ஆன்லைன் மோசடியில் சிக்கும் பெண் தொழில்முனைவோர்: ஃபேஸ்புக் குரூப் மூலம் உதவும் சென்னை வக்கீல்!

வீட்டில் இருந்தபடியே வியாபாரம் செய்யும் தொழில் முனைவர்கள், முகம் தெரியாத ஆன்லைன் வியாபாரிகளிடம் பணத்தை இழந்து வாடும் குடும்பத்தலைவிகளுக்காக ஃபேஸ்புக்கில் குரூப் ஆரம்பித்து உதவி வருகிறார் சென்னை ஹைகோர்ட் வக்கீல் அபிமன்யு.

0

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இணையத்தின் உதவியால் உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கி விட்டது என்றால் மிகையில்லை. ஆப்பிரிக்காவின் எங்கோ ஒரு மூலையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை நம் வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்து பார்க்க முடிகிற நம்மால், அமெரிக்காவில் எங்கோ ஒரு மூலையில் விற்பனை செய்யப்படும் பொருளையும் எளிதாக ஆன்லைனில் வாங்க முடிகிறது.

விற்பனையாளர் நம் எதிரில் இருக்கும் பட்சத்தில் நம்மால் பொருளின் தன்மை, தரம் மற்றும் விலை போன்றவை குறித்து பேரம் பேச முடியும். ஆனால், இணையத்தில் இதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவே. நாம் கண்களால் பார்க்கும் பொருள் தான், கைக்கு வந்து சேருகிறதா என்று உறுதியிட்டு சொல்ல முடியாது.

ஏதாவது ஒரு பொருளை வாங்குவதற்கே இத்தனை விசயங்களை யோசிக்க வேண்டி இருக்கிறது என்றால், இணையத்தில் முன்பின் தெரியாத ஒரு நபரிடம் இருந்து பொருட்களை வாங்கி அதனை மற்றவர்களுக்கு விற்பனை செய்பவர்களின் நிலை பரிதாபம் தான்.

ஏனென்றால் சமயங்களில் ஆன்லைனில் பணபரிமாற்றம் முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட விற்பனையாளர் காணாமல் போய் விடுவார். பணத்தை இழந்தவர் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தாலும் வெற்றி கேள்விக்குறி தான். காரணம் விற்பனையாளர் தந்த விபரங்கள் அனைத்தும் உண்மையாய் இருந்திருக்காது. விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்குச் சந்து என ஏதோவொரு நாட்டில் போலியான முகவரியைத் தான் இத்தகைய ஏமாற்றுக்காரர்கள் பயன்படுத்துகிறார்கள். இதனாலேயே ஆன்லைனில் பொருளை வாங்கி வியாபாரம் செய்வதென்றால் பலரும் அஞ்சுகின்றனர்.

வழக்கறிஞர் அபிமன்யு
வழக்கறிஞர் அபிமன்யு

ஆனால், இவர்களுக்கு நம்பிக்கை தரும் விதத்தில் ஃபேஸ்புக்கில் ஒரு பக்கத்தை ஆரம்பித்து செயல்பட்டு வருகிறார் சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அபிமன்யு. கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இவரது ‘சைபர் கிரைம் இந்தியா’ ஃபேஸ்புக் பக்கத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

“ஒன்பது மாதங்களுக்கு முன்பு என் மனைவிக்கு சுடிதார் வாங்குவதற்காக ஆன்லைனில் தேடிய போது தான், ஃபேஸ்புக்கில் ஏராளமானோர் ஆடைகள் விற்பனை செய்வது குறித்து தெரிந்து கொண்டேன். மேலும் அது பற்றி விசாரித்த போது தான், ஆன்லைன் விற்பனையில் நடைபெறும் மோசடிகள் குறித்தும் தெரிந்து கொண்டேன். அதனைத் தொடர்ந்து தான் இந்த ஃபேஸ்புக் பக்கத்தை நான் ஆரம்பித்தேன்,” என்கிறார் அபிமன்யு.

இப்படியாக ஃபேஸ்புக்கில் ஆடைகள் விற்பனை செய்வது பெரும்பாலும் பெண்கள் தானாம். திருமணம், குழந்தைப் பேறுக்குப் பின் வெளியில் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள பெண்கள் வீட்டில் இருந்தபடியே வருமானம் ஈட்ட, ஃபேஸ்புக்கில் இது போன்ற வியாபாரங்களை நடத்துகின்றனர். முகநூல் குரூப்கள் மூலமாகவே மொத்தவிலையில் ஆடைகளை வாங்கி, அவற்றை சில்லறை விலையில் விற்பனை செய்கின்றனர்.

இத்தகைய விற்பனையில் அலைச்சல் இல்லை என்றாலும், சாதகங்களைப் போலவே பாதகங்களும் நிறையவே இருக்கிறது. பலர் இதனை வெற்றிகரமாக செய்து வரும் சூழலில், சிலர் தப்பான ஆட்களிடம் சிக்கி தங்களின் பணத்தை இழப்பது வாடிக்கையாகவே நடந்து வருகிறது.

“ஆன்லைனில் பதிவிடப்படும் வெறும் ஆடைகளின் படங்களை மட்டுமே பார்த்து, விற்பனை செய்பவர் யார் என்ற விபரம் தெரியாமலேயே அவற்றை வாங்க இப்பெண்கள் தீர்மானிக்கின்றனர். ஏமாற்றினால் இவர்கள் வெளியில் சென்று போலீசில் புகார் செய்ய, அலைய விரும்ப மாட்டார்கள் என்பதே ஏமாற்றுக்காரர்களின் நம்பிக்கை. அதனாலேயே குறைந்த விலையில் பொருட்களைத் தருவதாகச் சொல்லி அவர்களை ஏமாற்றுகின்றனர்.

“வெறும் வார்த்தை ஜாலங்களில் மயங்கி, விற்பனையாளர் கேட்கும் பணத்தை ஆன்லைன் வாயிலாகவே பரிமாற்றம் செய்து விடுகின்றனர். ஆனால், பணத்தை வாங்கியபின் சம்பந்தப்பட்ட நபரால், விற்பனையாளரை மீண்டும் தொடர்பு கொள்ள முடிவதில்லை என்பதே இங்கு பெரும்பாலானோர் சொல்லும் முக்கியக் குற்றச்சாட்டு,” எனக் கூறுகிறார் அபிமன்யு.

சர்வதேச அளவில் இத்தகைய குற்றங்கள் நடைபெற்று வருவதாக கூறும் அபிமன்யு, ஆடைகள் மட்டுமின்றி பலர் மின்னணு சாதனங்கள் வாங்கும்பொழுதும் ஏமாந்துள்ளதாகக் கூறுகிறார்.

சிறுவயது முதலே சமூகசிந்தனையுடன் வளர்ந்த அபிமன்யு, பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும், அவர்களுக்கு நீதி கிடைத்திட வழி வகை செய்திட வேண்டும் என்றே சட்டம் படித்துள்ளார். பெரும்பாலும் ஆன்லைனில் ஏமாற்றுபவர்கள் நன்கு படித்தவர்கள் என்று கூறும் அவர், பாதிக்கப்பட்டவர்களுக்காக மிகக்குறைந்த கட்டணத்தில் சட்டரீதியான உதவிகளையும் செய்து வருகிறார்.

’சைபர் கிரைம் (இந்தியா)’ CYBER_CRIME (INDIA), ’ஜெனியூன் பஜார்’ (Genuine Bazaar) என இரண்டு ஃபேஸ்புக் குரூப்புகளை உருவாக்கி, அதனை நிர்வகித்து வருகிறார் அபிமன்யு. இதில் சைபர் கிரைம் இந்தியா பக்கத்தில் ஏமாற்றுக்காரர்களின் விபரங்களைப் பதிவிட்டு வருகிறார். இதன்மூலம், மீண்டும் அவர்களிடம் வேறு யாரும் ஏமாந்து விடாமல் தவிர்க்க முடிவதாக அவர் கூறுகிறார்.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது குழு மூலமாக போராடி பணத்தை மீட்டுத் தந்துள்ளார் அபிமன்யு. அதோடு தனது ஜெனியூன் பஜாரில் நல்ல விற்பனையாளர்களை அறிமுகப்படுத்துவதையும் அவர் செய்து வருகிறார்.

“ஏறக்குறைய ப்ளூவேல் கேம் மாதிரி தான் இந்த ஆன்லைன் வியாபார ஏமாற்றுக்காரர்களின் உக்தியும். ஒருமுறை தொகையைக் கொடுத்து ஏமாந்தவர்களிடம், மீண்டும் பல்வேறு காரணங்களைக் கூறி பணத்தைப் பறிக்க மோசடிக்காரர்கள் முயற்சிப்பார்கள். சம்பந்தப்பட்ட பார்சலை அனுப்ப மேலும் இவ்வளவு தொகை தேவைப்படுகிறது என ப்ளாக்மெயில் செய்வார்கள். ஏற்கனவே கொடுத்த பணத்தையோ அல்லது தேவையான பொருளையோ பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சம்பந்தப்பட்ட நபரும் தொடர்ந்து பணம் அளிக்க வேண்டி வந்து விடுகிறது. இப்படியாக ஆன்லைனில் ரூ. 2 லட்சம் வரை கொடுத்து ஏமாந்தவர்களைக் கூட நான் சந்தித்திருக்கிறேன்,” என்கிறார்.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான அபிமன்யு, ஃபேஸ்புக் புகார்கள் மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்காக நேரடியாகவும் வாதாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஃபேஸ்புக் க்ரூப்கள்: CYBER_CRIME (INDIA) | ABIMANYU'S 'G' BAZAAR (INDIA'S FIRST 100% GENUINE SELLERS BAZAAR)

Related Stories

Stories by jayachitra