற்ற வெற்றியை கல்லூரியில் பெற முடியவில்லை என்பது தான் உண்மை. ஏன் என்றால், அவர்கள் உயர்கல்வியில் வெற்றி என்று நினைக்கும் எதுவும் கல்லூரி வாழ்க்கையில் வெற்றியாக இருப்பதில்லை.

இதில் மதிப்பெண்களுக்கு முக்கிய பங்கு உண்டு. உயர் கல்வியில் மாணவர்களை மதிப்பெண்கள் எடுக்கும் எந்திரகமாக மாற்றியதன் விளைவு தான், மாணவர்கள் இன்று பலர் வாழ்க்கையுடன் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். வாழ்க்கையில் மதிப்பெண் மட்டுமே முக்கியம் இல்லை என்று மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் போதிக்க வேண்டும் அவ்வாறு செய்தால் மட்டுமே, மாணவர்களின் கல்லூரி வாழ்கை சிறப்பாக அமையும்.

ஏன் என்றால், கல்லூரி வாழ்க்கையில் மதிப்பெண் என்பது ஒரு சிறுதுளி. மதிப்பெண், பாடத்திட்டம், தேர்வு என்பதைத் தாண்டி ஒரு மாணவன் கல்லூரி வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம். ஆனால் அவர்கள் உயர் கல்வியில் செய்த அதே தவறை தான் கல்லூரி வாழ்க்கையிலும் செய்கின்றார்கள். தேர்வு மதிப்பெண் என்பதை தாண்டி பெரும் அளவில் எதிலும் ஈடுபாடு காட்டுவதில்லை என்பது தான் உண்மை.

பொதுவாக எல்லா கல்லூரிகளும், மாணவர்களின் நலனுக்காக பல்வேறு வாய்ப்புகளை உருவாக்குகின்றனர். பொருளாதார ரீதியில் சிறப்பாக இருக்கும் கல்லூரிகள், தங்கள் மாணவர்களுக்கு மட்டுமின்றி மற்ற கல்லூரி மாணவர்களுக்கும் தங்களது கதவுகளை திறந்து வாய்ப்புகள் தருகின்றனர். குறிப்பாக Symposium/Culturals போன்ற நிகழ்ச்சிகளுக்கு மற்ற கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்புகள் தருகின்றனர். ஒவ்வொரு மாணவனும் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

Symposium/culturals போன்ற நிகழ்ச்சிகளில் நடத்தப்படும் போட்டிகள் ஒரு மாணவனை பல்வேறு தனித்திறன்களை மேன்படுத்த உதவுகின்றது. இன்று நன்கு படித்து நல்ல மதிப்பெண்களுடன் இருக்கும் மாணவர்கள் சிரமப்படும் விஷயம் தான் இந்த திறன். இதை ஆங்கிலத்தில் skill என்று கூறுவார்கள். ஒரு மாணவனின் வாழ்க்கைக்கு முதல் தேவை திறன். அந்த திறன் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதற்கு பல்வேறு உதாரணங்கள் இருக்கின்றது.

ஒரு மாணவனுக்கு திறன்கள் யாவும் புதிதல்ல. எல்லா மாணவனுக்கும் எதாவது ஒரு திறன் இருக்கும். குறிப்பாக சிந்திக்கும் திறன், பேச்சுத்திறன், எழுத்துத்திறன் போன்ற தனித்திறன்களில் எதாவது ஒன்று அல்லது எல்லாம் இருக்கும். இந்த திறன்களை வளர்க்கவும் மேன்படுத்தவும் இந்த போட்டிகள் உதவுகின்றது. இந்த திறன்களை வளர்க்கத் தேவையான எதுவும் பாடத்திட்டத்தில் இல்லை.

பாடத்திட்டத்தில் இல்லாத ஒன்றை செய்தால் என்ன பலன் என்று பலருக்கும் எண்ணம் தோன்றும். பாடத்திட்டத்தை தாண்டி பலவேறு முயற்சிகள் செய்துள்ளார் என்ற பிம்பத்தை வேலைவாய்ப்பு கலந்தாய்வுகளில் உருவாக்க முடியும். உள்ளே நுழைய மட்டும் தான் மதிப்பெண்கள் தேவை, அதுவும் 60% இருந்தால் போதும். அதன் பின்னர் உதவப்போவது திறன்கள் மட்டும் தான்.

பெரும்பாலான கலந்தாய்வுகளில் மாணவனின் திறன்கள் மட்டும் தான் பரிசோதிக்கப் படுகின்றது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறை சார்த்த கலந்தாய்வுகளில் ஒரு மாணவனின் திறன் மட்டும் தான் பரிசோதிக்கப் படுகின்றது. சிந்திக்கும் திறன், கேட்டுக்கும் திறன், பேச்சுத்திறன், ஒரு பிரச்சனையை அணுகும் திறன் ஆகியவற்றை வைத்து தான் ஒரு மாணவனை தேர்வு செய்கின்றார்கள்.

இந்த திறன்களை Soft skill என்றும் Business skill என்றும் கூறுவர். இந்த திறன்களை ஒரு மாணவன் மேம்படுத்தினால், எவ்வளவு பெரிய கலந்தாய்வாக இருந்தாலும் வேலை பெற்றுவிடலாம். 

கல்லூரி முடித்து பட்டம் பெற்று வெளியே வரும் மாணவர்களில், குறைந்த அளவான மாணவர்கள் தான் வேலைக்குத் தகுதியுடையர்களாக இருக்கின்றனர் என்று NAASCOM அமைப்பின் ஆய்வு கூறுகின்றது. இதற்கு முக்கியக் காரணம், மாணவர்களிடம் திறன் குறைபாடு தான். இதை மாணவர்கள் தான் தீர்க்க வேண்டும். அதற்கு, தன் கல்லூரி தரும் வாய்ப்புகள் அல்லது மற்ற கல்லூரிகள் தரும் வாய்ப்புகளை பயன்படுத்தி திறன்களை மேம்படுத்தினால், வரும் காலங்களில் திறன் குறைபாடு என்ற நிலையை மாற்ற முடியும். இந்த நிலையை அடைய எல்லோரும் சேர்ந்து பாடுபட வேண்டும்.

கட்டுரையாளர்: பிரவீன் குமார் ராஜேந்திரன் தனியார் துறையில் பணிபுரியும் மென் பொறியாளர். மேடைப்பேச்சு மற்றும் எழுதுவதில் ஆர்வம் கொண்ட இவர் பல்வேறு கல்லூரிகளில் உரையாற்றியுள்ளார்.