வீட்டில் தொடங்கி, இன்று 10ஆயிரம் சதுர அடி ஆலையாக உருவெடுத்து சர்வதேச ப்ராண்டாகி உள்ள ‘மாம்பலம் ஐயர்ஸ்’

சென்னையில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட ’மாம்பலம் ஐயர்ஸ்’, இன்று வருடத்துக்கு 20 சதவீத வளர்ச்சிக் கண்டு பல நாடுகளில் தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் நிறுவனமாகும்!

4

அவசர யுகத்தில் எல்லாமே உடனடியாக கிடைக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம். இதை நன்றாக புரிந்து கொண்ட பல நிறுவனங்கள் அதிலும் உணவு தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் காலத்திற்கேற்ப தங்களின் பொருட்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த ’மாம்பலம் ஐயர்’  நிறுவனமோ, எளிதாக கலந்து உண்ணக்கூடிய பேஸ்ட் வகைகளோடு தான் 2007 ஆம் ஆண்டு தனது பயணத்தை தொடங்கியது. இன்று உலக நாடுகள் பலவற்றில் தங்களது ப்ராண்டை நிலை நாட்டி தங்களுக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.

மாம்பலம் ஐயர்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியை, அதன் நிறுவனர் கண்ணன் மகாதேவன் நம்மிடம் பிரேத்யேகமாக பகிர்ந்து கொண்டார்.

எளிமையான தொடக்கம்

"அரிசி கலவை பேஸ்ட் என்பது இப்பொழுது நம் அனைவரின் வீட்டில் அங்கமாகவே ஆகிவிட்டது, ஆனால் இதன் உபயோகத்தை பரவலாக்கியது நாங்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்," 

என்று தாங்கள் கடந்து வந்த பாதையை நினைவு கூர்கிறார் கண்ணன். எட்டு ஆண்டுகளுக்கு முன்பே அரிசி பேஸ்ட் எவ்வாறு கிச்சனின் எளிமையான தோழி என்பதை விளம்பரம் மூலம் பிரபலப்படுத்தினோம் என்றார்.

புளியோதரை மற்றும் வத்தக்கொழம்பு கலவையை வீட்டிலிருந்தே தயாரித்து அக்கம்பக்கம் சந்தைப்படுத்தினோம். எங்களின் தயாரிப்புக்கு கிடைத்த வரவேற்பு ஊக்கமளித்தது. இதனோடு ஊறுகாய் வகைகளையும் அறிமுகப்படுத்தினோம் என்று தங்களது பயணத்தை விவரித்த கண்ணன், உணவு வர்த்தக பின்னணியிலிருந்தும், மற்றொரு நிறுவனரான அனந்தகிருஷ்னன் ஹோட்டல் அனுபவமும் கொண்டதால், உணவு வர்த்தக சந்தையை பற்றி நன்கு அறிந்திருந்தனர். 

"சந்தைப்படுத்துதலில் இருந்த சவால்களை நாங்கள் அறிந்திருந்ததால், பொறுமையான அணுகுமுறையையே நாங்கள் கடைப்பிடித்தோம், விதவிதமான பேஸ்ட் மற்றும் ஊறுகாய் வகைகளை படிப்படியாக அறிமுகப்படுத்தினோம்,” என்றார்.
மாம்பலம் ஐயர்ஸ் நிறுவனர்கள்: அனந்த கிருஷ்ணன் (மேல்), கண்ணன் (கீழ்)
மாம்பலம் ஐயர்ஸ் நிறுவனர்கள்: அனந்த கிருஷ்ணன் (மேல்), கண்ணன் (கீழ்)

சவால்கள்

இன்று இந்தியா முழுவதும் மற்றும் முக்கிய அண்டை நாடுகளிலும் இவர்களின் தயாரிப்புகள் பரவிக் கிடந்தாலும், தொடக்க நாட்களில் விநியோகஸ்தர்கள் நியமனம் செய்வதில் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளனர். "புதிய ப்ராண்டை விநியோகிக்க யாரும் முன்வரவில்லை,  நாங்களே நேரடியாக ரீடைல் கடைகளுக்கு தயாரிப்புகளை கொடுக்கத் தொடங்கினோம். சாம்ப்ளிங்க் மற்றும் கடைகளுக்குள் பிரோமஷன் மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை அறிமுகப்படுதினோம்," என்று விவரித்த கண்ணன், அடுத்து கூறியது அவர்களின் வளர்சியை பறைசாற்றுவதாகவே இருந்தது.

"யார் எங்களை தொடக்கத்தில் நிராகரித்தார்களோ அதில் சிலர் எங்கள் விநியோகஸ்தர்களாகவும், சிலர் விநியோகஸ்தர்களாக வரிசையில் காத்துக்கொண்டும் உள்ளனர்," என்றார்.

வளர்ச்சி

பத்து பேருடன் ஆயிரம் சதுரடியில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் எண்பது பேர் கொண்ட நிறுவனமாகவும் வளர்ச்சியடைந்துள்ளது. விரைவில் சொந்தமாக ஸ்ரீசிட்டியில்  பத்தாயிரம் சதுரடியில் தயாரிப்பு ஆலை ஒன்றை நிறுவவுள்ளது. இன்னும் ஓராண்டில் முழு வீச்சில் இங்கிருந்து உற்பத்தியை தொடங்கவுள்ளது. "தொடக்கத்தில் விற்பனை பிரிவில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்க இயலாத நிலைமையால், அவர்களை கமிஷன் அடிப்படையில் வேலைக்கு அமர்த்தினோம்."  சொந்த முதலீடு மற்றும் வங்கிகளின் ஆதரவின் மூலமே வர்த்தகம் செய்ததாகவும் பகிர்ந்தார்.

தமிழகத்தில் 260 விநியோகஸ்தர்கள் மூலமாகவும், மற்றும் பெங்களூரு, புதுடில்லி, மும்பை, கொல்கத்தா, ஹரித்வார் போன்ற மாநகரங்களிலும் இவர்களின் தயாரிப்புகள் கிடைக்கின்றன. ஆறு வருடம் முன்பு மலேசியாவில் தொடங்கி இன்று அரேபிய நாடுகள், சிங்கப்பூர் மற்றும் ஆஸ்ட்ரேலியா ஆகிய நாடுகளிலும் இவர்களின் தயாரிப்புகள் வரவேற்பை பெற்றுள்ளன. விரைவில் அமெரிக்காவிலும் வர்த்தகம் செய்யவுள்ளதாக கூறுகிறார் கண்ணன்.

சந்தை விரிவாக்கம் ஒரு புறமிருக்க, புதிய தயாரிப்புகளையும் இவர்கள் கடந்த மாதம் அறிமுகப்படுத்தியுள்ளனர். புதிய அறிமுகமான ஹெல்த் மிக்ஸ் தயாரிப்பு நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாக கூறும் இவர், இந்த ப்ராண்ட் மட்டும் 50% மேலான வருவாய் ஈட்டித்தரும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார். 

"மிகவும் நிதானமான அணுகுமுறையை கையாண்டதால், சீரான வளர்ச்சியை கண்டுள்ளோம்." அடுத்தடுத்து பல புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறுகிறார் கண்ணன்.

"பெங்களூரில் மாம்பலம் ஐயர்ஸ் இட்லி தோசை மாவு அடுத்த மாதம் சந்தையில் அறிமுகப்படுத்துகிறோம், இதை தவிர சப்பாத்தி, பரோட்டா மற்றும் வெட் மிஃஸ்ஸாக அடை, ரவா தோசை ஆகியவற்றை இங்கு அறிமுகப்படுத்தவுள்ளோம்,"

என்று அடுத்த கட்ட வளர்ச்சி பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார். வருடா வருடம் பதினைந்து முதல் இருபது சதவிகித வளர்ச்சி கண்டுள்ள இந்நிறுவனம் புதிய அறிமுகம் மூலம் மேலும் இவ்வளர்ச்சி பன்மடங்காக உயரும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்.

இந்த வருட தொடக்கத்தில் டாட்டா குழுமம் ’ரெடி டூ ஈட்’ சந்தையில் அடியெடுத்து வைக்கக்கூடும் என்பதே இந்த துறையின் வளர்ச்சியை காட்டுகிறது. இந்தியாவில் சுகாதாரமான உணவு, உடல்நிலை குறித்து பெருகி வரும் விழிப்புணர்வால் இந்த துறையின் வளர்ச்சியில் சற்றே மந்தநிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது. எதுவாயினும் தரமான தயாரிப்புகள், அத்துடன் பாரம்பரியம் மாறாத சுவையைக் கொண்டு வரும் தயாரிப்புகளுக்கு என்றென்றும் வரவேற்பு காத்திருக்கும் என்பதில் ஐயப்பாடில்லை.