மூத்த விஞ்ஞானி டானியல் செல்லப்பா ’சிறந்த தகவல் தொடர்பு பிரச்சார’ தேசிய விருதை பெற்றார்! 

0

பாபா அணு ஆராய்ச்சி மையம் (Bhabha Atomic Research Centre’s (BARC) மூத்த விஞ்ஞானி டானியல் செல்லப்பா அவர்களுக்கு PRSI, 2016-ம் ஆண்டிற்கான ”சிறந்த தகவல் தொடர்பு பிரச்சாரம்” மேற்கொண்டதற்கான தேசிய விருதை (National Award for the Best Communications Campaign for the Year 2016) அளித்து கவுரவித்துள்ளது. இந்த விருது கொல்கத்தாவில் நடைப்பெற்ற 38-வது தேசிய கருத்தரங்கில் அவருக்கு அளிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக அணுமின் சக்தி குறித்து மக்களிடையே நிலவிய குழப்பங்களுக்கு எளிய முறையில் விளக்கங்கள் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.  

டானியல் செல்லப்பா, கதிர்வீச்சு மற்றும் கதிரியக்க ஐசோடோப்புகளின் பன்முகத்தன்மை மனித இனத்திற்கு ஏற்படுத்தும் நலன்கள் குறித்து பல்வேறு பிரிவு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரையும் வியக்கவைத்தவர். சமூக விஞ்ஞானியான இவர், சிக்கலான அறிவியல் கருத்துக்களை எளிமையான நடையில், சாதரண மக்களுக்கும் புரியும் வகையில் எடுத்துரைப்பதில் வல்லவர். கூடங்குளம் அனுமின் திட்டத்தில் புதிய அறிவியல் முறைகளை உருவாக்கி அதை பங்குதாரர்களிடம் புதுமையான முறைகளில் கொண்டு சென்ற பெருமை இவரைச் சேரும். மேலும் ‘நிசர்க்ருனா’ என்ற கழிவில் இருந்து எரிப்பொருள் தயார் செய்யும் திட்டத்திலும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார் டானியல். 

டானியல் செல்லப்பா, கூடங்குளம் திட்டத்தில் உள்ளூர் மக்கள், ஊடகங்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு இருந்த சந்தேகங்களை தெளிவுப்படுத்தியதில் தன் வல்லமையை வெளிப்படுதினார். அத்திட்டத்தின் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளராக இருந்த டானியல் செல்லப்பா, நாட்டின் முதல் 1000 மெகாவாட் மின்சார மையம் பிரச்சனியின்றி தொடங்கி இயங்க முக்கிய நபராக இருந்தவர். 

ஸ்வச் பாரத் விழிப்புணர்வு, கழிவு மேலாண்மை, நீர் நிலைகள் சீரமைப்பு மற்றும் நதிகள் சுத்தம் செய்யும் பணிகள் என்று பல முக்கிய திட்டங்களில் அங்கம் வகித்தவர் டானியல் செல்லப்பா. தமிழ்நாட்டில் விவசாயிகள் நிலங்களில் கழிவுநீர் கலப்பை சரிசெய்தல், மேக் இன் இந்தியா திட்டம், ஸ்கில் இந்தியா மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு திட்டம் போன்றவைகளில் இவரது பங்கும் பணிகளும் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்திய நாட்டின் முக்கிய ப்ராஜக்டான ரூ.1500 கோடி மதிப்பிலான அறிவியல் நியூட்ரீனோ (INO) திட்டத்தின் பொது விவகாரம் மற்றும் விழிப்புணர்வு பிரிவை டானியல் செல்லப்பா கையாண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

மெட்ராஸ் யூனிவர்சிட்டியில் தங்க பதக்கம் பெற்று பட்டம் பெற்றவர் டானியல் செல்லப்பா. ஐஐடி மெட்ராசில் முதுகலை ப்ராஜக்ட் ஒன்றில் பணிபுரிந்தவர். பின்னர் 1984 ஆம் ஆண்டு, கல்பாக்கம் அனுமின் நிலையத்தில் இணைந்து பணிபுரியத் தொடங்கினார். அவர் பல்வேறு தீவிர ஆராய்ச்சிகளில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.