ஆண்ட்ராய்டுக்கான ஜிபோர்டு செயலியில் 20 புதிய மொழிகள்... 

0

கூகுளின் ஜிபோர்டு செயலி இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கிறது. 2016 மே மாதம் ஐ.ஓ.எஸ்-ல் மற்றும் 2016 டிசம்பர் மாதம் ஆண்ட்ராய்டில் கூகுள் கீபோர்டுக்கு மாற்றாக அறிமுகமான இந்த கீபோர்டு செயலி, உலகில் அதிகம் நாடப்படும் கீபோர்டு செயலியாக உருவெடுத்துள்ளது. டைப் செய்யும் போதே வார்த்தைகளை யூகித்துக்கொள்ளக்கூடிய அல்கோரிதம் கொண்ட இந்த செயலி, பயன்பாடு அதிகரிப்பதற்கு ஏற்ப இன்னும் சிறப்பாக அமைவதாக பயனாளிகள் கருதுகின்றனர். இந்த செயலியின் சிறப்பம்சங்களில் ஒன்று, பல்வேறு மொழிகளை இது ஆதரிப்பது தான். இந்த பட்டியல் இப்போது இன்னும் நீண்டுள்ளது.

மார்ச் 6-ம் தேதி வெளியிட்ட வலைப்பதிவு ஒன்றில் ஜிபோர்டு பிராடக்ட் தலைவர், அங்கனா கோஷ், 

சீன மொழி மற்றும் கொரிய மொழி உள்ளிட்ட 20 புதிய மொழிகளை உள்ளீடு செய்யும் ஆற்றல் ஆண்ட்ராய்டுக்கான ஜிபோர்டில் இணைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். ஆண்ட்ராடில் அதிக தேவை உள்ள மொழிகளாக இந்த இரண்டு மொழிகளும் அமைந்திருப்பதால் கூகுள் இவற்றை சமீபத்திய அப்டேட்டில் இணைத்துள்ளது.

 (இந்த இரண்டு மொழிகளும் ஐ.ஓ.எஸ் ஜிபோர்டில் 2017 முதல் இணைக்கப்பட்டுள்ளது). ஆண்ட்ராய்டுக்கான ஜிபோர்டில் இணைக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை இதன் மூலம் 300-க்கு மேல் உயர்ந்துள்ளது. உலக மக்கள்தொகையில் 74 சதவீதத்திற்கு மேல் இதன் மூலம் சேவை பரவியுள்ளதாக அங்கனா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

பரவலாக பேசப்படும் மொழிகள் தவிர, குறிப்பிட்ட வட்டாரம் சார்ந்த வழக்குகளும் தற்போது இணைக்கப்பட்டுள்ளது முக்கிய அம்சமாகும். உதாரணத்திற்கு சில வட்டார மொழிகளை பார்க்கலாம்: ராஜஸ்தானில் துந்தாரி பகுதியில் 9.6 மில்லியன் (2007 தகவல் படி) பேரால் பேசப்படும் துந்தாரி, ராஜஸ்தானின் ஹடோடி பகுதியில் 4.7 மில்லியன் பேரால் (2001 தகவல் படி) பேசப்படும் ஹராட்டி, இமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாபில் 1.1 மில்லியன் பேரால் (2001 தகவல் படி) பேசப்படும் காங்கிரி, மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் 6 மில்லியன் பேரால் (2004 தகவல்படி) பேசப்படும் லம்பாடி, (தேவநகரி மற்றும் இந்தி), மத்திய பிரதேசத்தில் 5.6 மில்லியன் பேரால் பேசப்படும் மால்வி , 2.2 மில்லியன் பேரால் (2001 தகவல்படி) பேசப்படும் நிமாடி ஆகிவ மொழி வழக்குகள். பலோச்சி, செண்ட்ரல் பிகோல், பிஸ்லமா, சிட்டகோனியன், கிரி, கோங்கோ, டொங்கா, சதர்ன் டிபிலி, ருஸ்யன் உள்ளிட்ட மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

முதல் அடுக்கு மற்றும் இரண்டாம் அடுக்கு நகர்புற சந்தையை கடந்து கூகுள் கவனம் செலுத்துவது, உலக மெட்ரோ நகரங்களை கடந்து சந்தையை கைப்பற்றும் அதன் குறிக்கோளுக்கு ஏற்ப அமைந்துள்ளது. நிறுவனம் யூடியூப்கோ, ஜிமெயில்கோ, பைல்ஸ்கோ, கூகுள் கோ, கூகுள் மேப்ஸ் கோ, கூகுள் அசிஸ்டண்ட் கோ என தனது பல சேவைகளின் குறைந்த இணைய வசதிக்கான மாதிரிகளை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்ட் கோ இயங்குதளத்தையும் இந்த பிரிவினருக்காக முன்நிறுத்தி வருகிறது. இந்த செயலிகள் பயன்பாட்டை தங்கள் சொந்த மொழியில் மேற்கொள்ள வழி செய்வதன் மூலம் கூகுள் இவர்களை, பலவகையான ஆப்லைன் செயலிகளை வாங்கக்கூடிய விசுவாச வாடிக்கையாளராக மாற்ற விரும்புகிறது.

ஐ.ஓ.எஸ் க்கான மெசேஜ் செயலியில், தேலை வசதியை ஒருங்கிணைப்பதாகவும் கூகுள் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஜீபோர்டுக்கான ஆதரவை மேலும் அதிகமாக்கியுள்ளது. பெரும்பாலும் மூன்றாம் தரப்பு கீபோர்டுக்கான ஆதரவு குறைந்து வரும் சூழலில் இது நிகழ்ந்துள்ளது. இந்த செயலியை தேடல் மற்றும் மொழிபெயர்ப்பு சேவைக்கான நுழைவு வாயிலாக பயன்படுத்திக்கொள்ள கூகுள் திட்டமிட்டுள்ள நிலையில், ஜீபோர்டில் கூகுள் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்பதற்கான அறிகுறியாக இது அமைகிறது.

ஆங்கிலத்தில்: ஸ்பந்தன் சர்மா | தமிழில் சைபர்சிம்மன்