அரசுத் துறைகளின் செயல்பாட்டை ஒருங்கிணைக்கும் ஸ்மார்ட்போன் மெசஞ்சர் செயலிகள்!

0

வாட்ஸ் அப் மற்றும் டெலகிராம் போன்ற செயலிகளின் வருகை, அரசுத் துறைகளில் குறிப்பிடும் வகையில் வேகமான செயல்பாட்டை உறுதி செய்துள்ளது.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் கிராமப்புறங்களில் வசிப்பவர்களில் பலரும் செல்போன்களை கண்டால் வேடிக்கை பார்ப்பதையே வழக்கமாக கொண்டிருந்த காலம். டிப்டாப்பாக உடையணிந்து, கருப்பு நிற மூக்கு கண்ணாடியை அணிந்தோ, அணியாமலோ, நீண்ட கருப்பு நிற செங்கல் போன்ற ஒரு செல்போனை காதில் வைத்து பேசிக் கொண்டிருப்பதை பார்க்க ஒரு கூட்டமே அலைமோதும். இன்னும் சிலர் சம்பந்தப்பட்ட தொலைதொடர்பு நிறுவனத்தின் கவரேஜ் இல்லாமல் இருந்தால் கூட அந்த அலைமோதும் கூட்டத்தின் முன் பந்தா காட்டுவதற்கென்றே, செல்போனை வெளியில் காட்டி கொண்டு நடப்பது வழக்கமாக இருந்தது.

கம்பியில்லா தொலைதொடர்பு தொழில்நுட்பம் போதிய வளர்ச்சி பெறாத அந்த காலகட்டத்தில், கிராம மற்றும் நகர்ப்புற மக்கள் தந்தியையும், தொலைபேசியையும் நம்பித்தான் இருந்தனர். வெளியூர் சென்ற தங்கள் உறவுகள் எப்போது அழைப்பார்கள் என தொலைபேசி இருக்கும் வீட்டின் வாசற்படியில் காத்து கிடந்த காலம் அது. அத்தகைய வசதிகள் அற்ற மக்கள், தபால்காரரின் வருகையை எதிர்பார்த்து இருந்தனர்.

ஆனால் 15 ஆண்டுகளில் தகவல் தொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள அசுர வளர்ச்சி நம்மை மலைக்க வைக்கிறது. ஸ்மார்ட்போன்களின் வருகை, உள்ளங்கையிலேயே வீடு முதல் அலுவலகம் வரையிலான செயல்பாடுகளை கொண்டுவந்துவிட்டது. குறிப்பாக, 'வாட்ஸ்அப்' மாற்றும் 'டெலகிராம்' போன்ற தகவல் தொடர்புக்கான மெசஞ்சர் செயலிகள் இன்னும் மனிதர்களை நெருக்கமாக வைக்க உதவியுள்ளது என்றே கூற வேண்டும். வாட்ஸ்அப் போன்று பல அப்பிளிகேஷன்கள் இன்று பயன்பாட்டில் வந்தாலும், சந்தையில் ஏனோ முதலிடத்தில் இருப்பது வாட்ஸ்அப் தான்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, அரசுத் துறைகள் வேகமாக கணினிமயப்படுத்தப்பட்டு வருகின்றன என்பது நாம் அறிந்ததே. ஆனால் அரசு அலுவலகங்களிடையே, குறிப்பாக தங்களது சொந்தத் துறையினுள் தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப்பை, அரசு ஊழியர்கள் பயன்படுத்துவது, கடந்த சில காலமாக அதிகரித்து வருகிறது.

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, 

"கடந்த காலங்களில் அவசரத் தகவல்களை நாங்கள் தொலைபேசி வழியாகவும், பிற தகவல்களை தபால் மூலம் அல்லது எங்கள் ஊழியரை சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்பி கொண்டு சேர்ப்போம், இப்போது வாட்ஸ்அப் வந்த பின் எல்லாமே எளிமையாகிவிட்டது” என்கிறார்.


மேலும் அவர் கூறுகையில், 

"அரசு உத்தரவுகள் அல்லது மேலதிகாரியின் வழிகாட்டுதல்கள் சம்பந்தப்பட்ட கீழ்நிலை ஊழியர்களுக்கு தபாலில் கொண்டு சேர்ப்பதற்கு முன்னரே, அந்த உத்தரவுகள் கையில் கிடைத்தவுடன் வாட்ஸ் அப் மூலம் எல்லா கீழ்நிலை ஊழியர்களுக்கும் அனுப்புகிறோம். தபால் சென்று சேர தாமதம் ஆனால் கூட வாட்ஸ்அப் தகவலின் அடிப்படையில் அவர்கள் விரைந்து செயல்பட முடிகிறது” என்கிறார்.

இதுபோன்றே கீழ்நிலை ஊழியர்களிடமிருந்து கிடைக்க வேண்டிய அவசரத் தகவல்களை மேலதிகாரிகளும் வாட்ஸ் அப் மூலம் பெற்றுக் கொள்கின்றனர். இன்னும் சில அதிகாரிகள் தங்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கென தனியாக வாட்ஸ் அப் குரூப்புகளை, அவற்றின் மூலம் அலுவலக செயல்பாடுகளையும் நிர்வகிக்கத் தொடங்கியுள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு.

காவல்துறையை பொறுத்தவரை, வாட்ஸ் அப்பின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. குற்றவாளிகளின் படங்கள் உள்ளிட்ட தகவல்களை விரைந்து சக அதிகாரிகளுக்கு அல்லது மேலதிகாரிகளுக்கு ஷேர் செய்வதன் மூலம் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தப்பி செல்லாமல் தடுக்க, காவல்துறையால் விரைந்து செயல்பட முடிகிறது. குறிப்பிட்ட குற்ற செயல்பாடுகளை வீடியோ எடுத்து அதனை மேலதிகாரிக்கு அனுப்பும்போது அவர் அதற்கு தகுந்தார் போல் உத்தரவுகள் பிறப்பிக்க வாட்ஸ் அப் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக கூறுகின்றனர் காவல் துறையினர்.

இது குறித்து காவல்துறையின் சிஐடி பிரிவு அதிகாரி ஒருவர் கூறும்போது,

"எங்கள் கீழிருக்கும் போலீசார், பொது இடங்களில் நடைபெறும் போராட்டங்கள் மற்றும் பல்வேறு குற்றசெயல்கள் குறித்த தகவல்களை உடனக்குடன் அனுப்பி வைக்க வேண்டும். வாட்ஸ் அப் வருவதற்கு முன்னர், அவர்கள் படம் எடுத்து, எழுத்துபூர்வமாகவோ அல்லது போனிலோ தகவல்களை சொல்லுவது வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது வாட்ஸ் அப் மூலம் குறிப்பிட்ட போராட்டம் அல்லது குற்றச் செயல் நடக்கும்போதே அவற்றை வீடியோவாகவும், போட்டோவாகவும் எங்களால் பெற முடிகிறது. இதனால் நாங்கள் போலீசாருக்கு தனியாக போன் நம்பர் வழங்கி அவற்றின் மூலம் வாட்ஸ்அப் தகவல்களை பகிர்ந்து கொள்கிறோம் என்றார்.

வாட்ஸ் அப் செயலியை போன்றே, சமீப காலமாக டெலகிராம் என்னும் செயலியும் கணிசமான அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ் அப்பை விட டெலகிராம் அதிக பாதுகாப்பு உள்ளது என்பதே இதன் முக்கிய காரணம். 

இது பற்றி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 

"தகவல் பரிமாற்றத்தில் பாதுகாப்பு, கூடுதல் கொள்ளளவு உள்ள பைல்களை பகிர்ந்து கொள்ளும் வசதி, இன்னும் பிடிஃஎப் போன்ற பைல்களை பகிர்ந்து கொள்ள டெலகிராம் செயலி மிகவும் உபயோகமுள்ளதாக இருக்கிறது. இதனால் மிகப்பெரிய பைல்களை கூட பயமின்றி ஷேர் செய்ய முடிகிறது. ஆரம்ப காலங்களில் விண்டோஸ் போன்களில் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த இந்தச் செயலி தற்போது அவற்றிலும் பயன்படுத்த முடியும் என்பதால் டெலகிராம் பயன்படுத்துவது இப்போது மெதுவாக அதிகரித்து வருகிறது”. என்றார்.

இத்தகைய செயலிகளின் வருகை, அரசுத் துறைகளில் குறிப்பிடும் வகையில் வேகமான செயல்பாட்டை உறுதி செய்துள்ளது. அதுமட்டுமல்லாது கணிசமான காகித பயன்பாட்டையும் கூட இது குறைத்து விட்டதாக கூறுகிறார்கள் அதிகாரிகள்.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்


இது போன்ற ஸ்மார்ட்போன் தொழில்நுட்பம் தொடர்பு கட்டுரைகள்:

ஸ்மார்ட் போன் பயன்பாடு உங்களுடைய பர்சனாலிட்டியை வெளிப்படுத்துமா?

ஒற்றை செயலியில் 2 லட்சம் இந்திய-பாக் மனங்களை இணைத்த இளைஞர்!