உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஹரியானா பெண்!

0

இரண்டாண்டுகளுக்கு முன்னர் துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் பயிற்சி பெறத் துவங்கிய 16 வயது மனு பாகர் சர்வதேச துப்பாக்கிச் சுடும் விளையாட்டு கூட்டமைப்பு (ISSF) ஏற்பாடு செய்திருந்த போட்டியில் தனிநபர் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தையும் கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டாவது தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

மனு பாகர் தனது 16 வயதில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதன்மையானவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். மெக்சிகோவின் குவாடலஜரா நகரில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் அவர் இந்தியாவின் இளம் வீரராக வெற்றி பெற்றுள்ளார். உலகக் கோப்பை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்களில் மூன்றாவது இளம் வீரர் இவர்தான். சர்வதேச துப்பாக்கி சுடும் விளையாட்டு கூட்டமைப்பு (ISSF) ஏற்பாடு செய்திருந்த போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். 

ஆனால் அவரது வெற்றி தொடர்ந்தது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவு போட்டியில் தங்க பதக்கம் வென்ற மறுநாளே 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஓம் பிரகாஷ் மிதர்வாலுடன் இணைந்து விளையாடினார். இந்த ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.

ஹரியானாவைச் சேர்ந்த மனு பாகர் இரண்டாண்டுகளுக்கு முன்னரே இந்த விளையாட்டுக்கு அறிமுகமானார். ஜஜ்ஜார் மாவட்டத்திலுள்ள கோரியா கிராமத்தின் யூனிவர்சல் மேல்நிலைப் பள்ளியில் பதினோறாம் வகுப்பு படிக்கும் மனு பாகர் தினமும் ஐந்து மணி நேரம் பயிற்சி செய்து வருவதாக ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ அறிக்கை தெரிவிக்கிறது.

உலகக் கோப்பை இறுதி போட்டியில் மனு 237.5 புள்ளிகளுடன் தனது அபிமான வீரரான அல்ஜண்ட்ரா ஜாவாலாவை 0.4 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். மனு பிறப்பதற்கு முன்பே 1998-ம் ஆண்டு முதல் பல்வேறு உலகக் கோப்பை பதக்கங்களை வென்ற அல்ஜண்ட்ரா பலரது அபிமான வீரராக இருந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனு போட்டியின்போது ஏழு முறை சுடும் இடைவெளியில் மூன்று முறை 9 புள்ளிகளுக்கும் குறை-வாக எடுத்து கிட்டதட்ட பதக்கத்தை வெல்ல இயலாத நிலைக்கு ஆளானார். 17-வது முறை 8.4 புள்ளிகளும், அதன் பிறகு சுதாரித்துக்கொண்டு 18-வது முறை 10.2 புள்ளிகளும் எடுத்தார். ஆனால் 19-வது முறை 8.1 புள்ளி எடுத்தபோதும் அதன் பிறகு விரைவாக செயல்படத் துவங்கினார்.

”வருங்காலத்தில் நான் மென்மேலும் சாதனை படைக்க இந்த பதக்கம் எனக்கு ஊக்கமளிக்கும். இந்தப் பதக்கத்தை எனக்கு தொடர்ந்து ஆதரவளித்த என்னுடைய குடும்பத்தினருக்கும் பயிற்சியாளருக்கும் சமர்ப்பிக்கிறேன்,” என்றார் மனு.

மனுவின் அப்பா ராம் கிஷன் மெர்சண்ட் நேவியில் பொறியாளராக உள்ளார். அவரது அம்மா சுமேதா மனு படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியராக உள்ளார். மனுவின் சாதனையைக் கண்டு இருவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மனுவின் அப்பா ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,

“மனு துப்பாக்கி சுடும் விளையாட்டில் பயிற்சியைத் துவங்கிய பல நாட்களுக்குப் பின்னரே அவருக்கு துப்பாக்கி வாங்கிக்கொடுத்தோம். அவர் மிகுந்த அர்ப்பணிப்புடம் செயல்படுபவர். இந்த விளையாட்டில் தீவிரமாக ஈடுபட விரும்பியதால் மட்டுமே என்னை இதற்காக முதலீடு செய்யச் சொன்னார்.”

இந்த விளையாட்டில் பயிற்சி பெற்ற இந்த இரண்டாண்டுகளில் 18 வயதுக்குட்பட்ட இளையோர், ஜூனியர் (U-21), சீனியர் போன்ற போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளார். 2006-ம் ஆண்டு ககன் நரங் உலகக் கோப்பை போட்டில் தங்கப் பதக்கம் வென்ற இளம் வீரராவார். அதே போல் 2013-ம் ஆண்டு ரஹி சர்னோபட் உலகக் கோப்பை போட்டியில் தங்க பதக்கம் வென்ற இளம் வீரராவார். மனு பாகர் தற்போதைய வெற்றியுடன் இவ்விருவரின் சாதனையை முறியடித்துள்ளார்.

முன்னதாக நடைபெற்ற கலப்பு 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் மெஹுலி கோஷ், தீபக் குமார் ஜோடி 431.5 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது என ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

கட்டுரை : THINK CHANGE INDIA