சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள வி.கே. தஹில்ரமானி!

0

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக விஜயா கமலேஷ் தஹில்ரமானி பதவியேற்றுள்ளார். இவருக்கு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வரவேற்பு விழா நடைபெற்றது.

இதற்கு முன்னர் பதிவி வகித்த இந்திரா பானர்ஜி உச்சநீதி மன்ற நீதிபதியாக பதவியேற்றதை அடுத்து தஹில்ரமானி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். 

இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூன்றாவது பெண் தலைமை நீதிபதி என்கிற பெருமைக்குரியவர் ஆவார்.

பின்னணி

வி.கே. தஹில்ரமானி 1958-ம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தார். 1982-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்து மும்பை மற்றும் கோவா நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றத் துவங்கினார். இவர் குடிமை மற்றும் குற்றவியல் வழக்குகளில் தேர்ச்சி பெற்றவர் ஆவார்.

இவர் 2001-ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2017-ம் ஆண்டு அந்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். நீதித்துறையில் இவர் பணியாற்றிய இத்தனை ஆண்டுகளில் இதுவரை 31 ஆயிரம் வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார்.

அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றியபோது மும்பையில் உள்ள கே சி சட்டக்கல்லூரியில் பகுதி நேர ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

குறிப்பிடத்தக்க தீர்ப்புகள்

• தஹில்ரமானி; குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் வரலாற்றுத் தீர்ப்பளித்துள்ளார். அந்த சமயத்தில் 19 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய இரண்டு நீதிபதிகளில் இவரும் ஒருவர்.

• பெண் கைதிகள் கருகலைப்பு சார்ந்த வழக்குகளுக்கான விசாரணையின் போது இது தொடர்பான முடிவை அந்த குறிப்பிட்ட பெண் மட்டுமே எடுக்க உரிமை உள்ளது என்கிற தீர்ப்பை இவர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

வரவேற்பு உரை

சென்னை உயர் நீதிமன்றத்தில் பதவியேற்பு விழாவில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி. மோகன கிருஷ்ணன், பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நளினி, மெட்ராஸ் பார் அசோசியேஷன் செயலாளர் வி கமலநாதன், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கிருஷ்ணகுமார் ஆகியோர் புதிய தலைமை நிதிபதியை வரவேற்றனர்.

தலைமை நீதிபதி வி.கே. தஹில்ரமானி குறித்து அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் குறிப்பிடுகையில்,

“சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்றாவது பெண் தலைமை நீதிபதியாக வி.கே.தஹில்ரமானி நியமிக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகளில் முதலிடம் வகிக்கும் அலஹாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி டி பி போஸ்லே அவர்களுக்கு அடுத்தபடியாக தலைமை நீதிபதி தஹில்ரமானி இரண்டாம் இடம் வகிக்கிறார்,” என்று குறிப்பிட்டார்.

’அனைவருக்கும் வணக்கம்’ என்கிற தமிழ் வரிகளுடன் உரையாடலைத் துவங்கிய தலைமை நீதிபதி வி. கே. தஹில்ரமானி,

“இந்திய நீதித்துறை வரலாற்றில் சென்னை உயர் நீதிமன்றம் தனக்கென ஒரு பிரத்யேகமான இடத்தைப் பிடித்துள்ளது. கலாச்சாராம், பண்பாடு என் தனித்தன்மை நிறைந்த தமிழ்நாட்டில் பல சிறந்த நீதிபதிகளும் புகழ்பெற்ற வழக்கறிஞர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு இந்த நீதிமன்றத்தை இத்தகைய தனித்துவமான நிலைக்கு நகர்த்தியுள்ளனர். பாரம்பரியம் நிறைந்த இந்த சென்னை உயர் நீதிமன்றத்தில் தலையை நீதிபதியாக பதிவியேற்பதில் பெருமிதம் அடைகிறேன். 
உள்ளூர் சட்டம் குறித்து முழுமையாக தெரிந்துகொள்ள எனக்கு சிறிது அவகாசம் தேவைப்படும். எனவே நான் சிறப்பாக செயல்பட சக நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என அனைவரது உதவியும் ஆதரவும் தேவை,” என்றார். 

கட்டுரை: ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL