27 வயது ஆகியும் மணமாகாத பெண்ணா நீங்கள்?- சீனாவில் உங்களுக்கு 'எஞ்சிய பெண்' என்று பெயர்!

0

27 வயதைக் கடந்தும் உங்களுக்கு திருமணமாகவில்லையா? அப்படி என்றால் சீனாவில் உங்களை ’எஞ்சிய பெண்’ என்றே அழைப்பார்கள். பாரம்பரியத்தால் மூழ்கிய பழமைவாத ஆசிய சமூகம் பழமையான கருத்துக்களை முன்வைத்து மேற்கத்திய உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்துகிறது. ஆனால் சீனாவில் பின்பற்றப்படும் ‘ஷெங் நூ’ இந்தியர்களையே  அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

’ஷெங் நூ’ எனும் வார்த்தையே அப்படியே மொழிபெயர்த்தால் ’மிஞ்சிய பெண்கள்’ என்று பொருள்படும். அனைத்து சீன பெண்கள் கூட்டமைப்பு இந்த தரக்குறைவான வார்த்தையை பிரபலப்படுத்தியது. இதில் முரண்பாடு என்னவென்றால் இந்த கூட்டமைப்பு பெண்களின் உரிமைக்கான நிறுவனம். 27 வயதைக் கடந்தும் திருமணமாகாத பெண்களை ‘எஞ்சிய பெண்கள்’ என குறிப்பிடுவது, ஒரு கடையில் வாடிக்கையாளர்களால் நிராகரிக்கப்பட்ட தரக்குறைவான எஞ்சிய பொருளுடன் ஒப்பிடுவதைப் போல கேவலப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது ‘ஷெங் நூ’ எனப்படும் வார்த்தை.

’ஷெங் நூ’ என்ற வார்த்தையின் பொருள் ’27 வயதைக் கடந்தும் திருமணமாகாத பெண்கள்’ என்று சீன மக்கள் குடியரசின் கல்வி அமைச்சகம் 2007-ல் ஒரு அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டு தேசிய அகராதியில் சேர்த்தது. மேலும் இந்த அமைச்சகம் சற்று விளக்கமாக ‘வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் அதிக எதிர்பார்ப்புகள் கொண்டதால் கணவனை தேர்ந்தெடுக்க முடியாத நிலை” என்று அதற்கடுத்த அறிக்கையில் விரிவாக வெளியிட்டுள்ளது.

2011-ம் ஆண்டு மார்ச் மாதம் சர்வதேச பெண்கள் தினத்திற்கு பிறகு அனைத்து சீன மகளிர் கூட்டமைப்பு ஒரு சர்ச்சைக்குரிய கட்டுரையை ”எஞ்சிய பெண்கள் எங்கள் பரிதாபத்திற்கு தகுதியுடையவர்கள் அல்ல” என்கிற தலைப்பில் பதிவு செய்தது. அதில் ஒரு பகுதியில், “அழகான பெண்கள் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்துகொள்ள அதிகம் படிக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் சுமாராகவோ அழகற்று இருக்கும் பெண்களில் நிலை மோசமாக இருக்கும். இவர்கள் போட்டியில் தங்கள் நிலையை மேம்படுத்த அதிகம் படிக்கலாம் என்று நினைப்பார்கள். இதில்  சோகம் என்னவென்றால் பெண்களுக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க அவர்களது மதிப்பு குறைந்துகொண்டே இருக்கும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. ஏனெனில் எம்ஏ அல்லது பிஎச்டி படித்து முடிக்கும் சமயம் அவர்களின் வயது ஏற்கெனவே அதிகரித்திருக்கும். 

இந்தியாவின் நிலை 

இந்தியாவில் இருபது அல்லது முப்பது வயதைத் தாண்டிய திருமணமாகாத பெண்களின் நிலை இவ்வளவு மோசமாக இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. எனினும் இருபது வயது தொடக்கத்திலேயே திருமணம் செய்துகொள்வதே பெண்களுக்கு சிறந்தது என்றும் திருமணத்தைப் பொறுத்தவரை ஆண்களுக்கு சற்று அதிகமான சலுகைகள் தரலாம் என்றும் அவர்களது நலம்விரும்பிகள் சிந்திப்பார்கள். பெண்களுக்கு அழுத்தம் இரு மடங்களாக உள்ளது. அதாவது முதலில் வயது அதிகமாவதற்குள் நல்ல கணவனை கண்டறிய வேண்டும். இரண்டாவது அதிகம் தாமதிக்காமல் குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும். இப்படிப்பட்ட சமூக அழுத்தங்களுக்கு தலைவணங்காமல் பல காரணங்களுக்காக இன்று பல பெண்கள் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாகவே வாழ்கிறார்கள்.

இதற்கு பணியும் முக்கியக் காரணமே தவிர அது மட்டுமே காரணமல்ல. ஒரு சிலர் திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுகின்றனர். பெண்களின் தேவை என்ன மார்கெட்டிங் துறையில் பணிபுரியும் 29 வயதான நேஹா தான் எந்தவித அழுத்தங்களையும் உணரவில்லை என்கிறார். 

”குடும்பத்தின் தரப்பிலுருந்தும் சமூகத்திலிருந்தும் மட்டுமல்லாமல் நமது வயது குறித்து உள்ளார்ந்த ஒரு விழிப்புணர்வும் அழுத்தத்திற்கு காரணம். எனக்கு திருமணம் செய்துகொள்ள வேண்டும். ஆனால் கட்டாயமாக செய்துகொண்டே தீரவேண்டும் என்று நினைக்கவில்லை. இதற்கு முன்பு முப்பது வயதை நெருங்கிக்கொண்டே இருக்கிறோம் என்கிற மன அழுத்தம் இருந்தது. ஆனால் இன்று என் மனதை அமைதிப்படுத்திக்கொண்டு சிறப்பான மனநிலையில் இருக்கிறேன்.” 

குடும்ப நண்பர்கள் மூலமாகவும் மேட்ரிமோனியல் தளங்கள் வாயிலாகவும் பல ஆண்களை சந்தித்தேன். அதில் ஒருவர் படிப்பு, நல்ல குடும்பம் என எல்லா வகையில் நிறைவாகவே இருந்தார். கட்டாயமாக நிச்சயதார்த்தம் செய்து கொள்ளலாம் என்று அவரும் விரும்பினார். ஆனால் ஏனோ எனக்கு சரியாக படவில்லை என்பதால் மறுத்துவிட்டேன். அவர் தொடர்பை துண்டிப்பதற்கு முன் சற்று கடுமையாகவே நடந்துகொண்டார். என்னுடன் பணிபுரிபவர்கள் என்னை கிண்டல் செய்தபோதும் வருத்தமாகவே இருந்தது. எனினும் என்னுடைய பணியிலும் மக்களுடன் ஒன்றிணைவதிலும் கவனத்தை திசை திருப்பினேன். இப்படிப்பட்ட அழுத்தத்திற்காக சமரசம் செய்துகொண்டு விரும்பாத மகிழ்ச்சியற்ற திருமணத்திற்கு நான் சம்மதிக்க விரும்பவில்லை” என்கிறார் நேஹா. 

30 வயது பத்திரிக்கையாளரான இந்து, திருமணம் செய்துகொள்வதில் ஆர்வமற்றவராகவே இருந்தார். அவர் “நான் சரியான நபரை சந்தித்து அந்த தருணத்தில் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று விரும்பினால் செய்துகொள்வேன். ஆனால் தற்போது அதற்கு முன்னுரிமை அளிக்கவில்லை. நான் முப்பது வயதை கடந்துவிட்டேன். எனினும் நான் மன அழுத்தத்தை சம்மதித்து ஏற்றுக்கொண்டால் மட்டுமே எனக்கு அழுத்தம் ஏற்படும். என்னுடைய பணி எனக்கு முக்கியம். அதை ப்ரொஃபஷனலாக செய்து வருகிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னுடைய பெற்றோர் வருத்தப்பட்டனர். ஆனால் நான் அவர்களுடன் வெளிப்படையாக பேசினேன். என்னுடைய தரப்பு நியாயத்தை அவர்கள் புரிந்துகொண்டனர். திருமணம் செய்துகொள்ள என்னை வற்புறுத்தவில்லை, என்கிறார்.

பெப்சிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயி பெண்கள் சந்திக்கும் இந்த பிரச்சனை குறித்து நேர்மையாகவும் நகைச்சுவையுடன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

”வயது தொடர்பான கடிகாரமும் கேரியர் தொடர்பான கடிகாரமும் ஒன்றோடொன்று மோதிக்கொள்வதை நான் கவனித்திருக்கிறேன். முற்றிலும் முரண்பாடான நிலை கொண்டது. உங்களுக்கு குழந்தை தேவை என்கிற சமயத்தில்தான் கேரியர் குறித்து திட்டமிடவேண்டியுள்ளது. பணி ரீதியாக அடுத்தகட்ட வளர்ச்சியின் போது உங்கள் குழந்தைகள் பதின்பருவத்தை அடைவதால் உங்கள் அருகாமை அவர்களுக்குத் தேவைப்படும். 
”அந்த நேரத்தில் உங்கள் கணவரும் பதின்பருவத்தினர்போல மாறிவிடுவதால் அவருக்கும் உங்களுடைய இருப்பு தேவைப்படும். உங்கள் வயது மேலும் அதிகரிக்கும்போது உங்கள் பெற்றோருக்கு வயதாகி இருப்பதால் அவர்களுக்கும் உங்கள் அருகாமை தேவைப்படும். மொத்தத்தில் நாம் காலி...” என்கிறார்.

மேகாவிற்கு தற்போது 35 வயது. 23 வயதில் திருமணமாகி தற்போது அவரது குழந்தைக்கு பத்து வயது. அவருடன் பேசுகையில் “என்னுடைய பணி வாழ்க்கையில் நுழைந்த சமயம் எனக்கு வீட்டில் திருமணம் செய்து வைத்தனர். முதலில் என்னுடைய கணவரை சந்தித்தபோது சிறிது நேரம் பேசினோம். எங்கள் விருப்பங்கள் ஒத்துப்போனது. நட்புடன் இருக்கமுடியும் என்கிற நம்பிக்கை எழுந்ததால் சம்மதித்தேன். இன்னும் சிறிது காலம் பொருத்திருந்தால் உணர்வு ரீதியான முதிர்ச்சி என்னிடம் இருந்திருக்கலாம். பணியிலும் வளர்ச்சியடைந்திருக்கலாம். இருந்தும் நான் சம்மதித்தேன். என்னுடைய மகளுக்காக பணியில் நீண்ட இடைவெளி எடுத்தேன். இப்போது அவள் வளர்ந்துவிட்டாள். நானும் பணிக்கு திரும்பிவிட்டேன். நாம் சில சமயம் அனைத்தும் கச்சிதமாக இருக்கவேண்டும் என்று ஏங்குவோம். இருந்தாலும் திருமணமாகட்டும், தாய்மையடைவதாகட்டும், பணி வாழ்க்கையாகட்டும் அதிகம் யோசிக்காமல் எது சரி என்று தோன்றுகிறதோ அதையே பின்பற்றுவது தவறில்லை.” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர்: சரிகா நாயர்