இட்லி, சட்னியில் இத்தனை வகைகளா? வீட்டு ருசியில் டிபன் வகைகளை வழங்கும் idlies.in 

இளம் வயது முதலே சமையல் மீதான காதல், idlies.in என்ற வணிகமாக உருவெடுத்த கதை! 

11

தான் என்னவாக வேண்டும் என்று நம் எல்லோரையும் போல் சிறு வயதில் பல கனவு கொண்டதாக கூறும் உமேஷுக்கு, அதில் செஃப் கனவும் பிரதானமாக இருந்திருக்கிறது. உணவின் மீதான காதலால் கனவை மெய்ப்படுத்தி www.idlies.in என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார் விளம்பரத்துறையில் இருந்து தொழில்முனைவுப் பயணம் தொடங்கியுள்ள உமேஷ்.

"வாழ்கையை அதன் ஒட்டத்திலேயே பயணிக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக நம்புகிறேன்,"

என்கிறார் இருபத்தேழு வயது முதல் தலைமுறை தொழில்முனைவரான உமேஷ்.

துவக்கம்

சமூக நலப் பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றபின், அத்துறையையில் வேலை வாய்புகள் வந்தாலும், விளம்பரத் துறையில் தனது பணியை தொடங்கினார். "பல சவால்கள் நிறைந்தது இத்துறை என்பதால் இதில் பணியாற்ற விரும்பினேன்" என்று கூறும் உமேஷ் சுய தொழில் செய்யும் ஆர்வம் தன்னுள் இருந்து கொண்டே இருந்ததாக கூறுகிறார்.

"சுயதொழில் தொடங்க வேண்டும் என்றதும் சத்தான துரித உணவு அளிக்கும் நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியது,"

என்று கூறும் உமேஷ் மற்றும் அவர் மனைவியின் முதல் தேர்வாக பொடி இட்லி வகைகளே இருந்தது என்கிறார். தன் தாயார் மற்றும் மனைவியின் உதவியோடு பகுதி நேரமாக மெட்ராஸ் காபி வொர்க்ஸ் மூலமாக பொடி இட்லி வகைகளை விற்கத் துவங்கினர்.

"துவங்கியது முதல் இந்த பதினைந்து மாதங்களில் எங்களுக்கு கிடைத்த அமோக வரவேற்பு, இதில் முழு கவனம் செலுத்த என்னை உந்தியது. உணவின் மீதான ஆர்வம் அதுவும் நம் பாரம்பரிய உணவில் புதுமை புகுத்தி வழங்கிடவேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்பட வைத்துள்ளது," என்கிறார்.
உமேஷ் தன் குழுவுடன்
உமேஷ் தன் குழுவுடன்

வளர்ச்சி

மிகவும் சிறிய அளவில், பொடி இட்லி வகைகளை வீட்டிலேயே தொடங்கி இயங்கி வந்த இவர்கள், தொட்டுக் கொள்ள வகை வகையான சைட் டிஷ்களையும் அறி்முகப்படுத்தினர்.

"மீல் பாக்ஸ் காம்போ மூலம் பொடி மற்றும் கொழம்பு வகைகளை தேர்ந்தெடுக்கும் முறையை அறிமுகப்படுத்தினோம். இதன் தொடர்சியாக மண் சட்டியில் தயிர் சாதம் என்று மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு வகையாவது புதிதாக அறிமுகப்படுத்தி வருகிறோம்." 

இவர்களின் சமையல் வகைகள் நிச்சயம் நாவில் நீரூற்றுவதாகவே உள்ளது. பூண்டு கொழம்புடன் பொடிசா, வெண் பொங்கலுக்கு புளி இஞ்சி, சேப்பக்கழங்கு வறுவல், தயிர் பொடி இட்லி, மோர் களி, பானகம் என்று இந்த வரிசையில் லேட்டஸ்டாக முரசு இலையில் நெய் பொடி இட்லி வகையும் சேர்ந்திருக்கிறது.

உதவிக்கு ஒரு பெண்மணி கொண்டு துவங்கிய idlies.in தற்போது ஒன்பது மகளிருடன் செயல்படுகிறது.

"தரம் மற்றும் வீட்டுச் சாப்பாடு போன்றே இருத்தல் வேண்டும் என்பதால் பெண்களை சமையலில் அமர்த்தியுள்ளோம். ஆர்டருக்கு ஏற்ப சமைப்பதால் எங்கள் தயாரிப்புகள் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கும்." 

வருங்காலத் திட்டம்

ஓடும் குதிரையின் மீது பந்தயம் கட்டுவது இயல்பு தானே! சுமார் இரண்டு லட்ச முதலீட்டில் தொடங்கிய இந்நிறுவனத்தில் முதலீடு செய்ய சில நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக தெரிகிறது.

"ஆம்! மூன்று நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடந்துக் கொண்டிருக்கிறது. வாய்ப்புகள் அமையுமாயின் நாங்கள் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தயாராகவே உள்ளோம், என்றார்.

தற்போது ஸ்விக்கி, சொமாட்டோ ஆகிய உணவு விநியோக நிறுவனங்கள் மூலமாகவும் இட்லிஸ்.இன் தயாரிப்புகளை பெற முடியும்.

"இணையதளம், செயலி, குறுந்தகவல், வாட்ஸப் என்று எந்த வழியிலும் ஆர்டர் செய்யலாம். சுவைக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தால், எந்த தடையுமின்றி எந்தவொரு சானல் மூலமாகவும் ஆர்டர் செய்யும் வசதி இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் கொள்கிறோம். என்னையும் சேர்த்து ஐந்து பேர் டெலிவரி செய்கிறோம்" என்கிறார் உமேஷ்.

தற்போது சென்னையில் ஆறு கிலோமீட்டர் சுற்றளவில் டெலிவரி செய்யும் இவர்கள், மேலும் பல இடங்களுக்கு விரிவு செய்யும் முயற்சியில் உள்ளனர்.

அடிப்படை சரியானதாக இருத்தல்; தரமான உணவு வழங்குவதில் கவனம்- இவை இரண்டும் மனதில் கொண்டால் வளர்ச்சி என்பது சாத்தியமே என்று கூறும் உமேஷ், அவரின் நட்பு வட்டாரத்தின் உந்துதல் தனக்கான மிகப் பெரிய பலம் என்கிறார்.

கடந்த ஆண்டில் ஆன்லைன் உணவு வர்த்தகத்தில் அதிக முதலீடு இல்லாத சூழலிலும், ஆன்லைன் ஆர்டர் சதவீகத்தில் இந்த துறை வளர்ச்சியே கண்டுள்ளது. நேரமின்மை, புதிதாக உணவு வகைகளை சுவைக்கும் ஆர்வம், எளிதாக ஆர்டர் செய்யக்கூடிய வசதி ஆகியவை இத்துறையின் வளர்ச்சிக்கு வித்திடும் என்றாலும், செயல்திறன் மற்றும் லாபம் ஈட்டக்கூடிய திறன் ஆகியவையே இத்துறையின் நிலையான வணிக வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.