பள்ளிப் பேருந்தில் பயணிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் மொபைல் செயலி!

பூஜா கெம்கா, ப்ரீத்தி அகர்வால் ஆகிய இரு இணை நிறுவனர்களால் உருவாக்கப்பட்ட ’மைஸ்கூல்பஸ்’ ஆப் பள்ளிப் பேருந்தை கண்காணித்து நிகழ் நேர தகவல்களை பெற்றோருக்கும் பள்ளிக்கும் வழங்குகிறது...

1

குழந்தைகள் பள்ளிக்கு பேருந்தில் சென்று வரும் பயணம் எவ்வளவு பதற்றம் நிறைந்தது என்று எந்த ஒரு பெற்றோரைக் கேட்டாலும் விவரிப்பார்கள். “பேருந்து பத்திரமாக பள்ளியைச் சென்றடைந்ததா? என் குழந்தையை பள்ளியிலிருந்து பேருந்தில் ஏற்றிக்கொண்டார்களா? பேருந்து வந்தடைய ஏன் இவ்வளவு தாமதமாகிறது? – பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் இது போன்ற கேள்விகள் அதிக கவலையடையச் செய்யும்.

மைஸ்கூல்பஸ் (Myskoolbus) இணை நிறுவனர்களான பூஜா கெம்கா, ப்ரீத்தி அகர்வால் ஆகியோரும் இதே பிரச்சனையை சந்தித்துள்ளனர்.

பூஜா தினமும் பேருந்து நிலையத்திற்குச் சென்று குழந்தையை பேருந்தில் ஏற்றிவிட்டு மதியம் திரும்ப வீட்டிற்குக் கூட்டி செல்வது வழக்கம். ஒரு முறை அவரது தோழி ப்ரீத்தியுடன் ஒரு கண்காட்சிக்கு சென்றிருந்தார். மதியம் குழந்தை பேருந்து நிறுத்தத்திற்கு வரும் நேரம் ஆகிவிட்டது. ஆனால் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டதால் பேருந்தைத் தவறவிட்டார். அதைத் தொடர்ந்து சில மணித்துளிகள் நடந்த அனைத்தும் மிகுந்த வேதனையளிப்பதாக இருந்தது.

அந்தப் பேருந்து நிறுவனத்தின் மேலாளரின் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. பேருந்து அடுத்தடுத்த பகுதிக்கு நகர்ந்துகொண்டே இருந்தது. அது செல்லும் பாதை தெரியாது என்பதால் நாங்கள் அந்தப் பேருந்து கடக்கும் இடம் குறிந்து தெரிந்துகொள்வதற்குள் அது தொலைவாக சென்றுவிட்டது. 

பேருந்து இருக்குமிடம் குறித்து தகவல் ஏதேனும் கிடைத்திருந்தாலோ அல்லது பேருந்து செல்லும் பாதை தெரிந்திருந்தாலோ மிகவும் உதவியாக இருந்திருக்கும். அத்துடன் நேரமும் மிச்சமாகியிருக்கும். 

கண்காட்சி நடந்த இடமான ’தி க்ராண்ட் பகவதி’ பகுதியைக் கடந்துதான் பேருந்து சென்றது என்கிற தகவல் எங்களுக்குப் பின்னர் தெரியவந்தது. இந்தத் தகவல் எங்களுக்கு முன்னரே கிடைத்திருந்திருந்தால் இந்த அளவிற்கு பதற்றப்படாமல் காத்திருந்திருப்போம். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பள்ளியிலிருந்து குழந்தையை கூட்டிச்சென்றேன், என்று நினைவுகூர்ந்தார் பூஜா.

திட்டம் உருவானது

பதற்றமான அந்தத் தருணங்களே ’மைஸ்கூல்பஸ்’ உருவாக்குவதற்கான அடித்தளமாக அமைந்தது. ’மைஸ்கூல்பஸ்’ பள்ளிப் பேருந்தை கண்காணித்து நிகழ் நேரத் தகவல்களை வழங்கும் மொபைல் செயலியாகும்.

”அந்தச் சம்பவம் குறித்து நினைத்து அதிக கவலையுற்றோம். அதன் பிறகு பெற்றோர்களுக்கு பள்ளிப் பேருந்துக்கான ஜிபிஎஸ் ட்ராக்கிங் செயலியை உருவாக்கும் திட்டம் குறித்து சிந்தித்தோம். இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அப்படிப்பட்ட ஒரு செயலிக்கு அவர்கள் கட்டணம் செலுத்த விரும்புவார்களா என்பது குறித்தும் பெற்றோர்கள் மத்தியில் ஆய்வு நடத்தினோம். இந்த ஆய்வில் கிடைத்த வரவேற்பின் அடிப்படையில் திட்டத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்று செயலியை வடிவமைத்தோம்,” என்றார் ப்ரீத்தி.

இவ்விருவரும் நீண்ட நாட்களாக இரண்டாம் நிலை நகரமான அஹமதாபாத் பகுதியிலேயே வசித்து வருவதால் ஆரம்பகட்ட செயல்பாடுகளுக்கு இதுவே ஏற்றது என்றும் செயல்பாட்டுச் செலவுகள் குறைவு என்பதையும் உணர்ந்து இப்பகுதியையே தேர்ந்தெடுத்தனர்.

29 வயதான பூஜா, 24 வயதான ப்ரீத்தீ இருவரின் குடும்பத்தினரும் தொழில்முனைவில் ஈடுபட்டிருந்தனர். பூஜா பட்டயக்கணக்காளர். ப்ரீத்தி அங்கீகரிக்கப்பட்ட நிதி திட்டமிடுபவர்.

மைஸ்கூல்பஸ் திட்டம் வடிவம் பெற்றதும் இவ்விருவரும் தங்களது கணவர்களை அணுகி அவர்களிடம் திட்டத்தை விவரித்து இணைத்துக்கொண்டனர். சுயாஷ் மற்றும் அன்கித் இணை நிறுவனர்களாக இணைந்தனர். இவர்களது தொழில்நுட்ப நிபுணத்துவம் செயலியின் வடிவமைப்பிற்கு உதவியது.

தொடர் கண்காணிப்பு

”பெற்றோர்கள், பேருந்து ஓட்டுநர், பள்ளி நிர்வாகம் ஆகிய மூவருக்குமான செயலியை வழங்குகிறது மைச்ஸ்கூல்பஸ். இந்த மூன்று பயனர்களின் செயல்பாடுகளையும் ஒன்றிணைக்கிறது,” என ப்ரீத்தி விவரித்தார்.

கீழ்கண்ட சேவைகளை இந்தச் செயலி வழங்குகிறது:

• பெற்றோர் தங்களது குழந்தை பயணிக்கும் பேருந்தின் முழுமையான பாதையை கண்காணித்து தகவல்களை பெறமுடியும்

• ஓட்டுநர்கள் பாதையை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியமில்லை. பாதை அவர்களது செயலியில் இருக்கும். அதை பின்பற்றினாலே போதும்.

• அவசரச் சூழலில் பெற்றோர்கள் அந்த குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து இருக்கும் இடத்தை நேவிகேஷன் வசதியை பயன்படுத்திக் கண்டறியலாம்

முதல் வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட இரண்டாம் வடிவம் சோதனை கட்டத்தில் இருக்கிறது. விரைவில் இது அறிமுகப்படுத்தப்படும்.

25-க்கும் அதிகமான பள்ளிகள், 8,000 பெற்றோர்கள் என இந்தச் செயலியில் 10,000-க்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர்.

வருவாயைப் பொருத்தவரை பெற்றோரிடமிருந்து ஆண்டுக்கொரு முறை மிகவும் குறைந்த கட்டணம் வசூலிக்கப்படும். பள்ளி சார்பாக போக்குவரத்து மேலாண்மைக்கான கட்டணம் வசூலிக்கப்படும். நாடெங்கும் பல கிளைகளைக் கொண்டிருக்கும் பெரிய பள்ளிகள் இவர்களது பார்ட்னராக உள்ளனர். அத்துடன்,

சமீபத்தில் அனைத்து பள்ளிகளும் தங்களது வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தி பயன்படுத்தவேண்டும் என்பதை சிபிஎஸ்ஈ கட்டாயமாக்கியது. இது எங்களுக்கு கூடுதல் பலனளித்தது. ஒரு வருடத்தில் மேலும் சிறப்பாக செயல்பட்டு லாபம் ஈட்டத் துவங்குவோம்,” என்றார் பூஜா.

வளர்ச்சிப்பாதை

தற்போது சுயநிதியில் இயங்கும் இந்நிறுவனம் விரைவில் வென்சர் முதலீட்டாளர்களை அணுக திட்டமிட்டுள்ளது.

“அதிக பயனர்களை சென்றடையவும் இந்தியாவின் பிற நகரங்களுக்கும் தொலைதூரப் பகுதிகளுக்கும் விரிவடையவும் நிதித் தேவை உள்ளது. எங்களது ஸ்டார்ட் அப்பிற்கு ஆலோசனை வழங்குவதிலும், துறை சார்ந்த அனுபவங்களை வழங்குவதிலும் தகுந்த நபர்களை சென்றடைய உதவுவதிலும் விசி-க்கள் பெரும் பங்கு வகிப்பார்கள் என நம்புகிறோம்,” என்றார்.

ஆரம்பத்தில் இந்த செயல்முறையையும் அதன் பலன்களையும் விவரிப்பது இணை நிறுவனர்களுக்கு சவாலாக இருந்தது. ஆனால் தொடர்ந்து பெற்றோரையும் பள்ளியையும் அணுகி விவரித்தது பலனளித்தது. தற்போது இந்தச் செயலி குஜராத்தில் பிரபலமாகியுள்ளது. பல பள்ளிகள் இந்தத் தளத்தில் இணைந்துள்ளனர்.

”பெற்றோர்கள் நீண்ட நேரம் பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் பேருந்து எப்போது வந்தடையும் என்கிற தகவல் அவர்களுக்கு அனுப்பப்படும். பள்ளி ஊழியர்களுக்கும் ஓட்டுநர்களை அழைத்து அவர்களது இருப்பிடம் குறித்து தெரிந்துகொள்ளவேண்டிய பதற்றமான சூழல் ஏற்படாது. தற்போது இவர்கள் அனைத்து பேருந்துகளின் சரியான பகுதியையும் மொபைல் திரையில் காணலாம்,” என்றார் ப்ரீத்தி.

டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற பிற நகரங்களில் வணிக விற்பனை உரிமை வழங்கும் மாதிரியில் செயல்பட்டு விரிவடைய சாத்தியக்கூறுகள் நிறைந்த பார்ட்னர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது மைஸ்கூல்பஸ்.

பெற்றோர்கள் கவலைப்படுவதற்கு பல காரணங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும் என்றாலும் குழந்தையின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் இந்தச் செயலி அறிமுகமானதன் காரணமாக பெற்றோருக்கு கவலையளிக்கும் காரணிகளின் பட்டியலில் இருந்து ஒன்று அகற்றப்பட்டுவிடும்.

ஆங்கில கட்டுரையாளர் : ரேகா பாலகிருஷ்ணன்

Related Stories

Stories by YS TEAM TAMIL