10 மாதங்களில் 4 ஆயிரம் பேரை ஈர்த்த 'ஹவுஸ் ஜாய்'

0

பண்டிகை காலம் தொடங்கிய உடன் அனைவரின் கவனமும் வீட்டை தூய்மைபடுத்துதல் மற்றும் பராமரிப்பு பக்கம் திரும்புவதை தவிர்க்க முடியாது. ஆனால் பலருக்கு இந்த வேலைகளைச் செய்வதில் விருப்பம் இருப்பதில்லை ஏனெனில் விடுமுறை நாட்களை சந்தோஷமாக கழிக்கவே அவர்கள் விரும்புவார்கள், அதே சமயம் வீடு சுத்தம் செய்யும் வேலைக்கு ஆட்களை கண்டுபிடிப்பது சிரமமான காரியம். வாடிக்கையாளர்களின் இந்தக் கவலையை போக்கும் விதமாக "ஹவுஸ் ஜாய்" (HouseJoy) வீட்டை தூய்மைப்படுத்துதல் மற்றும் பராமரிப்பு சேவையை வழங்குகிறது. ஸ்டார்ட் அப் வல்லுனர்களான சுனில் கோயலும், அர்ஜுன் குமாரும் இணைந்து ஹவுஸ் ஜாயை இந்தஆண்டு ஜனவரி மாதம் தொடங்கினர்.

சுனில் 20 ஆண்டுகள் டெஸ்கோவில் ஐடி தலைமைக்குழுவை நிர்வகித்து வந்தவர், அதன் பின்னர் அவர் டியூட்டர் விஸ்டாவில் சேர்ந்தார். அவர் அங்கு செயல்கள் தலைவராக இருந்தார், அதோடு ஸ்டார்ட் அப்கள் எப்படி இயங்குகின்றன என்பதையும் அங்கு தான் கற்றக் கொண்டார். சுனில் முதலில், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் முன் அவர்களை பற்றி தெரிந்து கொள்வதற்கான ஒரு வீடியோ தளத்தை வியூஃபர்ஸ்ட் என்று தொடங்கினார். டியூட்டர் விஸ்டாவில் தான் சுனில் அர்ஜுனை சந்தித்தார். அர்ஜுன் புக்அட்டாவை (Bookadda) நடத்தி வந்தார், அதன் மூலம் 5 மில்லியன் டாலர் நிதியும் திரட்டியிருந்தார் அவர். புகஅட்டாவை சப்னா குழுமம் வாங்கிக் கொண்டது. அர்ஜுனுக்கு பொருள்கள் மேம்பாடு மற்றும் பல்வேறு நிறுவனங்களின் கட்டண முறைகள் போன்ற பல்வேறு துறைகளில் பத்து ஆண்டு அனுபவம் இருந்தது.

அர்ஜுன்குமார் (இணைநிறுவனர் – ஹவுஸ்ஜாய்), சரண் சாட்டர்ஜீ (சிஈஓ - ஹவுஸ்ஜாய்), சுனில் கோயல் (நிறுவனர் - ஹவுஸ்ஜாய்)
அர்ஜுன்குமார் (இணைநிறுவனர் – ஹவுஸ்ஜாய்), சரண் சாட்டர்ஜீ (சிஈஓ - ஹவுஸ்ஜாய்), சுனில் கோயல் (நிறுவனர் - ஹவுஸ்ஜாய்)

இரண்டு நிறுவனர்களுமே வீட்டை தூய்மைபடுத்தி பராமரிக்கும் பணியில் பல்வேறு பிரச்சனைகளை அனுபவித்துள்ளனர், இதன் விளைவாக இந்தத் துறைக்கான தேவையை அவர்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்தனர். பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் கலந்து பேசி அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை முதலில் பட்டியிலிட்டனர். “தங்களைப் பற்றிய விவரங்களை வியாபாரிகளுக்கு அளிக்க வாடிக்கையாளர்கள் விரும்பவில்லை. ஒவ்வொரு வியாபாரியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெவ்வேறு விதமான விலைப்பட்டியலை கொடுத்தனர், உண்மையில் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் வேலையின் தரம் குறித்த கவலை இருந்தது. குறிப்பாக வியாபாரிகளின் பின்னணியும் தெரியாதே என்ற அச்சமும் இருந்தது அவர்களுக்கு. இந்த சேவையை வழங்கும் இருவரை நாங்கள் சந்தித்த போது இந்தப் பணியில் அவர்களும் அதிருப்தியாக இருப்பது தெரிந்தது. பணியாட்களுக்கு வியாபாரிகள் முன்கூட்டியே ஊதியம் கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. வேலைக்கு செல்பவர்கள் விலாசத்தை கண்டுபிடித்து செல்வதற்கு அதிக நேரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. அப்படியே நீண்ட தூரம் பயணித்து ஒரு வீட்டை அடைவதற்குள் அந்தப் பணி ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டிருக்கும் என்று சிலர் கவலையோடு தெரிவித்தனர்”.

இந்த நிறுவனம் ஜனவரி 2015ல் தொடங்கப்பட்ட போது நாளொன்றுக்கு 40 முதல் 50 ஆர்டர்கள் மட்டுமே இருந்தது, ஆனால் தற்போது அது நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் ஆர்டர்களாக மாறியுள்ளது. இந்த சேவை டெல்லி, அகமதாபாத், பூனே, மும்பை, ஐதராபாத், ஜெய்ப்பூர், சூரத், சண்டிகர், சென்னை மற்றும் பெங்களூர் உள்ளிட்ட 10 நகரங்களில் கிடைக்கிறது. அண்மையில் ஃபிளிப்கார்ட்டின் தயாரிப்புகளுக்கான முன்னாள் துணைத்தலைவர், சரண் சாட்டர்ஜியை இந்த நிறுவனம் தலைமை செயல் இயக்குனராக நியமித்துள்ளது.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பணியாற்றி விட்டு ஏன் மீண்டும் இந்தியா திரும்பினார் என்று சரண் விவரிக்கையில் “ நான் இந்தியா திரும்பியபோது அமெரிக்கா போலவே இங்கும் எல்லா நிலைமை இருக்க வேண்டும் என்று நினைத்தேன். தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பிரச்சனைகளை தீர்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும், அதனால் ஒரு சிறிய நிறவனத்தில் பணியாற்ற விரும்பினேன். ஹவுஸ் ஜாய் நான் எதிர்பார்த்த அம்சங்களுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது” என்கிறார் அவர்.

தற்சமயம் இந்த நிறுவனம் லேப்டாப், செல்போன் மற்றும் ஏ.சி சரிபார்த்தல், தண்ணீர் குழாய் சரிசெய்தல், தச்சு வேலை மற்றும் துணி சலவை உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. அடுத்த கட்டமாக வீட்டில் பயன்படுத்தப்படும் தானியங்கி பொருட்கள் பராமரிப்பு மற்றும் சரிபார்த்தல் பணியை செய்யத் திட்டமிட்டுள்ளது. அதே போன்று பணியாளர்களுக்கு இந்தத் துறை சார்ந்த திறனை வளர்க்கும் பயிற்சியையும் ஹவுஸ் ஜாய் நிறுவனம் செய்து வருகிறது. அழகுக்கலை மற்றும் சுபநிகழ்ச்சிகளுக்கான அலங்கார சேவைகளுக்கென, ஹவுஸ்ஜாய் பணியாளர்களுக்குள்ளாக ஒரு பிரத்யேக சேவையையும் வழங்குகிறது. அதே போன்று எந்த ஒரு வேலையின் போதும் சேவை வழங்குபவரால் பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டால் 10 ஆயிரம் ரூபாய் வரை காப்பீடு பெற்றுக் கொள்ளும் உறுதியையும் இந்நிறுவனம் வழங்குகிறது.

ஹவுஸ் ஜாய் நிறுவனத்தை மேலும் பல நகரங்களுக்கு விரிவாக்கம் செய்து, அடுத்த 6 மாதங்களில் நாள் ஒன்றிற்கு 1 லட்சம் ஆர்டர்களை ஈர்ப்பதையே அடுத்த இலக்காக வைத்துள்ளது. இந்நிறுவனம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மேட்ரிக்ஸ் பார்ட்னர்களிடம் இருந்து சீரிஸ் ஏ பிரிவில் 4 மில்லியன் டாலர் பெற்றுள்ளது. ஹவுஸ்ஜாய் ஆண்ட்ராய்டு போன்களுக்கான செயலியையும் அறிமுகம் செய்துள்ளது, விரைவில் ஆப்பிள் மற்றம் விண்டோஸ்களுக்கான செயலியையும் அறிமுகம் செய்யத்திட்டமிட்டுள்ளது.

பெரும்பாலான மக்கள் சந்தித்த பிரச்சனைக்கு தங்களின் சேவை மூலம் தீர்வைக் கண்டதோடு, சந்தையின் மிகப்பெரிய கவனத்தையும் இது ஈர்த்துள்ளது. இந்தத் துறையில் இன்னும் பல ஸ்டார்ட் அப்களைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே இருக்கிறது என்பதை இந்நிறுவனம் நிரூபித்துள்ளது.

போட்டி நிறுவனங்களான ஜஸ்ட் டயல் மற்றும் அவைகளின் செயலிகளான ஹெல்ப் சாட் மற்றும் ப்ரோ4யூ அனைத்தும் ஹவுஸ் ஜாயின் செயல்பாடுகளை உற்று நோக்கி வருகின்றன.

இணையதள முகவரி: HouseJoy