ஒரு மில்லியன் டாலர் நிதியுதவி பெற்ற 'ஹைபர்வெர்ஜ்'

0

ஹைபர்வெர்ஜ் ஆழக் கற்றதலுக்கான தளம். அமெரிக்க முதலீட்டாளர்களான NEA , மில்லிவே வென்ச்சர்ஸ் மற்றும் நயா வென்ச்சர்ஸ் ஆகிய நிறுவனங்களிடமிருந்து ஒரு மில்லியன் டாலர் விதை நிதியாக பெற்றுள்ளது. இந்த நிதி தங்களின் தொழில்நுட்ப குழுவை விரிவாக்கவும், சில்வர் என்ற செயலியை உருவாக்கவும் உதவும் என்று தெரிவித்துள்ளனர்.

பதினேழு பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்ட NEA உலகின் முன்னோடி முதலீட்டு நிறுவனமாகும். Salesforce .com, ஜுனிபர் நெட்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்களில் இவர்கள் முதலீடு செய்துள்ளனர். ஆனந்த் ராஜாராமன் மற்றும் வெங்கி ஹரிநாராயணன் நிறுவனர்களாக உள்ள மில்லிவே வென்ச்சர்ஸ்ஃ பேஸ்புக், ஸ்நாப்டீல் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்ததுடன் ஜன்க்லீ.காம் என்ற நிறுவனத்தையும் உருவாக்கியுள்ளனர். ஹீலியன் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் Dr ஸ்ரீகாந்த் சுந்தரராஜனும், ஹைபர்வெர்ஜ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

சிறந்த வழிகாட்டுதலை பெறவே பல்வேறு முதலீட்டாளர்களை கொண்டு வந்ததன் நோக்கம் என்கின்றனர். இந்நிறுவனத்தில் துணை நிறுவனரான கேதார் குல்கர்னி கூறுகையில் "ஒரு முதலீட்டாளரை கொண்டே நிதி திரட்டியிருக்க முடியும், எனினும் பல்வேறு துறையில் வழிகாட்டுதலை வேண்டி ஒன்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களை நாடினோம். மில்லிவே வென்ச்சர்ஸ்ஸின் ஆனந்த் மற்றும் வெங்கி வாடிக்கையாளர்கள் பற்றியும், நயா வென்ச்சர்ஸ் சரியான பணியாளர்களை நியமிப்பதிலும் எங்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள். சந்தைபடுத்துதல் பற்றி NEA எங்களுக்கு வழிகாட்டுவர்.

கேதார் குல்கர்னி , விக்னேஷ் கிருஷ்ணகுமார், கிஷோர் நடராசன், சாய்வெங்கடேஷ் அசோக்குமார் மற்றும் பிரவீன் குமார் என்ற ஐந்து நபர்கள் ஒன்றிணைந்து டிசம்பர் மாதம் 2013 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தை தொடங்கினர். ஐஐடி சென்னையில் உள்ள இன்குபேடர் பிரிவில் ஆறு லட்ச முதலீடு கொண்டு தொடங்கப்பட்டது இந்நிறுவனம்.

ஐஐடி சென்னையில் பயிலும் போதே இவர்கள் மாணவர்களுக்கான ஆராய்ச்சி மற்றும் முன்னேற்ற பிரிவில் இடம் பெற்றிருந்தனர். சர்வதேச ரோபோட்டிக்ஸ் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள இவர்கள், அப்பொழுது கணினி பார்வை மற்றும் இயந்திரம் மூலம் கற்றலுக்கான தீர்வை உருவாக்கினர்.

இன்று இவர்களின் ஹைபர்வெர்ஜ் நிறுவனம் ஆழக்கற்றுதலுக்கான பிரிவில் நான்கு காப்புரிமை நிலுவையில் உள்ள தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது. இந்த நான்கில் மூன்று அமெரிக்காவிலும் ஒன்று இந்தியாவிலும் விண்ணப்பித்து உள்ளனர். எந்த வகையான உள்ளடக்கம் (மக்கள், இடங்கள், இடைவெளிகள் மற்றும் நிகழ்வுகள்) என்று அறிந்து அதற்கேற்றாற்போல் படங்களை ஏற்பாடு செய்து கொள்ளும் தொழில்நுட்பத்தை இவர்கள் உருவாக்கியுள்ளனர். இவர்கள் விரைவில் அறிமுகப்படுத்த உள்ள சில்வர் என்ற செயலியில் இவற்றை காணலாம்.

தங்களின் நிறுவனத்தை இங்கிருந்து மாற்றி சிலிகான்வேலியில் ஜூலை மாதம் 2014 ஆம் ஆண்டு பதிவு செய்ததை பற்றி கேதார் கூறுகையில் "நாங்கள் ஜனவரி மாதத்தில் இதை தொடங்கிய பொழுது தான் இந்த தொழில்நுட்பம் பற்றி பேசத் தொடங்கினர். இந்த நுட்பத்தின் செயல்திறன் மற்றும் இது ஏற்படுத்த இருக்கும் சாத்தியங்களை பற்றி எவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்திய சந்தையை விட அமெரிக்க சந்தை இது போன்ற தொழில்நுட்பத்தை அரவணைத்து கொள்வதில் மிகுந்த முனைப்பு காட்டுவர்" என்கிறார்.

பல லட்ச பயனாளர்கள் படங்களை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு மிகப் பெரிய தளத்தை உருவாக்குவதும் அதே சமயம் தொழில்நுட்ப திறன் கொண்டு ஆழக் கற்றுதலை சாத்தியமாக்குவதே தற்போதைய சவாலாக இருக்கிறது. தற்பொழுது நிமிடத்திற்கு எழுபத்தியைந்தாயிரம் படங்களை செயலியக்கம் செய்கிறது, இதுவே ஒரு மணி நேரத்திற்கு சில லட்சங்கள் என்ற எண்ணிக்கையில் இருக்கும்.

ஆழக் கற்றல் என்பதென்ன?

ஆழக் கற்றல் என்பது ஒரு வகையான தானியாங்கி கற்றல் ஆகும். பல்வேறு கணித முறைகளை கொண்டு மனித மூளையை போல் கணினியை பல்வேறு காட்சி, நிகழ்வு, ஆவணம், முகம் அங்கீகாரம் போன்ற தரவுகளையும் போலியான காட்சிகளை கண்டறியவும் மற்றும் படத்தை மேலும் நவீனமாகவும் செய்ய முற்படுத்துவதே ஆகும்.

எதிர் கால திட்டம்

அவர்களின் பெரும்பாலான சக்தியை வாடிக்கையாளர்களுக்கான செயல் திட்டத்தை அறிமுகப்படுத்துவதிலும், அதற்கு தேவைப்படும் துல்லியமான தொழில்நுட்பத்தில் ஈடுபடுவதிலுமே இருக்கும். செயலியின் முதல் மாதிரி விரைவில் அறிமுகப்படுத்த உள்ளனர்.

இந்த வருட இறுதிக்குள் அடுத்தக் கட்ட நிதியை பெறும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இன்னும் பல முதலீட்டாளர்களின் வழிகாட்டுதலை பெறவே இந்த முயற்சி என்கின்றனர்.

அடுத்த ஆறு மாதத்திற்குள் இன்னும் பத்து நபர்களை சேர்த்து தங்களின் தொழில்நுட்ப குழுவை மேலும் விரிவாக்கும் திட்டத்திலும் உள்ளனர். சென்னையில் பன்னிரண்டு நபர்களும் அமெரிக்காவில் மூன்று நபர்களும் கொண்ட குழுவில் ஏழு நபர்கள் தொழில்நுட்ப வல்லுனர்கள்.

தொலைநோக்கு பார்வை

அறிவியல் புனைகதைகளில் வருவது போன்று முக்கிய ஆவணங்களை கண்டறியும் திறனை இந்த தொழிநுட்பம் சாத்தியமாக்கும் நாள் வெகு தூரத்திலில்லை. அணியக் கூடிய கேஜெட்டுகள் இவற்றில் ஒருங்கிணைத்து விட்டால், ஒருத்தரை பார்த்த உடனேயே அவர்களை பற்றி முழு விவரமும் பெற்று விட முடியும். செயற்கை நுண்ணறிவை நாம் நிஜத்தில் பெரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

தொழில் வளர்ச்சி

க்லாரிபை நிறுவனம் பத்து மில்லியன் டாலரும், நேர்வானா சிஸ்டம்ஸ் 20.5 மில்லியன் டாலரும், என்டிளிக் நிறுவனம் இரண்டு மில்லியன் டாலரும் நிதி திரட்டியுள்ளதை பார்க்கையில் இந்த துறை வாய்புகள் அதிகம் உள்ள துறை என்பதில் எந்த சந்தேகமுமில்லை. நிறுவன இணைப்பு மற்றும் கையகப்படுத்தும் நிலையும் இந்த துறையில் கடந்த சில வருடங்களில் பார்க்க முடிகிறது. ஜூன் மாதம் 2014 ஆண்டில் ட்விட்டர் நிறுவனம் மேட்பிட்ஸ் என்ற நிறுவனத்தை வாங்கியது.

2013 ஆம் ஆண்டு யாஹூ நிறுவனம் லுக்ப்ளோ என்ற நிறுவனத்தையும் பின்னர் IQப்ளோ என்ற நிறுவனத்தையும் வாங்கியது.

கூகுள் நிறுவனம் தனது கூகுள்பிரைன் என்ற திட்டத்திற்காக ஐந்து நிறுவனங்களை கடந்த இரண்டாண்டுகளில் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற பெரிய நிறுவனங்கள் தங்களின் வளர்ச்சிக்கு பல நிறுவனங்களை இணைத்துக் கொள்வதை பார்த்தால், ஹைபர்வெர்ஜ் நிறுவனம் இவர்களுடன் போட்டி போடுமா அல்லது பெரிய நிறுவனத்துடன் இணைந்துக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் காண வேண்டும்.

இணையதள முகவரி: HyperVerge