’பெண்கள் சுதந்திரமாக தங்களை வெளிப்படுத்திக் கொள்ள போராடவேண்டும்’- ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ இயக்குனர்! 

பொதுமக்களின் கருத்தும், தணிக்கை நடவடிக்கை முரண்பட்டும், பெண்களின் ஆதரவுடன், ’லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ திரையில் வெளியிடப்பட்டு வெற்றிநடை போடுகிறது. 

0

பெண்களின் குரல்கள் அடக்கிவைக்கப்பட்டு மௌனமாக்கப்படுகிறது. ’லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ என்கிற திரைப்படம் பெண்களின் அடக்கிவைக்கப்பட்ட உள்ளார்ந்த குரலையும் விருப்பங்களையும் படம்பிடித்துக் காட்டுகிறது. நான்கு மாதங்களுக்கு முன்னால் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் இத்திரைப்படத்திற்கு சான்றிதழ் அளிக்க மறுத்துவிட்டது. 

“பெண்கள் சார்ந்த கதை. வாழ்க்கையைத் தாண்டிய கற்பனை. பாலியல் சம்பந்தப்பட்ட காட்சிகள், தவறான வார்த்தைகள், ஆபாசமான ஆடியோ, போன்றவை சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவைக் குறித்ததாக உள்ளது,” 

என்கிற கருத்துக்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஆங்காங்கே சில பகுதிகள் வெட்டி எடுக்கப்படலாம் என்று எதிர்பார்த்தார் திரைப்பட்டத்தின் இயக்குனரான அலங்கிரிதா ஸ்ரீவஸ்தவா. ஆனால் தனது கலைநயமிக்க படைப்பாற்றல் ஒருதலைப்பட்சமாக பார்க்கப்பட்டு முடக்கப்படும் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. இத்திரைப்படத்தின் முதல் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. டோக்யோவில் திரையிடப்பட்டு ஸ்பிரிட் ஆஃப் ஏசியா பரிசு வென்றது. மேலும் மும்பை திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாலின சமத்துவத்தின் சிறந்த திரைப்படத்திற்கான ஆக்ஸ்ஃபேம் விருது பெற்றது. இருந்தும் முதல் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு முழுமையாக நான்கு மாதங்கள் முடிந்த பிறகு இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டது.

இயக்குனர் அலங்கிரிதா ஸ்ரீவஸ்தவா
இயக்குனர் அலங்கிரிதா ஸ்ரீவஸ்தவா

ஹெர்ஸ்டோரியுடனான பிரத்யேக உரையாடலில் அலங்கிரிதா திரைப்படத்தின் மீதான தனது காதல், பொதுமக்களின் கருத்து மற்றும் திரைப்படத்தை இந்தியாவில் வெளியிட போராடியதில் கற்ற வாழ்க்கைப் பாடம், ஏன் பெண்களும் பெண்கள் குறித்த திரைப்படங்களும் முறையாக அங்கீகரிக்கப்படுவதில்லை உள்ளிட்ட விஷயங்கள் குறித்துப் பேசினார்.

திரைப்படம் இயக்கும் ஆர்வம் இளம் வயதிலேயே உருவானது

தெஹ்ராதுன் பகுதியில் வெல்ஹம்ஸ் என்கிற போர்டிங் பள்ளியில் படித்தார் அலங்கிரிதா. அங்கு அவரது சீனியர்ஸ் ஆடியோ/வீடியோ வகுப்பின் ஒரு பகுதியாக ஒரு திரைப்படத்தை உருவாக்கினர். அலங்கிரிதா அதைப் பார்த்தார். 

”முதல் முறை அந்தத் திரைப்படத்தை பார்த்தபோது சீனியர்கள் படிக்கும் அந்த வகுப்பை எட்டும்போது நானும் இதே போல் திரைப்படத்தை உருவாக்குவேன் என்று நினைத்தேன். அப்போதிருந்து ஆடியோ விஷுவல் மீடியத்தை பயன்படுத்தி கதைகள் சொல்லவேண்டும் என்று விரும்பினேன்.”

அவரது பெற்றோர் பீஹாரில் பணிபுரிந்தது வந்ததால் பல வருடங்கள் அங்கே வசித்தனர். இதனால் குழந்தைப் பருவத்தில் பீஹார் முழுவதும் சுற்றி வந்திருந்தார் அலங்கிரிதா. இறுதியில் அவர்களது குடும்பம் டெல்லிக்கு மாற்றலானது. அவரது அப்பா பீஹாரைச் சேர்ந்தவர். அவரது அம்மாவின் குடும்பத்தினர் பஞ்சாபி பதன்ஸ். இவர்கள் பிரிவினைக்குப் பின் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள். அலங்கிரிதா தனது அம்மாவின் மூலம் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் ப்ரகாஷ் ஜாவை சந்தித்தார். சமூக-அரசியல் திரைப்படங்களுக்குப் புகழ்பெற்ற இவரும் பீஹாரைச் சேர்ந்தவர்.

அலங்கிரிதா டெல்லியின் ஸ்ரீராம் கல்லூரியில் பத்திரிக்கைத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். அதன் பிறகு டெல்லியின் ஜாமியா பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு பிரிவில் முதுகலை பட்டம் படித்தார். முதுகலை படிப்பை முடிப்பதற்கு முன்பே 2003-ம் ஆண்டு ப்ரகாஷ் ஜாவுடன் பணிபுரியத் துவங்கினார். சில ஆண்டுகளில் கங்காஜல், அபாஹரன், தில் தோஸ்தி, கோயா கோயா சான்ந்த், ராஜ்நீதி ஆகிய பல ப்ராஜெக்டுகளில் அவருடன் பணிபுரிந்தார். இறுதியில் 2011-ம் ஆண்டு ’டர்னிங் 30’ என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதில் கதாநாயகியான நைனா அவரது 30-வது பிறந்த நாளுக்கு சற்று முன்பு வாழ்க்கைப் போக்கின் நெருக்கடியால் மனமுடிடைந்து போவதை விவரிக்கிறது இத்திரைப்படம்.

அவர் சொல்ல விரும்பும் கதையிலும் அதைச் சொல்லும் விதத்திலும் தனக்கென ஒரு தனி பாணியை பின்பற்றவேண்டும் என்பதை ஜா தொடர்ந்து ஊக்குவித்ததாக தெரிவிக்கிறார் அலங்கிரிதா. கதையோ அல்லது கதாப்பாத்திரமோ எப்படி இருக்கவேண்டும் என்பதை அவர் நிர்ணயிக்கவில்லை. என்னுடைய சிந்தனையின் மீது நான் திடமான நம்பிக்கை வைக்கவேண்டும் என்பதையே தொடர்ந்து ஊக்குவித்தார்.”

’லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’

அலங்கிரிதாவின் திடநம்பிக்கையே தனது திரைப்படத்திற்கான சான்றிதழைப் பெற போராட வைத்தது. திரைப்படத்தை உருவாக்கும்போது இப்படிப்பட்ட விஷயங்கள் அரங்கேறும் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அவரது முதல் திரைப்படத்திற்குப் பிறகு ஒரு சிறு இடைவெளி எடுத்துக்கொண்டார். பீஹார் குறித்த ஆவணப்படத்தை உருவாக்கினார். இதற்காக மாநிலம் முழுவதும் பயணித்தார். சிறுவயதில் சென்ற பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார். வேறு ஒரு திரைப்படத்தில் பணிபுரியும் போதுதான் ’லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட்டை எழுதினார். அதை என்எஃப்டிசி ஃபிலிம் பஜார் ஸ்கிரீன்ரைட்டர்’ஸ் லேப்பிற்கு அனுப்பி வைத்தார். ஸ்கிரிப்ட் தேர்வானது. ஒரு மிகச்சிறந்த வழிகாட்டியான ஊர்வி ஜுவேக்கர் உதவியுடன் இதில் தொடர்ந்து பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியுற்றார். எனினும் அப்போது அவர் பணிபுரிந்து வந்த மற்றொரு திரைப்படத்தின் மீதே அவரது கவனம் இருந்தது. அந்தத் திரைப்படம் எதிர்பார்த்தவாறு அமையாததால் மறுபடியும் ’லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ திரைப்படத்தை கையிலெடுத்தார். இதை உருவாக்க சில வருடங்கள் ஆனது. இந்தத் திரைப்படத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது பணத்தை ஈட்டுவதற்காக சில திரைப்படங்கள் மற்றும் சில வொர்க்ஷாப்களுக்கு மார்கெட்டிங் செய்தார்.

திரைப்படத்தில் நடித்த நடிகர்கள்தான் என்னுடைய மிகப்பெரிய பலம். நடிகர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் என அனைவரும் ஒப்பந்தத்தின் வரையறைகளைத் தாண்டி இத்திரைப்படத்திற்கு அதிகம் பங்களித்துள்ளனர். இதனால் இத்திரைப்படம் வலுவான ஆற்றலைப் பெற்றுள்ளது. அதிக உணர்திறனுடனும் நேர்மையாகவும் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கதையின் நோக்கம் தெளிவாக உள்ளது. இதில் பணிபுரிந்த ஒவ்வொருவரும் இதை உணர்ந்தனர்.

எந்தவித காரணமும் இன்றியே இப்படி ஒரு தலைப்பு உருவகப்படுத்தப்பட்டது. எனினும் பெண்கள் எப்போதும் முழுமையாக சுதந்திரமானவர்கள் அல்ல என்கிற அவரது நம்பிக்கைதான் இத்திரைப்படத்தின் நோக்கமாகும். 

“வெளியிலிருக்கும் எந்த காரணிகளும் அவர்களுக்கு தடையாக இருந்ததில்லை. ஆனால் பெண்கள் தங்களது விருப்பங்கள் மற்றும் உணர்வுகளுக்கான உரிமை கிடைக்கவில்லை என்கிற மனதளவிலான போராட்டமே அவர்களுக்கு தடையாக உள்ளது.” என்றார்.

தணிக்கை

அலங்கிரிதா தனது திரைப்படத்துடன் திரைப்பட விழாக்களுக்கு பயணித்தார். உலகெங்கிலுமிருந்து கிடைத்த வரவேற்பைக் கண்டதும் இத்திரைப்பட வெளியீட்டிற்கு போராடவேண்டும் என்று தீர்மானித்தார். ”மக்கள் திரைப்படத்தைப் பார்க்க வரிசையில் நின்றனர். எகிப்து ஸ்டாக்ஹோம் போன்ற பகுதிகளில் பல முறை ‘ஹவுஸ் ஃபுல்’ பலகையை பார்த்தோம். இவை மகிழ்ச்சியூட்டுவதாக அமைந்தது. கலாச்சாரம் புரியாவிட்டாலும் மக்கள் திரைப்படத்தை உணர்ந்தனர்.”

எனினும் பார்வையாளர்களிடமிருந்து கிடைத்த பெரும் வரவேற்பும் சமூக ஊடகங்களின் சக்தியும் தணிக்கை வாரியத்திடமிருந்து வெளியிடுவதற்கு கிடைத்த மறுப்பை எதிர்கொள்ள உதவியது. ”முதல் கடிதம் கிடைத்ததும் அதை மக்களிடையே வெளிப்படுத்தவில்லை. ஆய்வுக் குழுவிடம் சென்றேன். திரைப்படத்திற்கு சான்றிதழ் வழங்கமாட்டோம் என்றனர். அப்போதுதான் நான் பொதுமக்களிடயை வெளிப்படுத்தினேன்.”

விழிப்படையச் செய்த தருணம்

ஆய்வுக் குழுவின் முடிவை கேட்டபோது எப்படி உணர்ந்தார் என்பதை பகிர்ந்துகொண்டார் அலங்கிரிதா.

ஒரு விநோதமான உணர்வு எனக்குள் ஏற்பட்டது. நாம் கற்பனை செய்துபார்க்கும் அளவிற்கு இந்தியப் பெண்களுக்கு தங்களை வெளிப்படுத்திக்கொள்வதற்கு தேவையான சுதந்திரம் இல்லை என்பதை உணர்ந்தேன். அதுவே என்னை விழிப்படையச் செய்தது. இந்திய திரைப்படங்களில் பாலியல் குறித்த விஷயங்கள் ஆண்கள் பார்வையிலேயே உருவாக்கப்படுகிறது. அவர்களது பார்வையையும் எதிர்பார்ப்பையும் பூர்த்திசெய்யும் விதத்திலேயே வடிவமைக்கப்படுகிறது. 

திரைப்படத்திற்காக மட்டுமல்லாமல் இந்தியப் பெண்கள் தங்களை சுதந்திரமாக வெளிப்படுத்திக்கொள்ளுவதற்கும் பொறுப்பேற்க நினைத்தேன். பொதுமக்களுக்காகவே இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது. தணிக்கைக் குழு திரைப்பட வெளியீட்டிற்கு எதிராக செயல்பட்டதும் இதை மக்களிடையே எடுத்துச்செல்ல தீர்மானித்தேன்.

பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் திரைப்படம் குறித்து பேசுகிறார்கள். தங்களை வெளிப்படுத்திக்கொள்ள தேவைப்படும் சுதந்தரம் குறித்து பேசுகிறார்கள். ’லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ திரைப்படத்திற்கு ஆதரவளிக்கிறார்கள். சமீபத்தில் இவை அனைத்தும் நடக்கும் வரை அலங்கிரிதா சமூக ஊடகங்களின் சக்தியை புரிந்துகொள்ளவில்லை. “மிகச் சிறந்த வெளிப்பாடு. உலகெங்கிலுமுள்ள மக்களை மிகச்சிறப்பாக இணைத்தது. இந்த அளவிற்கு மக்களுடன் ஒன்றிணைந்ததாக நான் எப்போதும் உணர்ந்ததில்லை.”

பெண்ணின் பார்வை

பெண்ணின் பார்வை என்றால் என்ன? திரைப்படத்தில் பெண்களின் பகுதியை அது எவ்வாறு மாற்றக்கூடும்? என்று கேள்வியெழுப்புகையில், 

“பெண்களின் பார்வை மூன்று விதங்களில் செயல்படும் – கதாபாத்திரத்தை கேமிரா எவ்வாறு பார்க்கிறது? கதாபாத்திரங்கள் ஒன்றை மற்றொன்று எவ்வாறு பார்க்கிறது? கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் எவ்வாறு பார்க்கின்றனர்? இந்தியாவில் கதைகள் பெரும்பாலும் ஆண்களுக்காக சொல்லப்படும். ஆண்களின் கோணத்தில் சொல்லப்படும்.

அனைத்து பெண் இயக்குனர்களும் வேண்டுமென்றே பெண்களின் பார்வையை வெளிப்படுத்துவதில்லை. “திரைப்படங்களில் பெண் கதாநாயகிகள் மட்டும் இருந்தால் போதாது. ’பிங்க்’ திரைப்படத்திற்கு அமிதாப் பச்சன் தேவைப்படுகிறார். ’தங்கல்’ திரைப்படத்தில் தனது கனவிற்காக வாழ்கிறது அமீர் கானின் கதாப்பாத்திரம். இவை முன்னேற்றம்தானே தவிர முன்மாதிரி அல்ல. பெண்களுக்கு சுயமாக செயல்படும் திறன் முழுமையாக இருப்பதாகவோ அல்லது அந்தத் திறனுக்காக முயற்சிப்பதாகவோ அல்லது அப்படிப்பட்ட திறனே இல்லாத பெண்களையோ கொண்ட முன்மாதிரித் திரைப்படங்கள் மிகக்குறைவு.”

இத்திரைப்படம் தற்போது திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. இந்த வெற்றி தனிநபருடைய வெற்றி அல்ல. பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் திரைப்படம் குறித்து பேசிவருவதால் இது பொதுமக்களின் வெற்றி. எனினும் இது கடலின் ஒரு துளி போலத்தான்.  

பெண்கள் பல திரைப்படங்களை இயக்கவேண்டும். ஹிந்தி திரைப்படங்களில் தற்போது 15 முதல் 20 பெண் இயக்குனர்கள் செயல்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியிடப்படும் திரைப்படங்களில் 50 சதவீதம் பெண்கள் சார்ந்த திரைப்படமாக இருக்கவேண்டும். பெண்களால் தயாரிக்கப்பட்ட திரைப்படமாக இருக்கவேண்டும், இந்த நிலையை எட்டும்வரை தொடர்ந்து போராடவேண்டும்.”

வாழ்க்கைப் பாடம்

அலங்கிரிதா அறிவுரை வழங்க விரும்பவில்லை. திரைப்படத்தின் மூலம் ஒரு தகவலை கொண்டு சேர்க்க விரும்பவில்லை. இரண்டு மணி நேரம் திரைப்படத்தை பார்க்கும் மக்கள் நான்கு பெண்களின் பயணத்தை உணரலாம். அந்த நான்கு பெண்களின் பிரச்சனைகள், மகிழ்ச்சி, தோல்வி, தயக்கம், சிரிப்பு, வலி என அனைத்தையும் உணரலாம். 

”திரைப்படத்தில் வரும் நான்கு பெண்களை அவர்களுக்குத் தெரியும் என்கிற உணர்வு பார்வையாளர்களுக்கு ஏற்பட்டால் ஒரு இயக்குனராக என்னுடைய பணி நிறைவடையும்.”

ஏற்ற இறக்கங்களை சந்தித்தது, தணிக்கையை சந்தித்தது போன்றவை பல விஷயங்களில் அலங்கிரிதாவின் கண்ணோட்டத்தை மாற்றியுள்ளது. இந்தப் பயணத்தில் பல வாழ்க்கைப் பாடங்களையும் கற்றுள்ளார்.

நான் ஒரு மனிதனாக வளர்ச்சியடைந்துள்ளேன். விடாமுயற்சி நிச்சயம் பலனளிக்கும் என்பதை உணர்ந்துள்ளேன். விஷயங்கள் நினைத்தவாறு நடக்கவில்லை என்று நீங்கள் உணர்ந்தால் தொடர்ந்து உறுதியாக இருங்கள். நிச்சயம் வழி கிடைக்கும். திடமான நம்பிக்கை இருக்கவேண்டும் என்பதை இத்திரைப்படமும் மக்களிடம் கிடைத்த மாபெரும் வரவேற்பும் கற்றுக்கொடுத்துள்ளது.

ஆங்கில கட்டுரையாளர் : தன்வி துபே

Related Stories

Stories by YS TEAM TAMIL