அரசுப் பள்ளி முன்முயற்சி: குழந்தைகளை செதுக்கும் 'நிலா வெளி'த் திட்டம்

வைத்தியநாதபுரம் கிராமத்தில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியின் முயற்சியில் மாலை வேளைகளில் பள்ளிக் குழந்தைகளிடம் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

2
வேலைக்குச் செல்லும் பெற்றோரால் மாலை வேளையில் கவனிக்க முடியாத பிள்ளைகளை 'நிலா வெளி' எனும் திட்டத்தில் ஒருங்கிணைத்து வருகிறது, பெரம்பலூர் மாவட்டம் - வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள வைத்தியநாதபுரம் அரசுத் தொடக்கப் பள்ளி.

கிராமத்துப் பெற்றோர்கள் விவசாயப் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்கு வருவதற்கு நேரமாகிவிடுகிறது. இதனால், பள்ளி முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும் தங்கள் பிள்ளைகளை அவர்களால் கவனிக்க முடியவதில்லை. இதன் காரணமாக, படிப்பும் வீட்டுப் பாடமும் மாணவர்கள் செய்வதில்லை. மாறாக, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்கப்படுகிறார்கள்.

இந்தச் சூழலில் இருந்து மாணவர்களை மீட்கவும், வீட்டுப் பாடத்தில் கவனம் செலுத்தவும், குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் உறுதுணைபுரியும் பண்பை வளர்க்கவும் உருவாக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது இந்த 'நிலா வெளி'த் திட்டம்.

இதன்படி, பள்ளி விட்டு வீடு திரும்பி வழக்கமான விளையாட்டுகளை முடித்துவிட்டு, ஒரே தெருவில் உள்ள மாணவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூட வேண்டும். அன்றாடப் பாடங்களை படிப்பது, எழுதுவது என ஒருவருக்கொருவர் உறுதுணையாக கூடிப் படிக்க வேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வரும் பள்ளித் தலைமை ஆசிரியர் ரேவதி, "இந்தத் திட்டத்தை செயல்படுத்தும்போது தொடக்கத்தில் நடைமுறை சிக்கல்கள் இருந்தன. தற்போது பெற்றோர்கள் வெகுவாக வரவேற்கிறார்கள். குறிப்பாக, தங்கள் வீட்டில் மாணவர்கள் குழுவாகக் கூடிப் படிப்பதற்கு இடம் தருவதுடன், அவர்களுக்குத் தேவையான வசதிகளையும் செய்து தருகின்றனர்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் 17 மாணவர்களும் குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். நான்கு குழுக்களாகப் பிரிக்கப்படும் இவர்கள் படிக்கும் சூழலுக்கு வசதியான வீடுகளில் கூடிப் படிப்பர். நான்கு மாணவர்களும் ஒருவருக்கொருவர் உறுதுணையுடன் வீட்டுப் பாடங்களை முடிப்பர்.

ஒவ்வொரு குழுவிலும் மற்றவர்களுக்குச் சொல்லித் தரும் அளவுக்கு நன்றாகப் படிக்கக் கூடிய மாணவர் ஒருவர் இருப்பார். அவர்கள் மற்றவர்களின் பாடச் சந்தேகங்களை நீக்குவர். இதன்மூலம் தலைமைப் பண்புகளும், குழு மனப்பான்மையும் வெகுவாக வளர்வதை கவனிக்க முடிகிறது.

ஐந்தாம் வகுப்பு மாணவர்களைப் பின்பற்றி இப்போது மற்ற வகுப்பு மாணவர்களும் குழுவாக ஒருங்கிணைந்து படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஒன்றாக உட்கார வைத்தால் பிள்ளைகளுக்குள் விளையாட்டும் சண்டையும் வலுக்கும் என்ற பயந்த பெற்றோர்களே இப்போது இந்தத் திட்டத்தின் தன்மையைப் புரிந்துகொண்டனர். நிலா வெளித் திட்டம் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுவதையும் கண்கூடாகப் பார்க்க முடிகிறது" என்றார்.

இந்தப் பள்ளியில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் 'ஸ்மார்ட் க்ளாஸ்' அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு படிக்க ஏதுவாக நாற்காலிகள், மேசைகள், கணினி, படக்கருவிகள் ஆகியவை தரப்பட்டுள்ளன.

பள்ளியைத் தாண்டி மாணவர்களை யோசித்ததன் விளைவாக தலைமை ஆசிரியர் ரேவதிக்கு உதித்த இந்தத் திட்டத்துக்கு 'நிலா வெளி' எனப் பெயரிட்டவர் இயற்கை ஆர்வலரும், சமூக செயற்பாட்டாளருமான ரமேசு கருப்பையா.

"மாலை நேரங்களில் மாணவர்களை ஒன்றுகூட்டி படிக்க வைப்பது சாதாரணமானதாகத் தோன்றலாம். ஆனால், இதன் தாக்கம் மிகப் பெரியது. ஒருமுறை நெசவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக 'நிலாப் பள்ளி' எனும் திட்டத்தை இறையன்பு ஐ.ஏ.எஸ். கொண்டு வந்து செயல்படுத்தினார். அதையொட்டிய முயற்சியாக இருந்ததால் 'நிலா வெளி'த் திட்டம் என இதை அழைக்கிறோம்.

தனியார் பள்ளிகளில் கவனம் செலுத்தப்படுவதற்கு இணையாக கிராமத்து மாணவர்களுக்கு ஏற்ப, மாணவர்களுக்கு இங்கே வழிகாட்டப்படுகின்றது. இதனால் மாணவர்கள் கூட்டுறவுடன், ஒற்றுமையாகவும் இணக்கமாகவும் வளர்ந்து வருகின்றனர்.

பெற்றோர் பணிகளையும், ஆசிரியர் ஒருங்கிணைப்பு செய்து கிராமப்புற மாணவர்களுக்கு வழிகாட்டி வருவது நல்ல பயன்களை அளித்து வருகிறது. ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோர் ஒத்துழைப்புடன் நிறைவேற்றப்படும் இம்முறையை நாடு முழுவதும் பின்பற்றினால் நல்ல பலன் நிச்சயம்" என்கிறார் ரமேசு கருப்பையா.

இணைய இதழியல், சினிமா எழுத்து, சிறுவர் படைப்பு, சமூக ஊடகம் சார்ந்து இயங்க முயற்சிக்கும் ஒர்த்தன்!

Related Stories

Stories by கீட்சவன்