நிலவுக்கு டிரிப் அடிக்கப் போகும் முதல் நபர் யார் தெரியுமா...?

0

நாடு நாடாய் சுற்றி பாஸ்போர்ட்டை நிரப்பிக் கொண்டிருக்கும் சுற்றுலா விரும்பிகளே, உங்களுடைய விசிட் அடிக்க வேண்டிய இடங்கள் பட்டியலில் நிலவினையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 

யெஸ் மக்களே, நிலாவுக்கு சும்மா ஜாலியாய் ஒரு டிரிப் அடிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். சந்திரனுக்கு சாமனியனியர்களையும் சுற்றுலா அழைத்து செல்லும் திட்டத்தை கடந்தாண்டு கையில் எடுத்தது இந்நிறுவனம். இதற்காக பிரம்மாண்டமாய் ‘பிக் பால்கன்’ என்ற ராக்கெட்டையும் தயாரித்துவருகிறது. 

ராக்கெட்டில் சென்று நிலவுக்கு டூர் அடிக்க போகும் நபர் யார் என்பதை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மாஸ்க் அறிவிப்பதாக தெரிவித்திருந்தார். யார் அவர்? யார் அவர்? என்ற க்யூரியோசிட்டி எகிற அந்த அவர், ஜப்பான் தொழிலதிபர் யுசாகு மேசாவா என்று எலன் மாஸ்கே அறிவித்துள்ளார். 

பட உதவி : latimes 
பட உதவி : latimes 
முதன் முதலில் நிலாவுக்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணி என்ற பட்டத்துடன் 2023ம் ஆண்டு நிலாவுக்கு டூர் செல்லவிருக்கும் அவரே மொத்த சீட்டுக்கான தொகையும் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளார். 

யுசாகு வழங்கியுள்ள பெரும் தொகை திட்டத்துக்கு உதவியாக இருக்கும் என்றுள்ளார் எலன் மஸ்க். தவிர, இத்திட்டத்துக்கு “டியர் மூன்” என்று பெயரிடப்பட்டுள்ள அவர் அப்பெயரில் இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். அதில் லைவ் அப்டேட்டுகளை தெரிவிப்பதாக கூறியுள்ளார். 

ஜப்பானிய நாட்டுக்காரரான யுசாகு மேசாவா, பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போதே மியூசிக் பேண்ட்டில் டிரம்மராக இருந்துள்ளார். பின், காதல் வயப்பட்டு லவ்லேடியுடன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். ஐந்து வருட அமெரிக்க வாழ்க்கையிலும், மியூசிக் மீது கொண்ட காதலால் அரிய மற்றும் அண்மையில் வெளிவந்த மியூசிக் ஆல்ப சிடிக்களை சேகரிப்பதை பழக்கமாக கொண்டிருந்துள்ளார். ஆனால், அதுவே பின்னாளில் தொழில் தொடங்குவதற்கான அச்சாணியாக மாறியது. 

ஆம், அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு திரும்பிய பிறகு, அச்சிடிகளை இமெயில் மூலம் ஆர்டர் பெற்று விற்றுள்ளார். வியாபாரம் பிச்சுக்கிட்டு போனதில் அதையே பிசினசாக்கியுள்ளார். 

1998ம் ஆண்டிலே ‘ஸ்டார் டூடே’ என்ற இணைய வழி வர்த்தக நிறுவனத்தை தொடக்கினார். அடுத்தக்கட்டமாய் ஆன்லைனிலே ஆடைகளை விற்கும் ‘ஸோஸோ’ என்று நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. 

ஆன்லைன் வர்த்தகத்தின் சக்கைப்போடு போட்டு கொண்டிருக்கும் அந்நிறுவனம் தான் ஜப்பானில் ஆன்லைன் பிசினசில் நம்பர் ஒன். 2017ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட ஜப்பான் செல்வந்தர்கள் பட்டியலில், 14வது இடத்தை பெற்றுள்ளார். 

தவிர யுசாகு கலையின் மீது அநியாய காதல் உடையவர். இளம் மற்றும் சமகால கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக 2012ம் ஆண்டு ‘கண்டம்பரரி ஆர்ட் பவுண்டேஷன்’-ஐத் தொடங்கியுள்ளார். மேலும், உலகெங்கிலும் சிறந்த கலைப்படைப்புகளை தேடித்தேடி சேகரித்தும் வருகிறார். அப்படி, 2016ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஏலத்தில் புரூஸ் நாமன், அலெக்சாண்டர் கால்டர், ஜெஃப் கூன்ஸ் என எக்கசக்க கலைஞர்களின் சிறந்த படைப்புகளை வாங்கி குவித்துள்ளார். 

இரண்டு நாட்கள் நடந்த அந்த ஏலத்தில் 98மில்லியன் டாலருக்கு கலைப்படைப்புகளை வாங்கியுள்ளார். மறு ஆண்டு நடந்த ஏலத்தில், ஜீன் மைக்கேல் பாஸ்குவியாவின் ஓவியத்தை ரூ780 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார். அவருடைய அசாதாரண கலைப்படைப்பு கலெக்ஷன்களை கொண்டு அருங்காட்சியகம் திறக்கும் திட்டத்திலும் இருக்கிறார். கலையின் மீது கொண்ட தீராக்காதலால் தான், நிலவு பயணத்தில் அவருடன் கலைஞர்கள் குழுவினை அழைத்து செல்லவிருக்கிறார். இதுப்பற்றி ‘டியர் மூன்’ இணையதளத்தில் யுசாகு குறிப்பிட்டுள்ளதாவது, 

“பாப்லோ பிகாசோ சந்திரனை நெருக்கத்தில் பார்த்திருந்தால், என்ன வகையான ஓவியங்களை அவர் வரைந்திருப்பார்? ஜான் லெனன் பூமியின் வளைவுகளை கண்டிருந்தால், எந்த மாதிரியா பாடல்களை எழுதியிருப்பார்? ஒருவேளை அவர்கள் விண்வெளிக்கு சென்றிருந்தால், எவ்வகையான படைப்பபுகள் உலகிற்கு கிடைத்திருக்கும்? மக்கள் பெரும் படைப்பாற்றல் திறன் மற்றும் கற்பனைத் திறன் கொண்டவர்கள். பூமியில் உள்ள உயர்மட்ட கலைஞர்களுடன் நான் சந்திரனுக்கு செல்லப்போகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு அளித்த எலன் மஸ்க் மற்றும் ஸ்பேஸ் எக்சுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனா, ஒண்ணு இனி சிறு குழந்தைகளை ஏமாத்தி சாப்பிட வைக்க ‘நிலாவில் உட்கார்ந்து ஆயா ஓட்டை வடை சுடுது’ என்றெல்லாம் பொய் சொல்ல முடியாது, மெய்யாலுமே டூரிஸ்ட்டுகள் சுத்திக் கொண்டு இருக்கலாம். 

தகவல் உதவி : www.thefamouspeople.com and economictimes  கட்டுரையாளர்: ஜெயஸ்ரீ

Related Stories

Stories by YS TEAM TAMIL