94 அகவையில் காலமான திருக்குவளை மு.கருணாநிதி: கண்ணீரில் உடன்பிறப்புகள்!

இந்திய அரசியலின் அரைநூற்றாண்டு வரலாற்று நாயகனான கருணாநிதி வயது மூப்பு காரணமாக காலமாகியுள்ளார். அவரது அஸ்தமனம் திமுகவினரையும் தமிழக மக்களையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. 

0

“என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புக்களே!” 

இந்த வார்த்தைகளை கேட்கும் வாய்ப்பு பெற்ற கடைசி தலைமுறை நாம் தான். தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் தொடர்புடைய கருணாநிதி, மக்கள் பணியாற்றியது போதும் ஓய்வெடுக்க என் மடியில் வந்து உறங்கு என்று பூமித்தாய் தன்வசம் அழைத்துக் கொண்டாள். சிறு வயது முதலே தீவிர போராட்ட குணம் படைத்திருந்த கருணாநிதி 94 வயதிலும் கூட தனது மரணத்தை எதிர்த்து போராடி கடைசியில் 11 நாட்கள் மருத்துவமனை சிகிச்சைக்கு அவரடைய வயது ஒத்துழைக்காமல் வயதுமூப்பு காரணமாக காலமாகியுள்ளார்.

1924ல் திருவாரூரை அடுத்த திருக்குவளையில் தட்சிணாமூர்த்தியாக பிறந்து வளர்ந்து பின்னர் கருணாநிதியாக மக்கள் பணியாற்றியவர் இன்று திசை எட்டிலும் உள்ள மக்களின் மனங்களை வென்ற மாபெரும் தலைவர் என்ற பெருமைக்குரியவர் என்பதை அவரது மரணம் உணர்த்தியுள்ளது. துள்ளிக் குதித்து விளையாடும் 14 வயது இளம் பருவத்தில் 'இந்தி ஒழிக தமிழ் வாழ்க' என்று வீர முழக்கமிட்டவர். இந்தி எதிர்ப்புப் போராட்டம், டால்மியாபுரம் பெயர் மாற்றத்தை கண்டித்து கல்லக்குடி ரயில் மறியல் போராட்டம் என்று போராட்டங்களுக்கு அஞ்சாமல் சீறி எழுந்தவர் கருணாநிதி.

சிந்தனைகளிலும், செயலிலும் மட்டுமல்ல பேச்சிலும் கர்ஜிக்கும் சிங்கம் போலவே இருந்தார் கருணாநிதி. சுயமரியாதை இயக்க முன்னோடி பட்டுக்கோட்டை அழகிரி பேச்சால் கவரப்பட்டு அரசியல் களத்திற்கு வந்தவர். தமிழ் என்னுடைய பேச்சு தமிழ் என்னுடைய மூச்சு என்று வாழ்ந்து வந்த கருணாநிதிக்கு எழுத்திலும் எண்ணிலடங்கா ஆர்வம். இன்று திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக அறியப்படும் முரசொலிக்கு முன்னோடியாக மாணவ நேசன் என்ற பத்திரிக்கையைத் தொடங்கி நடத்தியவர். 

கருணாநிதி உருவாக்கிய மாணவர் மன்றம் பிற்காலத்தில் திமுகவின் மாணவர் அணியாக செயல்பட்டது. திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று கழகங்கள் தொடங்கப்படும் முன்னரே மாணவர் கழகத்தை நிறுவிய பெருமைக்கு சொந்தக்காரர்.

திரைப்பயணம்

அண்ணாவின் திராவிட நாடு இதழில் பிரசுரமான கருணாநிதியின் கவிதை அண்ணாவின் அறிமுகத்தை பெற்றார். பெரியாரின் குடி அரசு இதழில் துணை ஆசிரியராக பணியாற்றிய போது கருணாநிதி மேடை நாடகங்களையும் எழுதி வந்தார். இதன் பலனாக திரைப்பட வாய்ப்பு கிடைக்க பெரியாரின் அனுமதியோடு வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தார். எம்ஜிஆரின் ராஜகுமாரி படத்திற்கு கருணாநிதி எழுதிய வசனம் அவரை அடையாளப்படுத்திக் காட்டியது.

படஉதவி : கூகுள் இமேஜஸ்
படஉதவி : கூகுள் இமேஜஸ்

சமூக முன்னேற்றத்தை சினிமா மூலம் புகுத்துவது பழமைவாதக் கதைகள், மூடப்பழக்க வழக்கங்களை விரட்டியடிக்கும் வகையில் இவரது படைப்புகள் அமைந்தன. பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளையும், அண்ணாவின் நாத்திகத்தையும் தனது எழுத்துகள் மூலம் திரையில் தவழவிட்டவர். திரைத்துறையில் பணியாற்றியதன் மூலம் எம்ஜிஆர், சிவாஜி, கண்ணதாசன் உள்ளிட்டோருடன் கருணாநிதிக்கு நட்பு ஏற்பட்டது. இயல், இசை, நாடகம், அரசியல்வாதி, எழுத்தாளர், இதழியலாளர் என பன்முகத் தன்மையோடு விளங்கிய கருணாநிதியின் தூக்குமேடை நாடகத்தை பார்த்து வியந்து அவரை கலைஞர் என்று பெயரிட்டு அழைத்தவர் எம்.ஆர். ராதா. பிற்காலத்தில் அதுவே கருணாநிதியின் அடைமொழியாக மாறிவிட்டது. 

1947ல் வெளியான ராஜகுமாரி தொடங்கி, 2011ல் வெளியான பொன்னர் - சங்கர் வரை சுமார் 64 வருடங்கள் திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என பல்வேறு துறைகளிலும் பணியாற்றியிருக்கிறார் கருணாநிதி.

எழுத்தாளர் கருணாநிதி

கருணாநிதி பத்து சமூக நாவல்களையும் 6 சரித்திர நாவல்களையும், 21 நாடகங்களையும் எழுதியிருக்கிறார். 1957ல் தி.மு.கவுக்குக் கிடைத்த உதயசூரியன் சின்னத்தைப் பிரபலபடுத்துவதற்காக உதயசூரியன் என்ற நாடகத்தை எழுதினார். கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ஸ்ரீ ராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான். அந்தத் தொடருக்கு அவர் எழுத ஆரம்பித்தபோது அவரது வயது 92. எழுதிவந்தபோதே அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.

மாநில அந்தஸ்து கோரியவர்

அண்ணாவை ஈர்த்ததற்கு முக்கியக் காரணம் கரகர குரலில் கருணாநிதி பேசும் அடுக்கு மொழி பேச்சு. அண்ணாவின் நிழலாக செயல்பட்டு வந்தவர் அவர் மறைவுக்குப் பிறகு 1969ல் தனது 44வது வயதில் தமிழக முதல்வராக முதன்முறை பொறுப்பேற்றார். அண்ணாவின் மறைவிற்குப் பிறகு அவரின் இதயத்தை இரவலாக பெற்றவர் என்று கட்சியினரால் கருதப்பட்ட கருணாநிதி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கருணாநிதி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட செய்தியை கேள்விப்பட்ட மத்திய அரசுக்கு ஒரு அச்சம் ஏற்பட்டது, இதற்கு முக்கியக் காரணம் கருணாநிதி டெல்லி அரசை எதிர்த்து கேள்வி கேட்பவராகத் திகழ்ந்தார். இந்தி பேசாத மாநிலங்கள் இன்று மத்திய அரசிடம் கேட்கும் தனி மாநில அந்தஸ்து கோரிக்கையை 50 ஆண்டுகளுக்கு முன்னரே முன் வைத்தவர்கள் 

கருணாநிதியும், அண்ணாவும். மாநில விஷயங்களில் மத்திய அரசின் தலையீடுகள் இல்லாமல் இருக்க மாநில அந்தஸ்து கேட்கும் நபராக விளங்கியதால் கருணாநிதி செங்கோட்டைக்கே சவால் விடும் நபராக இருந்தார்.

படஉதவி : கூகுள் இமேஜஸ்
படஉதவி : கூகுள் இமேஜஸ்

1957ம் ஆண்டு முதல் முறையாக திமுக தேர்தல் களம் கண்டது. அந்தத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு முதல் வெற்றியை உரித்தாக்கிக்கொண்டார் கருணாநிதி, அப்போது அவருக்கு வயது 33. அந்தத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 15 பேரில் கருணாநிதியும் ஒருவர். இதனைத் தொடர்ந்து 1959ம் ஆண்டில் முதன்முறையாக திமுக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டது. திமுக நிறுவனர் அண்ணா அதிக இடங்களில் போட்டியிட வேண்டாம் குறைவான இடங்களில் மட்டுமே போட்டியிடலாம் என்று கூற அதனை மறுத்த கருணாநிதி 100க்கு 90 வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறலாம் என்று ஆலோசனை கூற அதன்படியே போட்டியிட சென்னையில் 45 இடங்களில் வெற்றி பெற்று சென்னை மாநகராட்சியை கைப்பற்றியது திமுக. உள்ளாட்சி தேர்தலில் பெற்ற வெற்றிக்கு காரணமாக அமைந்த கருணாநிதிக்கு கணையாழி வழங்கி பெருமைபடுத்தினார் அண்ணா.

1961ல் திமுகவின் பொருளாலராக அண்ணாவால் கருணாநிதி நியமிக்கப்பட்டார். 1962ல் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காமராஜர் திமுக ஏற்கனவே போட்டியிட்ட 15 இடங்களிலும் தோற்கடிக்கச் செய்ய வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டார், காமராஜரின் முயற்சி 14 இடங்களில் வெற்றி கண்டது, ஆனால் கருணாநிதி போட்டியிட்ட தஞ்சையில் மட்டும் காமராஜரின் முயற்சி தோல்வி காணவே இரண்டாவது முறையாக வெற்றிக் கனியை ருசித்தார் கருணாநிதி.

45 வயதில் முதல்வரான கருணாநிதி

1967ல் நடக்க இருந்த தேர்தலுக்காக அண்ணா தேர்தல் நிதி திரட்ட ரூ.10 லட்சத்தை இலக்காக நிர்ணயிக்க தனது கடின உழைப்பால் அந்த காலத்திலேயே ரூ.11 லட்சத்தை தேர்தல் நிதியாக திரட்டித் தந்து அண்ணாவை பேரின்பம் அடையச் செய்தவர் கருணாநிதி. 

1967 தேர்தலில் 7 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்ததன் பலனாக முதன்முதலாக திமுக ஆட்சி அறியணையில் அமர்ந்தது. அண்ணா முதல்வராகவும், கருணாநிதி பொதுப்பணித்துறை, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறையின் அமைச்சராகவும் செயல்பட்டனர். 1969ல் அண்ணா மறைவுக்குப் பிறகு அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது. கட்சியின் மூத்த உறுப்பினரான நாவலர் நெடுஞ்செழியன் தான் முதல்வராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கூற பெரியார், எம்ஜிஆர் உள்ளிட்டோர் கருணாநிதிக்கு ஆதரவு தெரிவித்தனர். இறுதியில் திமுகவில் தலைவர் பதவி உருவாக்கப்பட்டு தலைவராக கருணாநிதியும் பொதுச்செயலாளராக நெடுஞ்செழியனும் பொறுப்பேற்றார்கள்.

1969ல் கருணாநிதி முதல்வரான பின்னர் நடந்த முதல் குடியரசுத் தேர்தலில் தான் முன் நிறுத்திய வேட்பாளர் கிரி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கருணாநிதியின் உதவியை நாடினார் பிரதமர் இந்திராகாந்தி. கருணாநிதியும் ஆதரவு அளித்ததால் இந்திராகாந்தி முன் நிறுத்திய வி.வி.கிரி வெற்றி பெற்றார், இந்த வெற்றியின் காரணமாக இந்திராகாந்தி, கருணாநிதியின் கூட்டணி அடுத்து நடந்த சேட்டமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிட்டது. 

அண்ணா இருந்த காலம் வரை திமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்த தந்தை பெரியார், கருணாநிதி தலைவராக இருக்கும் திமுகவிற்கு முதன்முறையாக 1971ல் ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார்.

படஉதவி : கூகுள் இமேஜஸ்
படஉதவி : கூகுள் இமேஜஸ்

வரலாற்று சிறப்புமிக்க மாற்றங்களை செய்தவர்

1971ல் முதன்முறையாக திமுக 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றது, கருணாநிதி சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு 3வது முறையாக எம்எல்ஏவானார். ஆட்சிக்கு வந்த கருணாநிதி அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயமாக்கினார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டது, தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வரதராசன் என்பவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கைரிக்ஷா ஒழிப்பு சட்டம், பிச்சைக்காரர்கள் ஒழிப்புச் சட்டம் என பாட்டாளி வர்க்கத்தினரின் மறுமலர்ச்சிக்கான திட்டங்கள் பலவற்றை கருணாநிதி அறிமுகப்படுத்தினார்.

கருணாநிதி அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் பதவி கேட்டும் கொடுக்காதது, தனது ரசிகர் மன்றங்கள் கருணாநிதி மகன் மு.க.முத்துவின் ரசிகர் மன்றங்களாக மாற்றப்படுவதால் அதிருப்தியில் இருந்த எம்ஜிஆர் திமுகவில் இருந்து பிரிந்து சென்று 1972ல் அதிமுகவை தொடங்கினார். 

கருணாநிதி அமைச்சரவையில் இடம்பெற்றவர்களிடம் கணக்கு கேட்டதால் கட்சியில் இருந்து விலக்கப்பட்டேன் என்று எம்ஜிஆர் மக்கள் மன்றங்களில் கூறியதால் கருணாநிதி மீதும் அவரது அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்கு பதியப்பட்டு இதனை விசாரிக்க சர்க்காரியா கமிஷனும் அமைக்கப்பட்டது. சர்க்காரியா கமிஷன் கருணாநிதி என்ற ஊழலும் செய்யவில்லை என்று கூற ஊழலை கண்டுபிடிக்க முடியாத வகையில் விஞ்ஞானப்பூர்வமாக கருணாநிதி ஊழல் செய்திருக்கிறார் என்று அதிமுக குற்றம் சுமத்தியது.

எமர்ஜென்சி எதிர்ப்பு

1975ல் இந்திராகாந்தி கொண்டு வந்த அவசர நிலை பிரகடனத்திற்கு திமுக கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது, 1976ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி கொண்டு வரப்பட்டது. எமர்ஜென்சி காலத்தை எதிர்த்ததால் அதன் பிறகு வந்த தேர்தலில் திமுக தோல்வி கண்டது. 1977ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எமர்ஜென்சி காலத்திற்கு ஆதரவு தெரிவித்த ஒரே மாநில கட்சியான எம்ஜிஆரின் அதிமுகவுடன் கைகோர்த்து செயல்பட்ட இந்திராகாந்தி வெற்றிபெற்றார். திமுக மிகப்பெரும் சரிவை சந்தித்தது. 

தொடர்ந்து 1977ல் அதிமுக ஆட்சியை கைப்பற்ற திமுக தோல்வியடைந்தாலும் கருணாநிதிக்கு தோல்வி என்பதே இல்லை. அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கருணாநிதி. தொடர்ந்து 10 ஆண்டுகள் எம்ஜிஆர் முதல்வராக ஆட்சி செய்தார்.

1980 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திராகாந்தி, கருணாநிதி கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்தது. திமுக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய இந்திராகாந்தி எமர்ஜென்சி காலத்தை அறிவித்ததற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இந்த கூட்டத்தில் இந்திராகாந்தியை வரவேற்று பேசிய கருணாநிதி “நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக! என்று பேசினார்.

படஉதவி : கூகுள் இமேஜஸ்
படஉதவி : கூகுள் இமேஜஸ்

இடஒதுக்கீடு அறிவித்தவர்

1984ல் எம்ஜிஆர் உடல்நலம் குன்றியதாலும், இந்திராகாந்தி மறைவாலும் அதிமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது, திமுக படுதோல்வியை சந்தித்தது. அந்தத் தேர்தலில் மட்டும் கருணாநிதி போட்டியிடவில்லை அப்போது அவர் சட்டமேலவை உறுப்பினராக இருந்ததால் போட்டியிடவில்லை. எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் 1989ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்ற போது வன்னியர், கள்ளர் உள்ளிட்ட 107 சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சேர்த்து 20 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்தார்.

ராஜூவ்காந்தி படுகொலையால் சரிவை சந்தித்த திமுக 1996ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது, பாஜகவுக்கு அளித்து வந்த ஆதரவை ஜெயலலிதா திரும்பப் பெற்றதால் பாஜகவிற்கு திமுக ஆதரவு அளித்து ஆட்சியை தக்கவைத்தது. பாஜகவுடன் திமுக கைகோர்ப்பதா என்று விமர்சனங்களும் எழுந்தன. தொடர்ந்து 2001ல் சாதிக்கட்சிகளுடனும் பாஜகவுடனும் இணைந்து தேர்தலை சந்தித்து படுதோல்வியை சந்தித்தது திமுக. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் சேர்ந்து மெகா கூட்டணி அமைத்து 40 தொகுதிகளிலும் வெற்றி கண்டார் கருணாநிதி. 2006 சட்டசபை தேர்தலில் இதே கூட்டணி நீடித்த போதும் கடைசி நேரத்தில் அதிமுகவுடன் வைகோவின் மதிமுக கைகோர்த்தது தேர்தலில் பெரும் சவாலாக அமைந்தது.

அந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றாலும் ஜெயலலிதாவால் மைனாரிட்டி திமுக அரசு என்று அழைக்கும் வகையில் 96 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்த வைகோ கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதால் 1993ல் மதிமுகவை தொடங்கினார், அதிமுகவுடன் கூட்டணி வைத்த போது 2006 தேர்தலில் மதிமுக 6 இடங்களில் மட்டுமே வெற்றி கண்டது, திமுகவிற்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனை சுட்டிக்காட்டும் விதமாக அண்ணனும் ஏமாந்தேன், தம்பியும் ஏமாந்தாய் என்று கூறினார்.

விமர்சனங்கள்

2006ல் முதலமைச்சராக இருந்த கருணாநிதி இலங்கையில் நடந்த ஈழப்போர் உச்சகட்டத்தில் எந்த உதவியையும் செய்யவில்லை, மத்திய அரசுக்கு அதற்கான போதுமான அழுத்தத்தை கொடுக்கவில்லை என்பது அவர் மீதான விமர்சனம். மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமாக இருந்த கருணாநிதிக்கு ஈழப்போரின் போது தக்க அழுத்தம் கொடுக்காதது, 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதியின் மகள் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் மீது குற்றம்சுமத்தப்பட்டவை அனைத்தும் விமர்சனங்களை எழுப்பியது.

திட்டங்கள்

பெரியார் சமத்துவபுரம் அமைத்தது, இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கியது, ரேஷன் கடைகளில் 1 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, கலைஞர் காப்பீட்டுத் திட்டம் என்று தான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டினார் கருணாநிதி. 

பெண்களுக்கு சொத்துரிமை சட்டம், விவசாயிகள் நெசவாளர்களுக்கு இலவச மின்சாரத் திட்டம், பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அரசு போக்குவரத்து கழகம் அமைப்பு, பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், சத்துணவில் வாரம் 3 நாட்கள் முட்டை, பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம், தைத் திங்களே தமிழ் புத்தாண்டு என்று சட்டம், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், உழவர் சந்தைத் திட்டம், சென்னையில் வள்ளுவர் கோட்டம், குமரியில் 133 அடியில் திருவள்ளுவர் சிலை என்று கருணாநிதி தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்திட்ட திட்டங்களும், சட்டங்களும் ஏராளம்.

திமுகவின் விடிவெள்ளி

2016ல் திமுக தேர்தலில் தோல்வியை சந்தித்த போதும் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக விளங்கி வருகிறது. 1957 முதல் 2016 வரை தான் போட்டியிட்ட தேர்தலில் ஒன்றில் கூட தோல்வியை சந்திக்காமல் 13 முறை சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர், 5 முறை முதல்வர் நாற்காலியை அலங்கரித்தவர். தமிழக சட்டசபையில் கொறடா, சட்டமன்றத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் என்றும் திமுகவில் ஆண்டுகள் தொடர்ந்து தலைவராகவும் இருந்து எம்ஜிஆர், வைகோவால் கட்சி பிளவுபட்ட போதும் துவண்டுவிடாமல் தனது இறுதிமூச்சு வரை திமுகவை வழிநடத்தியவர்.

வயது மூப்பின் காரணமாக நடை தளர்ந்து சக்கர நாற்காலியில் அமர்ந்த போதும் தனது அரசியல் மற்றும் மக்கள் பணிக்கு ஓய்வு கொடுக்காமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தவர். கடைசியாக 2016ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உடல்நிலை சரியில்லாமல் போகும் வரை தினசரி கட்சி அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்து கட்சிப் பணியை செய்து வந்தவர், அண்மையில் ஒரே ஒரு முறை அண்ணா அறிவாலயம் வந்தார்.

60 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத மாபெரும் தலைவர்களில் ஒருவர் கருணாநிதி. தினசரி பத்திரிக்கைகளை படித்துவிட்டு துறை சார்ந்த குறைகளை குறிப்பெடுத்து அதனை நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு ஆணையிடுவார். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஜாம்பவான்களின் கேள்விகளுக்கெல்லாம் அசராமல் ஒற்றை வார்த்தையை பதிலாக்கிவிட்டு அதன் அர்த்தம் என்ன என்பதை அவர்களே புரிந்து கொள்ளட்டும் என்று சாதுர்யமாக பதில் அளிப்பவர்.

படஉதவி : கூகுள் இமேஜஸ்
படஉதவி : கூகுள் இமேஜஸ்

அரசியல் தலைவர்கள் தாங்கள் என்ன பேசுவது என்பதை எழுதிக் கொடுப்பதற்காகவே தனியாக ஆட்களை வைத்திருக்கும் காலகட்டத்தில் தனது அரசியல் வாழ்வில் தனது மேடைப்பேச்சுகள் அனைத்தையும் அவரே தயார்படுத்தியவர். தன் மூளையே தனக்கு டைரி என்பார் கருணாநிதி. அந்தளவுக்கு ஞாபக சக்தி கொண்டவர் அவர். நகைச்சுவையான அதே சமயம் சிந்திப்பவையாக இருக்கும் கருணாநிதியின் பேச்சு கடைசி வரை மக்களை கட்டிப்போட்டே வைத்திருந்தது. 

பேச்சையும் எழுத்தையும் முழு மூச்சாகக் கொண்டிருந்த கருணாநிதியின் பேனா இன்று ஓய்வு எடுத்துக் கொண்டது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்த தமிழ்மகன் கருணாநிதி தமிழ் அன்னையின் மடியில் துயில் கொள்ள சென்றுவிட்டார்.