மருத்துவ தொழில்நுட்ப தொடக்க நிறுவனம் ‘Yostra Labs’ இல் வில்க்ரோ முதலீடு!

0

வில்க்ரோ தாங்கள் முதலீடு செய்து அடைக்காக்கவிருக்கும் புதிய சமூக தொழில்முனைவு நிறுவனம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ’யோஸ்ட்ரோ லாப்ஸ்’ Yostra Labs, என்ற பெங்களுருவைச் சேர்ந்த தொழில்முனைவு நிறுவனத்தின் வளர்ச்சியில் உதவிட வில்க்ரோ முடிவெடுத்துள்ளது. Yostra Labs, சர்க்கரை நோய் கண்டறியும் கருவிகள் மற்றும் சிகிச்சைக்கான தீர்வுகளை தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இது மாரிக்கோ இன்னோவேஷன் பவுண்டேஷன் இடமிருந்தும் நிதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சமூக தொழில்முனைவு நிறுவனமான யோஸ்ட்ரா லாப்ஸ், தொழில் வளர்ச்சியிலும் நல்ல எதிர்காலத்தை கொண்டுள்ளது. 

யோஸ்ட்ரா லாப்ஸ் குழுவினர்
யோஸ்ட்ரா லாப்ஸ் குழுவினர்

சர்க்கரை நோய் இந்தியாவில் பெருகிவரும் நிலையில், சுமார் 30 % சர்க்கரை நோயாளிகள் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் ஈட்டும் கீழ் மட்டத்தில் உள்ள மக்களாக உள்ளனர். டயாபெடிக் பெரிபெரல் நியூரோபதி கோளாறால் சுமார் 37 மில்லியன் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக 2015 கணக்கெடுப்பில் தெரிய வந்தது. இது 2040 இல் 69 மில்லியனாக உயரும் என்றும் தெரிவித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டுள்ள 50 சதவீதம் மக்கள் கால் புண் ஏற்பட்டு மேலும் பாதிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏழை மக்கள் வாழும் சூழல்களால் போதிய மேலாண்மை இல்லாமல் இந்த பிரச்சனையால் மேலும் பாதிக்கப்படுவார்கள். 

Yostra Labs, ‘ஸ்பர்ஷ்’ என்ற கருவியை தயாரிக்கிறது. இது டயாபெடிக் பெரிபெரல் நியூரோபதி அதாவது சர்க்கரை நோயால் காலின் நரம்புகளுக்கு ஏற்படும் நிரந்தர பாதிப்பை கண்டறியக்கூடிய கருவி இந்த ஸ்பர்ஷ். சர்க்கரை நோய் கால் புண்களை குணப்படுத்தும் ‘கடம்’ என்ற நோய் சிகிச்சை கருவியையும் இந்நிறுவனம் தயாரிக்கிறது. 

தயாரிப்பு கருவிகள்
தயாரிப்பு கருவிகள்
“இந்த இரண்டு கருவிகளும், ஒரு சர்க்கரை நோயாளியை பரிசோதிக்க, அடிப்படை மற்றும் இரண்டாம்கட்ட சுகாதார மையங்களில் எளிதாக பயன்படுத்தும் விதம் உருவாக்கப்பட்டுள்ளது. வசதி குறைவாக உள்ள சிகிச்சை மையங்களில் இந்த வகை கருவிகளின் மூலம் சிகிச்சை முறைகள் எளிதாக நோயாளிகளுக்கு அளிக்கப்படவும்,   சமூக-பொருளாதார நிலையில் அடிமட்டத்தில் இருக்கும் மக்களுக்கு பேருதவியாகவும் இருக்கும்,”

என்று யோஸ்ட்ரா நிறுவன நிறுவனர் விநாயக் நந்தலிகே தெரிவித்தார். ஸ்பர்ஷ் இந்த நோயை ஆரம்பக்கட்டத்தில் கண்டறிய உதவிடும் என்றும், ‘கடம்’ தீர்வு கருவியின் மூலம் ஓர் ஆண்டிற்கு இந்தியாவில் சுமார் 2 லட்சம் பேர்களின் கால்கள் நீக்கப்படுவதிலிருந்து தடுக்க உதவும் என்றும் கூறினார்.

வில்க்ரோ இந்நிறுவனத்தில் முதலீடு செய்து இவர்களுடன் தொடங்கியுள்ள கூட்டு முயற்சியின் மூலம், இந்நிறுவனம் அவர்களது தயாரிப்பின் இறுதி கட்டத்தை அடைந்து தேவையான மருத்துவ அனுமதிகளையும், சான்றிதழ்களையும் பெற்று தங்களின் சேவையை தொடங்கும். வில்க்ரோவின் நிதியை கொண்டு யோஸ்ட்ரா லாப்ஸ் தங்கள் குழுவை விரிவு செய்து மேலும் பல புதிய கருவிகளை வடிவமைப்பதில் கவனம் செலுத்தும் என்றும் தெரிகிறது.