தேசிய ஓவியப் போட்டியில் வென்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த மாணவி!

தேசிய அளவிலான ஓவியப் போட்டியில் வென்ற சென்னை மாணவி தனலட்சுமி 'தேசிய மின் சேமிப்பு' விருது வென்று சாதனை படைத்துள்ளார்.

0
தேசிய அளவில் 30 லட்சம் மாணவர்கள் போட்டிக் களத்தில் இடம்பெற்ற ஓவியப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி பி.எல். தனலட்சுமி இரண்டாம் பரிசு வென்று தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
தேசிய அளவில் பரிசு பெற்ற தனலட்சுமியின் ஓவியம்
தேசிய அளவில் பரிசு பெற்ற தனலட்சுமியின் ஓவியம்

மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் ஒவ்வோர் ஆண்டும் தேசிய மின் சேமிப்பு தினத்தையொட்டி நாடு தழுவிய அளவில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி நடைபெறும். இதில், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு மீண்டும் போட்டி வைக்கப்பட்டு தேசிய அளவில் முதல் மூன்று இடங்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். 

அந்த வகையில், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் சென்னை - கே.கே. நகரைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி தனலட்சுமி இரண்டாம் பரிசை வென்று சாதனை படைத்துள்ளார்.

தமிழக மாநில அளவில் 2.80 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற ஓவியப் போட்டியில் முதல் பரிசை வென்ற தனலட்சுமி தேசிய அளவிலான போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், தேசிய அளவில் 30 லட்சம் மாணவர்கள் போட்டிக் களத்தில் இடம்பெற்ற ஓவியப் போட்டியில் இரண்டாம் பரிசை வென்றார். 'மின் சேமிப்பு' என்பதே ஓவியப் போட்டிக்கான கருப்பொருள். டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிலையில் நடந்த விழாவில் தனலட்சுமிக்கு 'தேசிய மின் சேமிப்பு விருது' வழங்கி கெளரவிக்கப்பட்டது.

பெற்றோருடன் தனலட்சுமி
பெற்றோருடன் தனலட்சுமி

தேசிய அளவிலான போட்டியில் வென்றது குறித்து சென்னை - கே.கே.நகரிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணசாமி மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி தனலட்சுமி கூறும்போது,

 "என் டிராயிங் மாஸ்டர் தாமஸ் அளித்த பயிற்சியினால்தான் என்னால் வெற்றி பெற முடிந்தது. நான்காம் வகுப்பில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம். அம்மாதான் என் ஆர்வத்தைப் பார்த்து தாமஸ் சாரிடம் ஓவிய வகுப்புக்கு அனுப்பினார். 

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு சுற்றுச்சூழல் குறித்து நிறைய ஓவியங்கள் வரைய ஆசை ஏற்பட்டுள்ளது. அதுபோல கடவுள்களின் விதவிதமான ஓவியங்களை வரைய வேண்டும் என்பது என் விருப்பம். டெல்லியில் நடந்த மிகப் பெரிய விழாவில் பரிசு பெற்றது மறக்க முடியாத அனுபவம். மேலும், டெல்லி முழுவதும் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது ஜாலியாக இருந்தது," என்றார்.

டெல்லியில் நடைபெற்ற விழாவில் பரிசு பெற்ற சென்னை மாணவி தனலட்சுமி
டெல்லியில் நடைபெற்ற விழாவில் பரிசு பெற்ற சென்னை மாணவி தனலட்சுமி

"இந்தப் போட்டிகள் பற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மிகக் குறைந்த கட்டணத்தில் தாமஸ் சார் ஓவியம் சொல்லித் தருகிறார் என்று கேள்விப்பட்டு அவரிடம் என் மகளை சேர்த்தேன். சில மாதங்களிலேயே தேசிய அளவில் பரிசு கிடைக்க வைத்திருக்கிறார். அவர்தான் இந்தப் பெருமைக்கு முக்கியக் காரணம். 

நாங்கள் குடும்பத்துடன் டெல்லிக்கு விமானத்தில் சென்றோம். நாங்கள் விமானத்தில் பயணிப்பது இதுவே முதல்முறை. தேசிய அளவில் லட்சக்கணக்கான குழந்தைகள் பங்குபெற்ற போட்டியில் தமிழகத்துக்கு பெருமை சேர்த்திருப்பதைப் பார்க்கும்போது என் மகளை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது," 

என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் தனலட்சுமியின் தாய் மீனாட்சி.

இடது: ஓவிய ஆசிரியர் தாமஸ் உடன் தனலட்சுமி | வலது: மாநில அளவில் முதல் பரிசு
இடது: ஓவிய ஆசிரியர் தாமஸ் உடன் தனலட்சுமி | வலது: மாநில அளவில் முதல் பரிசு

ஃபைன் ஆர்ட்ஸ் படிப்பை முடித்த ஓவிய ஆசிரியர் தாமஸ் 12 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சி அளிப்பதையே முழுநேரப் பணியாகச் செய்து வருகிறார். தேசிய அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு போட்டிகளில் தங்கள் மாணவர்களைப் பங்கேற்றுப் பரிசுகளைக் குவிக்கவைப்பதில் தீவிரம் காட்டுபவர். சென்னை - ராமாபுரத்தில் ஒரு வாடகை வீட்டில் 'சரனி கலைக்கூடம்' என்ற பெயரில் மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சி வகுப்புகள் எடுத்து வருகிறார். இவரது மனைவி தெரசா மேரியும் ஓவியப் பயிற்சியாளராக உறுதுணைபுரிகிறார்.

தனலட்சுமியின் வெற்றி குறித்து ஓவிய ஆசிரியர் தாமஸ் கூறும்போது, "இந்தப் போட்டியில் மாநில அளவிலான பிரிவில் எங்கள் மாணவர்கள் 12 பேர் கலந்துகொண்டார்கள். அவர்களில் 9 பேர் சிறப்பிடம் பெற்றனர். தனலட்சுமி முதல் பரிசு பெற்று தேசிய அளவில் கலந்துகொள்ளும் வாய்ப்பையும் பெற்று அங்கும் பரிசு வென்றார். 

கடந்த 5 ஆண்டுகளாகவே தேசிய மின் சேமிப்பு ஓவியப் போட்டியில் எங்கள் மாணவர்களைக் கலந்துகொள்ள வைக்கிறேன். இதுவரை மாநில அளவில்தான் பரிசுகளைப் பெற்றுவந்தோம். முதல்முறையாக தேசிய அளவில் வென்றிருப்பதை எங்கள் தொடர் முயற்சிக்குக் கிடைத்த பலனாகவே கருதுகிறேன். தனலட்சுமியை ஓவியக் கலையில் அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்வேன்" என்றார் உத்வேகத்துடன்.

| ஓவிய ஆசிரியர் தாமஸ் - தொடர்புக்கு 9790791004 | 

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Related Stories

Stories by கீட்சவன்