தொழில் என்பது உற்பத்தியே தவிர லாபம் அல்ல!

0

"பெரும்பாலானோர் கண்களை நான் பார்க்கும் போது நான் ஆன்மாவை பார்க்கிறேன். உங்கள் கண்களை பார்க்கும் போது கீழ்ப்பகுதி இல்லாத பள்ளத்தை, வெற்றுத் துளையை, உயிரில்லாத பகுதியை பார்க்கிறேன்”. இந்த வார்த்தைகளை கூறியது யார் என்று உங்களால் ஊகிக்க முடிகிறதா? கொஞ்சம் முயன்று பாருங்கள். இதை கூறியது ஆப்பிள் நிறுவன சி.இ.ஓவாக இருந்த ஜான் ஸ்கல்லியின் மனைவி தான். இவரை தான் ஸ்டீவ் ஜோப்ஸ் மிகவும் கோலகலமாக அந்த பதவிக்கு கொண்டு வந்திருந்தார். ஜாப்ஸ் நிறுவன வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார் என்பதை ஸ்கல்லியால் மற்றவர்களை ஏற்றுக்கொள்ள செய்ய முடிந்து, இறுதியாக இயக்குனர்கள் குழுவையும் சம்மதிக்க வைக்க முடிந்ததால் ஜாப்ஸ் வெளியேற வேண்டியிருந்தது.

ஸ்கல்லி, ஜாப்ஸ் இருவருமே உடைந்து போயினர், இந்த கூட்டத்திற்கு பிறகு கண் கலங்கி நின்றனர். தனது வெற்றியை மீறி ஸ்கல்லி ராஜினாமா செய்தார். ஜாப்ஸ் தன்னால் இயன்ற அளவுக்கு ஸ்கல்லியை வெளியேற்ற முயர்ந்ததால் அவரது நடத்தையால் ஸ்கல்லியின் மனைவி மிகவும் நொந்து போயிருந்தார். ஜாப்சை சந்தித்து பேச தீர்மானித்தார், பார்கிங் மையத்தில் ஜாப்சை சந்தித்தார். ஜாப்ஸ் அவர் கண்களை நேராக பார்ப்பதை தவிர்த்தார். அவர் தன்னை நேராக பார்க்கும்படி ஜாப்சை கேட்டுக்கொண்டு "நான் பேசும் போது உங்களால் எனது கண்களை பார்க்க முடியுமா ” என்று கேட்டார். அப்போது தான் இந்த வார்த்தைகளை ஜாப்ஸ் மீது வீசினார்.

ஜாப்ஸ் இதயமில்லாதவர், கடினமானவர், அன்பில்லாதவர் , உச்சியை தொட்ட அனுதாபம் இல்லாதவர் என்று யார் வேண்டுமானாலும் சொல்லிவிடலாம். இது உண்மையாகவும் இருக்கலாம். அவர் பணியாற்ற மிகவும் கடினமான மனிதராக இருந்தார். பொருட்களை தனியே அல்லது பொதுவில் ஆய்வு செய்யும் போது அவர் அச்சிடக்கூடிய வார்த்தைகளை அரிதாகவே பயன்படுத்தியிருக்கிறார். அவர் சகாக்களுடன் இனிமையானவராக இல்லை. தான் காதலில் விழுந்த முதல் நபர் என்று டினா ரெடிஸ் பற்றி ஜாப்ஸ் கூறியிருக்கிறார். இவரை தான் ஜாப்ஸ் மணந்து கொள்ள கேட்டிருக்கிறார், ஆனால் டினா மறுத்துவிட்டார். "ஒரு நட்சத்திரமாக இருக்கும் ஸ்டீவ் ஜாப்சுக்கு என்னால் நல்ல மனைவியாக இருக்க முடியாது. எந்த மட்டத்திலும் இது வேதனையை தந்திருக்கும். தனிப்பட்ட உரையாடல்களில் அவரது கருணையில்லாத தன்மையை என்னால் பொருத்துக்கொள்ள முடிந்ததில்லை. அவரை நான் காயப்படுத்த விரும்பவில்லை. ஆனால் அவர் மற்றவர்களை காயப்படுத்துவதை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருக்க விரும்பவில்லை. இது தாள முடியாதது மற்றும் வலி நிரம்பியது” என்று, ஜாப்ஸ் பற்றி டினா கூறியிருக்கிறார். நார்சிச தன்மை கொண்ட ஆளுமை குறைப்பாட்டால் ஜாப்ஸ் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் நம்பினார்.

ஆனால் ஜாப்ஸ் ஒரு மேதை. அதோடு மேதைகள் சாதாரண மனிதர்களின் வாழ்வியலை பின்பற்றுவதில்லை. வெறுங்காலுடன் சாலைகளில் நடத்து செல்லவும் கடைசி வரை கடினமான உணவு பழக்கத்தையும் ஜாப்சை தவிர வேறு யாரால் கடைபிடித்திருக்க முடியும். அவர் காய்கறிகள் மற்றும் பழங்களை மட்டுமே உட்கொண்டார். பல நேரங்களில் எதுவும் சாப்பிடமால் இருந்தார். அவர் எப்போதுமே தனது காரை மாற்றுத்திறனாளிகளுக்கான பகுதியில் தான் பார்க் செய்யும் வழக்கம் கொண்டிருந்தார். பல நாள் குளிக்காமல் இருக்கும் பழக்கம் கொண்டதால் அவர் மீது ஒரு வித துர்நாற்றம் வீசும் என்பதாலும் அவருக்கு டியோடரண்ட் பயன்படுத்த பிடிக்காது என்பதாலும், அவர் தனதுமுதல் வேலையில் பகல் ஷிப்டில் இருந்து இரவு ஷிப்டிற்கு மாற்றப்பட்டார் என்பது உங்களுக்குத்தெரியுமா? இந்தியாவின் குறுகலான வீதிகளில் அவர் பல மாதங்கள் அமைதி மற்றும் தூய்மையை தேடி அலைந்திருக்கிறார். இறுதியில் அவரது சுயசரிதை ஆசிரியர் வால்டர் ஐசக்சன் கூறுவது போல, “அவர் இந்த கடவுள் வழிபாட்டில் எந்த ஆர்வமும் கொண்டிருக்கவில்லை, தேவாலயத்திற்கு சென்றதுமில்லை”. மரணப்படுக்கையில் இருந்த போது ஐசக்சனிடம் அவர்,” இப்போது நான் கடவுள் விஷயத்தில் 50-50 எண்ணம் கொண்டுள்ளேன்” என்று கூறியிருக்கிறார்.

ஆனால் அவர் தான் உலகை மாற்ற பிறந்தவர் என்பதிலும் அதை செய்வேன் என்பதிலும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். பில் கேட்ஸ் போல லாபத்தை குவிப்பதில் ஆர்வம் காட்டாத ஒரு சி.இ.ஓவாக ஜாப்ஸ் இருந்தார். அதோடு செல்வத்தை சேர்ப்பதற்காக தனது வாழ்நாளை வீணடித்து விட்டதாக கருதிய பில் கேட்ஸ் மீது அவர் அதிக மதிப்பு கொண்டிருக்கவில்லை. அதற்காக ஜாப்ஸ் ஓட்டாண்டியாக இருந்தார் என்றில்லை. அவர் பணக்காரராக இருந்தார். ஆனால் வர்த்தகத்திற்காக அவர் கொள்கை புரட்சிகரமாக இருந்தது. அவர் உலகை மாற்றிய பொருட்களை உருவாக்கினார். பாய் டைலன் தான் அவருக்கான ஊக்கமாக இருந்தார். அவரை முழுவதுமாக நம்பினார்- “நீங்கள் சுறுசுறுப்பாக பிறந்திருக்காவிட்டால், சுறுசுறுப்பாக இறக்க நேரிடும்”. சொந்த பிராண்ட்களை விழுங்க கூடிய பொருட்களை உருவாக்குவது பற்றி சக ஊழியர் ஜாப்சிடம் கேள்வி எழுப்பிய போது, “நீங்கள் உங்களை விழுங்காவிட்டால், வேறு யாராவது விழுங்கிவிடுவார்கள்” என அவர் பதில் அளித்துள்ளார். “ஒரு போதும் உங்களை நீங்களே விழுங்கி கொள்ள தயங்க கூடாது” என்பது தான் ஜாப்சின் வர்த்தக விதியாக இருந்தது.

ஐபாட் மூலம் இசைத்துறையை மாற்றி அமைத்தவர் ஐபோன் மற்றும் ஐபேட் மூலம் இணையத்துறையை மாற்றியதில் எந்த வியப்பும் இல்லை. 1997 ல் திவாலாக இருந்த காலகட்டத்தில் அவர் ஆப்பிள் நிறுவனத்திற்கு பொறுப்பேற்றுக்கொண்டார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிரம்மாண்ட நிறுவனமாக இருந்த மைக்ரோசாப்டின் வருவாயுடன் போட்டியிடக்கூடிய நிலையை 2010 ல் அவர் உருவாக்கினார். இன்று வரலாற்றின் செல்வாக்கு மிக்க பிராண்டாக ஆப்பிள் இருக்கிறது. 100 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த நூற்றாண்டு பற்றி விவாதிக்கப்படும் போது ஜாப்ஸ், எடிசன் மற்றும் போர்டுக்கு நிகராக கருதப்படுவார் என்று ஐசக்சன் கூறுகிறார்.

மற்ற எல்லோரையும் முந்திக்கொள்ளும் வகையில் செயல்படுவதே புதிய பொருட்களை தயாரிப்பதில் அவரது காதலின் ரகசியமாக இருக்கிறது. புதுமை, புதுமை, புதுமை என்பதே எப்போதும் அவரது தாரக மந்திரம்.

கம்ப்யூட்டர் துறை முழுவதும் திறந்த வெளி அமைப்பு பற்றி பேசிக்கொண்டிருந்த நிலையில், மைக்ரோசாப்ட் தந்து விண்டோஸ் இயங்குதளத்தை மற்ற நிறுவனங்களுக்கு உரிமம் கொடுத்து லாபம் அடைந்துவந்த நிலையில், மென்பொருள் முதல் வன்பொருள் வரை ஒருங்கிணைந்த அமைப்பில் ஜாப்ஸ் நம்பிக்கை கொண்டிருந்தார். ஜாப்ஸ், பொருட்கள் மீது தீவிரமான நம்பிக்கை கொண்டிருந்தவர். அவரைப்பொருத்தவரை பொருட்களை உருவாக்குவது அறிவியல் மற்றும் கலை. இறுதியில் தான் அது வர்த்தகம். அவரைப்பொருத்தவரை பொருட்களை உருவாக்குவது, பிக்காசோ ஓவியத்தை உருவாக்குவது போல தான். சிக்கல்களை வெற்றி கொள்வது அவரது ஈடுபாடாக இருந்தது. ஐபோன் மற்றும் ஐபேட் பயனாளிகள் எளிதாக பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பமாக இருந்தன. அழகியல் அவரது இரத்தத்தில் கலந்திருந்தது. இந்த நுட்பத்தை அடைவதற்காக அவர் தனது குழுவை தூண்டிக்கொண்டே இருந்தார். இது முடியாத போது அவர் ஆவேசமடைந்ததால் கருணையில்லாதவராக, கடினமானவராக கருதப்பட்டார்.

நவீன வர்த்தகத்தில் விற்பனை பிரதிநிதிகள் தான் ராஜாக்களும் ராணிகளும். அவர்கள் தான் துறையை ஆட்சி செய்கின்றனர். “விற்பனை பிரமுகர்கள் நிறுவனத்தை நடத்தும் போது , பொருட்களை உருவாக்கியவர் பின்னுக்குத்தள்ளப்பட்ட, ஊக்கத்தை இழந்து விடுவார்” என அவர் சொல்வதுண்டு. மைக்ரோசாப்ட் மற்றும் ஐபிஎம் நிறுவன்ங்களின் தோல்விக்கு விற்பனை பிரமுகர்களே காரணம் என்றும் கருதினார். அவர் நிலவிக்கொண்டிருக்கும் சூழலுக்கு எதிராக கிளர்ச்சி செய்து, வாடிக்கையாளர்களுக்கு தேவையானதை அளிக்கும் வழக்கமான போக்கை வெறுத்தார். ”நீங்கள் சொல்லும் வரை மக்களுக்கு என்ன தேவை என்பது அவர்களுக்கு தெரியாது” என கூறிய போர்டு போல அவர் தொலைநோக்கு பெற்றிருந்தார். மேக்கிண்டாஷ் முதல் ஐபேட் வரை அவர் உருவாக்கிய ஒவ்வொரு பொருளையும் மாயாவி போல, அதற்கு முன்னர் இல்லாத பொருள் போல விற்பனை செய்தார். ஆனால் இந்த விற்பனையாளர் வேறுவிதமானவர். அவர் ஸ்டீவ் ஜாப்ஸ் என அழைக்கப்பட்டார். "கிறுக்குத்தனமானவர், பொருந்தாதவர் என கருதப்பட்டார். ஏனெனில் உலகை மாற்ற முடியும் என நம்பியவர்கள் எல்லாம் அப்படி தான் கருதப்பட்டனர்”. எனவே ஸ்கல்லி மனைவி கூறியதில் இருந்து நான் மாறுபடுகிறேன். அவர் குறிப்பிடும் பொரும்பாலானவர்கள் அல்ல ஸ்டீவ் ஜாப்ஸ். அவர், தனித்துவம் மிக்க ஸ்டீவ் ஜாப்ஸ். தனது சகாக்கள் மீதும் முழுமைக்கான தூய்மையான தேடலை நோக்கியும் தீவிரம் காட்டக்கூடிய மனிதர் அவர்.

கட்டுரையாளர்: அசுடோஷ் | தமிழில்: சைபர்சிம்மன்

பொறுப்பு துறப்பு: இது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை. ஆங்கில கட்டுரையாளர் அசுடோஷ், இவரின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். கட்சியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.