பூமியில் இருந்து நிலவுக்கு செல்ல எலிவேட்டர் வடிவமைத்துள்ள 18 வயது சென்னை மாணவனுக்கு நாசா பரிசு!

0

நாம் எல்லாருமே விண்ணுக்கு ஒருமுறை பயணிக்கவேண்டும் என்று நம் வாழ்நாளில் ஆசைப் பட்டதுண்டு, ஆனால் அந்த கனவு நமக்கு நிறைவேறாமல் போவது தான் சகஜம். ஆனால் அப்படி கனவு கண்ட ஒரு மாணவன் தனது 18-வது வயதிலேயே அதை சாத்தியப் படுத்துவதற்கான ஒரு வழியை கண்டறிந்து நாசா-விடம் இருந்து பரிசு வென்றுள்ளார். 

சென்னை மாணவன் சாய் கிரண், நாசாவின் ‘Ames Space Settlement Contest, 2017’ போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அவன், பூமியில் இருந்து நிலவுக்கு ஒரு எலிவேட்டர் அதாவது லிஃப்ட் அமைக்கும் திட்டத்தை வடிவமைத்துள்ளார். அதன் மூலம் மனிதர்கள் அதில் சென்று நிலவில் குடியிருக்கமுடியும் என்று விளக்கியுள்ளார். சான் உசே பல்கலைகழகம், நேஷனல் ஸ்பேஸ் சொசைட்டியுடன் இணைந்து நடத்திய போட்டியில், உலகெங்கிலும் உள்ள 12-வது படிக்கும் மாணவர்களை விண்ணப்பிக்க கேட்டு இருந்தனர். 

போட்டியின் மையக்கருத்தாக, ‘நிலவில் மனிதர்கள் வாழ என்னென்ன வழிகள் உள்ளது’ என்பது பற்றிய திட்டவடிவை கேட்டிருந்தனர். சாய், 2013 ஆம் ஆண்டில் இருந்தே இந்த ப்ராஜக்ட் குறித்து ஆய்வு செய்ய ஆரம்பித்துவிட்டார். நிலவு, பூமி மற்றும் ஸ்பேஸ் குறித்த ‘HUMEIU Space Habitats’ என்ற தலைப்பில் மனிதர்களை நிலவுக்கு எலிவேட்டர் மூலம் கொண்டு செல்வது குறித்து அறிக்கை தயார் செய்தார். 

இவரது ப்ராஜக்டின் முதல் பகுதியில், எலிவேட்டரை தயார் செய்வது குறித்தும், மனிதர்கள் மற்றும் கார்கோகளை நிலவுக்கு கொண்டு செல்வது, அங்கே தங்குவது குறித்து உள்ளது. இதற்கு முக்கிய அம்சமாக புவி ஈர்ப்பு சக்தி இல்லாமல் மனிதர்கள் வாழ்வது எப்படி என்பது பற்றி இருக்கும். 

இதைத்தவிர நிலவில், கேளிக்கை, ஆட்சிமுறை, பொழுதுபோக்கு மற்றும் விவசாயம் செய்வது பற்றியும் இவரது ஆய்வறிக்கையில் உள்ளது. எலிவேட்டர் 40 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு வடிவமைக்க திட்டமிட்டுள்ளார். மேலும் இந்த எலிவேட்டர் லூனார் அடிப்படையில் அல்லது பூமியின் அடிப்படையில் வடிவமைக்கபடலாம் என்கிறார் சாய். 

கட்டுரை: Think Change India