அபார ஆட்டத்தால் கிரிக்கெட் ரசிகர்களை கட்டிப்போட்ட இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி!

171 ரன்கள் குவித்த ஆட்ட நாயகி ஹர்மன்பரீத் கவுர்

0

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு தகுதிப்பெற்றது.

ஆறு முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி சுற்றில் இங்கிலாந்தை சந்திக்க உள்ளது இந்தியா. டாசை வென்ற இந்திய அணி கேப்டன் மித்தாலி ராஜ், முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.

முதலில் பேட் செய்த இந்திய அணி ரன்களை குவித்தது. முதலில் களம் இறங்கிய மந்தனா மற்றும் பூனம் 6, 14 ரன்களில் வெளியேறினர். அதன் பின் வந்த கேப்டன் மித்தாலி ராஜும், துணை கேப்டன் ஹர்மன்பிரீத்தும் இந்தியாவை சரிவில் இருந்து மீட்டனர். 36 ரன்கள் குவித்த மித்தாலி, பீம்சின் பந்து வீச்சில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.

அதன் பின் ஹர்மன்பிரீத்துடன் ஜோடி சேர்ந்தார் தீப்தி ஷர்மா. முதலில் நிதானமாய் ஆடிய ஹர்மன்பிரீத், சிறிது நேரத்தில் அதிரடியாய் விளையாடினார். பல பவுண்டரிகளை அடித்து மளமளவென ரன்களை குவித்தார். பந்துகளை விளாசி 98 ரன்களை எட்டிய ஹர்மன்பிரீத், சதத்துக்கான ரன்னை எடுக்க ஓடிய பொது, எதிர் முனையில் இருந்த தீப்தி ஷர்மா தயக்கம் காட்டி, நேரம் எடுத்தே ஓட முனைந்தார். இதனால் ஹர்மன்பிரீத் பாய்ந்து விழுந்து ரன் அவுட்டில் இருந்து தப்பித்தே சதத்தை எட்டினார். சதம் மகிழ்ச்சியை வெளிபடுத்தாமல், கோபத்துடன் ஹெல்மட்டை எறிந்தார் ஹர்மன்பிரீத்.

நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவரில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது. அடுத்து 282 ரன்னை எதிர் நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலியா சில்லறை ரன்கள் எடுத்து வரிசையாக வெளியேறினர். அதன் பின் விலானி 75 ரன்கள் எடுத்து அணியின் ரன்களை உயற்றினார். ஒரு பக்கம் விக்கெட் விழுந்துகொண்டே இருந்தாலும் பிளாக்வெல் இந்திய பந்து வீச்சாளருக்கு சவாலாக நின்று கொண்டு இருந்தார். ஆனால் தீப்தி ஷர்மா இதற்கு முற்று புள்ளி வைத்தார், 90 ரன் எடுத்த பிளாக்வெல் கிளீன் போல்ட் செய்து வெளியேற்றினார்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 40.1 ஓவர்களில் 245 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது இந்தியா. நாளை மறுதினம் லண்டனில் நடக்கவிருக்கும் இறுதி சுற்றில் இங்கிலாந்தை சந்திக்க உள்ளது இந்தியா.

ஹர்மன்பரீத் கவுர் சாதனை

ஹர்மன்ப்ரீத் கவுர், பட உதவி: Ndtv sports
ஹர்மன்ப்ரீத் கவுர், பட உதவி: Ndtv sports

பஞ்சாபை சேர்ந்த ஹர்மன்பரீத் நேற்றைய ஆட்டத்தின் கதாநாயகி, 20 பவுண்டரி, 7 சிக்ஸர் அடித்து 171 ரன்கள் குவித்து கிரிக்கெட் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளார். பெண்கள் ஒரு நாள் போட்டியில் இந்திய வீராங்கனையின் 2-வது அதிகபட்ச ரன்கள் இதுவாகும். அதேசமயம், உலக பெண்கள் ஒருநாள் போட்டியில் 4 -வது அதிகப்பட்ச ஸ்கோர் இதுவாகும்.

ஹர்மன்பரீத் கவுருக்கு பல கிரிக்கெட் வீரர்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Related Stories

Stories by YS TEAM TAMIL